ஞாயிறு, 20 நவம்பர், 2011

தலைவாசல் விஜய்'க்கு கேரளா தந்த கவுரவம்!

திறமையான நடிகர் எனப் பெயரெடுத்திருந்தாலும், தனக்கான வாய்ப்புகள் அமையவில்லையே என்ற ஏக்கம் தலைவாசல் விஜய்க்கு.
அவரது இந்த ஏக்கத்தைப் போக்கியுள்ளது மலையாளத் திரையுலகம்.
'யுகபுருஷன்' என்ற படத்தில் ஸ்ரீநாராயண குரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'தலைவாசல்' விஜய்க்கு கேரள அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த தலைவாசல் விஜய், இதுகுறித்து கூறுகையில், "ஒரு கலைஞனுக்குப் பெரிய கௌரவமே பாராட்டுதான். அது ஸ்ரீநாராயண குரு பாத்திரத்தில் நடித்ததற்காகக் கிடைத்துள்ளது. பெரிய சம்பளம் பெற்றால் கூட கிடைக்காத மகிழ்ச்சியை நான் உணர்கிறேன்.
ஸ்ரீநாராயண குருவை கேரளாவின் பெரியார் என்று சொல்லலாம். ஜாதி- மத ஏற்றதாழ்வுகளுக்கு எதிராகப் போராடிய போராளி அவர்.
ஒருமுறை காந்தி குருவைச் சந்தித்தபோது, 'குருவே! நீங்கள் அமர்ந்திருக்கிற இந்த மாந்தோப்பில் எத்தனையோ மாமரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மர இலையும் வெளிர் பச்சை, அடர் பச்சை என்று மாற்றங்களோடு உள்ளதே? சமுதாயத்திலும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தானே செய்யும்?' என்று கேட்டாராம்.
அதற்கு குரு, 'நிறத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் எல்லா மரத்தின் இலைகளையும் பிழிந்து சுவைத்தால் சுவை ஒன்றாகத்தான் இருக்கும்' என்றாராம். அதோடு மகாத்மா விவாதத்தை நிறுத்திக் கொண்டாராம்.

அப்படிப்பட்ட ஒரு புரட்சிகரமான குருவின் கதாபாத்திரத்துக்கு என்னை சிபாரிசு செய்தவர்கள் மம்முட்டியும் மோகன்லாலும் என்று தெரிந்தபோது ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ் கலைஞர்களையும் டெக்னீஷியன்களையும் மலையாளப் படஉலகினர் ரொம்பவும் மதிக்கிறார்கள். ஸ்ரீநாராயண குரு அருளால் இப்போது பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் பட வாய்ப்புகள் வந்துள்ளன!'' என்கிறார் சந்தோஷத்துடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக