சனி, 26 நவம்பர், 2011

Kerala Tamilnadu பீதி ஏற்படும் வகையில் பிரசாரம் செய்ய கூடாது

புதுடெல்லி : ‘‘தமிழக & கேரள மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம்’’ என்று கேரள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவிடம் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்தார். முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறிவரும் கேரள அரசு, அதற்கு பதிலாக புதிய அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக தமிழகம் & கேரள மாநிலங்களுக்கு இடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க் கள் குழு நேற்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது.
பிரதமரிடம் அளித்த மனுவில், ‘முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்தை ஏற்கும்படி தமிழக அரசை பிரதமர் வலியுறுத்த வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக பேசித் தீர்க்க இரு மாநில முதல்வர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கேரள மக்களை காப்பாற்றவே புதிய அணை கட்ட கேரளா முயற்சிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமரை சந்தித்த பிறகு கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்பி.யுமான பி.சி.சாக்கோ அளித்த பேட்டியில் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையை கட்டி 116 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதன் பாதுகாப்பு பற்றி பிரதமரிடம் கேரள எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். இந்த பிரச்னை தொடர்பாக பேச இருமாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்டும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு பதில் அளித்த பிரதமர், தமிழகத்தில் மலையாள மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

அதேபோல், கேரளாவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். எனவே, இருமாநிலத்துக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த வகையான பிரசாரத்திலும் இருதரப்பும் ஈடுபடக் கூடாது என்று அறிவுரை கூறினார். எங்களுடைய கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது, முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற காட்சிகள் கொண்ட ‘டேம் 999’ திரைப்படம் உட்பட, தமிழகத்துக்கு எதிராக எந்தவிதமான பிரசாரத்திலும் கேரளா ஈடுபடவில்லை என்று பிரதமரிடம் எம்.பி.க்கள் விளக்கினர். இவ்வாறு சாக்கோ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக