ஞாயிறு, 6 நவம்பர், 2011

சமச்சீர் கல்வியில் தீர்ப்பு அண்ணா நூலகத்திற்குப் பொருந்தும்!

சென்னை, நவ.6- சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வரிகள் அண்ணா நூலகத்தை இடமாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கும் பொருந்தும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதாமன்றத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதா? என்ற தலைப்பில் (நேற்று 5.11.2011) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
அ.தி.மு.க.வின் சட்ட விரோத நடவடிக்கை
ஆட்சி என்பது ஒரு தொடர்ச்சி, குறிப்பாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை   குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இந்தத் தடை நீடிக்கும் என்பது மட்டுமல்ல. அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றம் சென்றால்கூட ஏற்கெனவே உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியில் கொடுத்த தீர்ப்பின்படி இந்திய அரசியல் சட்ட விதிகளின்படி நூலக இடமாற்ற அறிவிப்பு நடவடிக்கை சட்ட விரோதமான நடவடிக்கை நியாய விரோதமான நடவடிக்கை என்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் ஒரு பகுதியை நான் சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
குளவிக் கூட்டில் கை வைத்திருக்கிறீர்கள்
நீங்கள் குளவிக் கூட்டில் கை வைத்திருக்கிறீர்கள் என்று நாங்கள் சொல்லுவதற்குக் காரணம் - ஏதோ உவமை அழகுக்காக அல்ல. சட்டரீதியாகவே இருக்கின்ற பிரச்சினை என்ன? சமச்சீர் கல்வியில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு பலவற்றை கட்டுப்படுத்தக் கூடிய தீர்ப்பு.
முடிவை கைவிட வேண்டும்
முன்பாகம் - பின்பாகம் போல இந்த தீர்ப்பை பார்க்க வேண்டும். அதிமுக அரசு எடுத்த முடிவை கைவிட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு நல்ல தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றோம். இதிலே தன்முனைப்பு காட்ட வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. அப்படி காட்டினால் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக் காட்டுகின்ற கடமை எங்களுக்கு உண்டு.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
சமச்சீர் கல்வியில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு  நூலக இடமாற்ற முடிவுக்கும் பொருந்தும்.
அறிவார்ந்த இந்த அவையினருக்கு மட்டுமல்ல ஆட்சியாளர்களின் காதுகள் இங்கே இருக்கின்றன. ஆகவே அதற்கும் சேர்த்தே நாங்கள் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஒரு ஆட்சி ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது. அடுத்து இன்னொரு ஆட்சி வருகிறபொழுது செய்த திட்டத்தை தலைகீழாக மாற்றுவதற்கு உரிமை உண்டா?
நாங்கள் ஆட்சியைப் பிடித்து விட்டோம் அமைச் சரவையில் முடிவெடுத்து விட்டோம் என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டா என்று சொன்னால் சட்டப்படி இல்லை. அரசியல் சட்டப்படி இல்லை.
இதை அரசியல் சட்டம் மட்டும் சொல்லவில்லை. உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி சுட்டிக்காட்டியிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் இரண்டொரு பகுதியை நான் சட்டரீதியாக சுட்டிக்காட்டுகின்றேன். ஏனென்றால் மற்ற செய்திகளை தோழர்கள் உங்களுக்குச் சொல்லி யிருக்கின்றார்கள்.
சமச்சீர் கல்வியில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அறிந்துதான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தடை வழங்கியிருக் கின்றார்கள்.
ஒரு மாநில அரசு செய்த திட்டத்தை அடுத்து வருகின்ற அரசு அதைப் பின்பற்றி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். இது சமச்சீர் கல்விக்கும் பொருந்தும். அதே போல தலைமைச் செயலகத்தை அற்புதமாகக் கட்டி கடைசியாக கொஞ்சம் முடிக்காமல் இருக்கிறார்களே. அதையும் முடித்து நிறைவேற்றக் கூடிய கடமை இந்த ஆட்சிக்கு உண்டே தவிர அதை நிறுத்துவதற்கு இந்த ஆட்சிக்கு உரிமை இல்லை.
உச்சநீதிமன்றம் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு ஓங்கி மண்டையில் அடிப்பதைப் போல மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். ஏராளமான தீர்ப்புகள் உள்ளன. சென்ற ஆட்சி செய்தது பொதுமக்களுடைய நலனுக்கு ஏதாவது விரோதமாக இருக்கிறதா? என்று வேண்டுமானால் காரண காரியங்களை கண்டுபிடித்துச் சொல்லலாமே தவிர, மற்றபடி அதற்கு வேறுவிதமான காரணங்களைக் கூற முடியாது.
கெட்ட எண்ணத்தோடு
கலைஞர் செய்தார். தி.மு.க ஆட்சி செய்தது என்று காழ்ப்புணர்ச்சியோடு கருதுவதா? சட்டத்தின் ஆளுமையை வந்திருக்கின்ற ஆட்சி உடைக்கக் கூடாது. அதை உடைக்க அவர்களுக்கு உரிமை இல்லை. இன்னொன்றையும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியி ருக்கின்றார்கள். அதை நேரடியாக மாற்றுவதற்கு போலித்தனமான காரணங்களைச் சொன்னால் அந்த காரணங்கள் கெட்ட எண்ணத்தோடு சொல்லப் படுகிறது (MALA FIDE) என்று பொருள்.

இந்த போலி காரணத்தை ஏற்க வேண்டிய அவசியம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி அடித்துச் சொல்லியிருக்கின்றது. எனவே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது என்பது சட்டரீதியான சிக்கல் உங்களுக்கு. சிக்கலில் நீங்கள் இன்னொரு முறை மாட்டி உச்சநீதிமன்றத்திற்குச் சென்று குட்டு வாங்காதீர்கள். (கைதட்டல்).
அ.தி.மு.க. வீண்பிடிவாதம் காட்டக்கூடாது
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் இதில் வீண்பிடிவாதம் காட்டக் கூடாது. இந்த நூலகம் தமிழ்நாட்டிற்குப் பெருமைதானே.
இந்த அம்மையார் ஆட்சியில் பள்ளிப் பிள்ளைகளுக்கு சைக்கிள் கொடுத்தார். அடுத்து கலைஞர் ஆட்சிக்கு வந்தார். இல்லை, இல்லை, அந்த அம்மா கொடுத்த சைக்கிள்கள் எல்லாவற்றையும் சைக்கிள் கடைக்கு அனுப்புங்கள் என்று சொன்னார்களா?
கலைஞர் இப்படியா செய்தார்?
கலைஞரும் அதே சைக்கிளை எல்லா பிள்ளை களுக்கும் கொடுத்தாரே. அதே போல காமராஜர் ஆட்சியிலே பிள்ளைகளுக்கு பகல் உணவு அளிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவு என்று செயல் படுத்தப்பட்டது. கலைஞர் ஒரு முட்டை அல்ல. இரண்டு, மூன்று, முட்டை பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய அளவுக்கு அல்லவா தொடர்ந்து செய்தார். வாழைப் பழங்களையும் சேர்த்துத் தந்தாரே, முன்னதாக ஓர் ஆட்சி செய்ததை கலைஞர் நிறுத்தினாரா? மேலும் நன்றாக சிறப்பாக அல்லவா தொடர்ந்தார்.
அ.தி.மு.க. ஆட்சி அதே போல அண்ணா நூற்றாண்டு நூலகத்தை விரிவுபடுத்தியிருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதுதான் மக்களுடைய நலன்.
நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கலைஞர் 9தளம் கட்டியிருந்தால் நீங்கள் இன்னும் ஒரு நான்கு தளத்தை அதிகமாகக் கட்டியிருக்க வேண்டுமே! அல்லது அவர் செய்யாத வசதியை நான் செய்திருக்கிறேன் என்று காட்டியிருக்க வேண்டுமே! அதைவிட்டு விட்டு கலைஞர் எது செய்திருந்தாலும் மாற்றுவேன் என்பது ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு அழகல்ல!  என்றார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக