புதன், 23 நவம்பர், 2011

Broker Su.Swamy:2ஜி ஊழல்: ராசா, சிதம்பரம் கூட்டாக செயல்பட்டனர்- சு.சாமி

சென்னை: முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும், அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் சேர்ந்து தான் 2ஜி அலைக்கற்றை விலையை நிர்ணயித்தார்கள் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. துவங்கிய முதல் நாளே உபி விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் ப.சிதம்பரத்தை பேச விடுவதில்லை என்றும், 2ஜி விவகாரத்திற்குப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்யும் வரையிலும் அவரைப் புறக்கணிப்பது என்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும், அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் சேர்ந்து தான் 2ஜி அலைக்கற்றை விலையை நிர்ணயித்தார்கள் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சாமி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
2ஜி அலைக்கற்றை விலை நிர்ணயத்தில் ப. சிதம்பரத்திற்கு பங்கு இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.


2ஜி அலைக்கற்றை விலையை முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மட்டும் நிர்ணயிக்கவில்லை. அவரும், அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் சேர்ந்து தான் நிர்ணயித்துள்ளார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி தான் கடந்த 2001ம் ஆண்டு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

29-5-2008 மற்றும் 12-6-2008 ஆகிய இரண்டு நாட்கள் ப. சிதம்பரமும், ஆ.ராசாவும் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை விலை நிர்ணயம், ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மத்திய நிதித்துறை செயலாளர் இது குறித்து பிரதமருக்கு அப்போது எழுதிய கடிதத்தில் நான் கூறுவதற்கான ஆதாரம் உள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்புகிறது. அதற்கு நாங்கள் முழு ஆதரவு தெரிவிக்கிறோம்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கிய விவகாரத்தில் ஆ. ராசா செய்த தவறைத் தான் ப. சிதம்பரமும் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது 3 குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை என்னவென்றால், ராசாவுடன் சேர்ந்து சதி செய்து 2001ம் ஆண்டின் விலைக்கே 2ஜி அலைக்கற்றை உரிமத்தை விற்க முயற்சி செய்தது. உரிமம் பெற்ற நிறுவனங்கள் அந்த உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு விற்க முடியாது என்பதால் அந்த நிறுவனத்தையே 8 மடங்கு அதிக விலைக்கு விற்றது. சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சராக இருந்தபோது டெலினார், எடுசுலாட் ஆகிய 2 நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கக் கூடாது என்று கூறியிருந்தும் அந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கியது.

ப.சிதம்பரம் மீதான இந்த 3 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி நடக்கவிருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கிய விவகாரத்தில் ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று நான் வாதாடுவேன்.
தமிழகத்தின் மின் தேவைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் அவசியமானது. அங்கு மட்டும் மின் உற்பத்தி துவங்கியிருந்தால் இந்நேரம் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும். மேலும் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும். இந்த அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டால் தமிழகத்தின் மின் தேவை பூர்த்தியாகிவிடும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பிரச்சனை தேவையில்லாத ஒன்று. அதன் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது என்றார்.
சமீபத்தில் 2ஜி விவகாரம் தொடர்பாக சாமி கேட்டிருந்த ஆவணங்களை சிபிஐ அவரிடம் ஒப்படைத்தது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக