வெள்ளி, 11 நவம்பர், 2011

அவர்களை இந்த வழக்கில் சாட்சிகளாகக் கூட விசாரிக்க சி.பி.ஐ. தயாராக இல் லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லாபம் அடைந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, கனிமொழியை மட்டும் ஆறு மாதங்கள் சிறையில் வைத்திருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதேசமயம், ‘கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வருவதில் அரசியல் பின்னணி ஏதும் இருக்குமா?’ என்றும் தி.மு.க. தரப்பில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
சரத்குமாரும், கனிமொழியும் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பிறகு, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. இது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அதற்கு அடுத்து, ஜாமீன் மனு விசாரணையின் போது, கனிமொழியின் ஜாமீனுக்கு சி.பி.ஐ.யும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனால், நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும் என்று நம்பிய தி.மு.க. தலைமை, தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு அனுப்பியது.
ஆனால், இந்த வாதங்கள் எதையும், சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி ஏற்கவில்லை. கனிமொழியின் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. எதிர்ப்புத் தெரிவிக்காதது, சட்ட ரீதியாக எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டினார் நீதிபதி.

சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்காத போதும், கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது தி.மு.க. தரப்பைப் படுத்தி எடுத்துவிட்டது. கனிமொழியைச் சுற்றியே இந்த வழக்கு வலம் வரக் காரணம் என்ன? ஏதேனும் அரசியல் சூழ்ச்சிகள் பின்னணியில் இருக்கிறதா? என்ற கேள்விகளுடன் தி.மு.க. வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘இந்திய நீதித்துறை மரபுகளின்படி மோசமான சூழ்நிலைகள் இருந்தாலே ஒழிய, குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்வதே சரி. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, ஒருவர் நிரபராதியே என்ற இந்திய நீதித்துறையின் அடித்தளமான விதியின்படியே, இப்படி ஜாமீன் வழங்கப்படுகிறது.

கனிமொழி உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்ற அச்சம் இருந்தால், கடுமையான நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியிருக்கலாம். வழக்கு விசாரணை முடியும் வரை, சிறையிலேயே இருக்க வேண்டும் என்பது இயற்கை நீதிக்கு முரணானது.

மேலும் ‘சத்யம்’ நிறுவனர் ராமலிங்க ராஜு 2009 ஜனவரி 9-ம் தேதி தன்னுடைய நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பொய்யாக எழுதி, லாபம் இருப்பது போல கணக்குக் காட்டி பங்குச் சந்தையில் மோசடி செய்திருப்பதாக ஒப்புக் கொண்டார்.

சட்டபூர்வமான நடவடிக்கைக்குத் தயார் என்று அனைத்து பங்குச் சந்தைகளுக்கும் கடிதம் எழுதினார். இப்படி ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும், நியாயமான விசாரணையை நடத்தினால், சத்யம் ஊழலில், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பங்கு வெளிவந்துவிடும் என்ற காரணத் துக்காக, விசாரணையை நியாயமாக நடத்தாமல், ராமலிங்க ராஜுவை சிறையிலேயே முடக்கினர்.

ஏறக்குறைய 3 வருடங்கள் ஆன பிறகும், சி.பி.ஐ. தனது விசாரணையை முடிக்காத காரணத்தால், உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகள் பலர் இன்னும் வெளியே இருக்கிறார்கள். அவர்களை இந்த வழக்கில் சாட்சிகளாகக் கூட விசாரிக்க சி.பி.ஐ. தயாராக இல் லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஜப்பானிய நிறுவனமான டோகோமோவிற்கு டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்று கொள்ளை லாபம் பார்த்தவர் ரத் தன் டாடா. அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று நற்சான்றிதழ் அளித்துள்ளது சி.பி.ஐ.

2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே 2008-ம் ஆண்டும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யலாம் என்பது அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், ஆ. ராசாவும் சேர்ந்து எடுத்த முடிவு. இந்த முடிவை முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரிவித்து பின்னரே ராசா முடிவை இறுதி செய்தார். ஆனால், மன்மோகன் சிங்கோ, சிதம்பரமோ சாட்சிகளாகக் கூட விசாரிக்கப்படவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லாபம் அடைந்த லூப் டெலிகாம், வீடியோகான், ஷ்யாம் சிஸ்டெமா நிறுவனங்கள் மீதும் விசாரணை செய்ய சி.பி.ஐ. தயாராக இல்லை. இந்த நிலையில், கனிமொழி உள்ளிட்டோரை ஆறு மாதங்களாக சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?

இதைப் போலவே, கனிமொழி உள்ளிட்டோர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸின் பங்கு வெளி வந்துவிடும் என்பதற்காகவே, கனிமொழியை நிரந்தரமாக சிறையிலேயே அடைத்து வைக்க காங்கிரஸ் ஆடும் நாடகம் இது’’ என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த தி.மு.க. வழக்கறிஞர்.

சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் கனிமொழி. இந்த விவகாரத்தில் கனிமொழியைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே யாராலும் யூகிக்க முடியாத நிலையே இருக்கிறது. இதற்கு விடை கிடைத்தால்தான் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே தி.மு.க. தரப்பின் தற்போதைய நிலை.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் செய்வதில் தனது கட்சியினரே ஈடுபடுகிறார்களோ என்ற எண்ணமும் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். டெல்லியில் உள்ள தி.மு.க. முன்னணித் தலைவர்கள் பலர் இன்னும் ஆசை வார்த்தை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

கனிமொழிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று கருணாநிதியை நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்கள் சில வழக்கறிஞர்கள். கருணாநிதியையே ஏமாற்றியவர்கள் கனிமொழிக்கும், அவரையே நினைத்து வாடும் மகன் ஆதித்யாவுக்கும் என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?

சட்டப்பிரச்னை எல்லாம் கனிமொழியின் மகன் ஆதித்யாவுக்குத் தேவையில்லாதது. அவனுக்குத் தெரிந்தது எல்லாம் தாய்ப்பாசம் தான். பத்து மாதம் சுமந்த தாயைப் பார்க்க ஆறு மாதம் காத்திருக்கிறான் ஆதித்யா. யாரும் ஆறுதல் சொல்ல வேண்டாம்... ஆசை வார்த்தை காட்டாமல் இருக்கலாமே?

அருணாச்சலம்
thanks kumudam+chandran NH

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக