வெள்ளி, 25 நவம்பர், 2011

பவார் மீது தாக்குதல்: டெல்லியிலேயே சட்டம்- ஒழுங்கு குலைந்துள்ளது நல்லதல்ல- கருணாநிதி

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கணடனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சருமான நண்பர் சரத்பவார் டெல்லியில் நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, திரும்பும்போது செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மத்திய அமைச்சர் ஒருவரையே இவ்வாறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தாக்குகின்ற அளவிற்கு சட்டம்-ஒழுங்கு தலைநகரிலேயே குலைந்திருப்பது நல்லதல்ல.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, இனியாவது அப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கண்டனம்:

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவாரை ஹர்விந்தர் சிங் என்னும் வாலிபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அரசியல் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று லோக்சபாவில் சரத் பவார் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு மத்திய அமைச்சர், அதுவும் பாதுகாவலர்களுடன் வந்தபோதே ஒரு சாதாரண நபர் அவரை தாக்கியுள்ளார் என்று அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட விஐபிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

சரத் பவார் மீதான தாக்குதலுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய ஜனதாதள தலைவர் ஷரத் யாதவ் உள்ளட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பவார் மீதான தாக்குதலுக்கு சிவசேனா கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக