வியாழன், 17 நவம்பர், 2011

பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி!


TN Govt Bus

சென்னை: தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
சென்னை நகர பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாக உயர்த்தபட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 32 பைசாவிலிருந்து 56 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் சூப்பர் டீலக்ஸ் சொகுசு பேருந்துகள் மற்றும் சூப்பர் டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 52 பைசாவிலிருந்து 70 பைசவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல பிற மாவட்டங்களிலும் குறைந்தபட்ச, அதிகபட்ச பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னை நீங்கலாக, தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது. அதிகபட்ச பேருந்து கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ள நிலையில் இந்த பேருந்துக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின் ஜெயா டிவியில் உரையாற்றிய அவர் கூறியதாவது:
எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய திமுக அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.
போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு மக்களின் சிரமத்தை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. 2001ம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது.
இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன.
இதன் காரணமாக, 31 மார்ச் நிலவரப்படி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் ரூ.6,150 கோடி அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.60 கோடி நிதி உதவி அளித்து வருகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
டீசல், உதிரிப் பாகங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக் கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணம் கூட தென் மாநிலங்களில் உள்ள பேருந்துக் கட்டணங்களை விட குறைவானதே ஆகும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக