ஞாயிறு, 27 நவம்பர், 2011

சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு: சீன பொருட்களை தான் விற்பார்கள்-ராமதாஸ்


Ramadossசென்னை: இந்தியாவில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்கள் மற்றும் சில்லறை வணிகர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாத மத்திய அரசு பல தரப்பெயர் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதில் 51 விழுக்காடு நேரடி அந்திய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

ஒற்றை தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத் துறையில் நேரடியாக அந்திய முதலீட்டிற்கான உச்சவரம்பையும் 100 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் அம்பானிகளும், ஆதித்ய பிர்லாக்களும் சில்லறை வணிகத்துறையில் நுழைய அனுமதிக்கப்பட்டால் நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் அரசியல் கட்சிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை புறக்கணித்துவிட்டு பல தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கதவைத் திறந்து விட்டிருக்கிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்கும் சில்லறை வணிகச் சந்தை வால்மார்ட், டெஸ்கோ, கேர்போர் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை வணிகத்தையே நம்பியிருக்கும் சுமார் 5 கோடி சிறு வணிகர்கள் மற்றும் அவர்களை சார்ந்த சுமார் 25 கோடி பேரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருக்கிறது.

சுறாக்களின் பசியைத் தீர்க்க சிறு மீன்களை உணவாக்குவதைப் போல பன்னாட்டு பெரு நிறுவனங்களின் பணத்தாசை என்ற பசியை தீர்ப்பதற்காக சிறு வணிகர்களின் நலனை உணவாக்கும் மத்திய அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சிறு வணிகர்கள் மற்றும் உற்பத்தி துறையினரின் நலனை பாதுகாப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களில் 30 விழுக்காட்டை சிறுதொழில் துறையினரிடமிருந்துதான் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த நிபந்தனையை எந்த பன்னாட்டு நிறுவனங்களும் மதிக்கப் போவதில்லை.
மாறாக சீன சந்தையிலிருந்து குறைந்த விலையில் பொருட்களை வாங்கி வந்து அதிக விலையில் விற்பனை செய்யும் தந்திரத்தைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் பின்பற்றும்.

இதனால் இந்தியாவின் சிறு வணிகர்கள் மட்டுமின்றி சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கும். கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் இந்திய அரசு முடங்கிக் கிடக்கிறது என்று உலக அரங்கில் ஏற்பட்டுள்ள தோற்றத்தை போக்கி, எங்களாலும், துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியும் என்று காட்டுவதற்காக இப்படியொரு கொடுமையான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

சிறு வணிகர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக திருப்பப் பெறவேண்டும். இல்லாவிட்டால் சிறு வணிகர்களின் நலனைக் காக்க மத்திய அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்த பாமக என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக