வெள்ளி, 9 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு: தமிழகம் முழுவதும் 12ம் தேதி உண்ணாவிரதம்-15ம் தேதி மனித சங்கிலி - திமுக முடிவு

சென்னை: முல்லைப் பெரியாறு அணைவிவகாரம் தொடர்பாக வருகிற 12ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்றும், 15ம் தேதி மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துவது என்றும் திமுக முடிவு செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி விவாதிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
கருணாநிதி தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில் கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
12ம் தேதி உண்ணாவிரதம்
இன்றைய கூட்டத்தில் 2 முக்கியப் போராட்டங்களை திமுக அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறும்.
15ம் தேதி மனித சங்கிலி
இதேபோல டிசம்பர் 15ம் தேதியன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்டங்களில் பிரமாண்டமான அளவில் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துவது என்றும் திமுக தீர்மானித்துள்ளது.
இந்த மனித சங்கிலிப் போராட்டமானது மாலை 3 மணி முதல் 5 மணி வரை 2 மணி நேரம் நடைபெறும்.
மதுரையில் அன்பழகன் - தேனியில் மு.க.ஸ்டாலின்
மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மதுரையில் முன்னாள் அமைச்சர் க.அன்பழகன், தேனியில் முன்னாள் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்குவார்கள். அதேபோல திண்டுக்கல்லில் துரைமுருகன், சிவகங்கையில் சற்குணபாண்டியன், ராமநாதபுரத்தில் வி.பி.துரைசாமி ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக