புதன், 23 நவம்பர், 2011

கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!


‘இராமேஸ்வரம் என்றால் ராமர் பூசை செய்த இடம்-கோவில்-பாம்பன் பாலம், மெரீனா கடற்கரை என்றால் உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை, அதை அழகுபடுத்தினால் நன்றாக இருக்கும்’ என்ற பிம்பங்கள்தான் நமக்கு இருக்கின்றன. ‘கடற்கரைக்குப் போனால் மணலில் விளையாட, கடலில் கால் நனைக்க வசதிகள்  இருக்க வேண்டும், படகில் உல்லாச பயணம் போய் வர ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஓரிரு முறை சுற்றுலா போய் வருவதற்கு தயாராக கடற்கரை இருக்க வேண்டும்’ என்பதுதான் நமது எதிர்பார்ப்பாக இருக்கின்றன.

கன்னியாகுமரி என்றால், ‘பகவதி அம்மன் கோவில், மூன்று கடல்களும் சந்திக்கும் முனை, காந்தி நினைவு மண்டபம், அங்கு போனால் படகில் போய் விவேகானந்தர் பாறைக்குப் போகலாம்’ என்றுதான் பள்ளியில் படித்திருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் சிலையை அருகில் இருக்கும் பாறையில் நிறுவ, அது இன்னொரு சுற்றுலா சின்னமாக இருக்கிறது. இவ்வளவுதானா கன்னியாகுமரி? கன்னியாகுமரி மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? கடற்கரை, கடல் சார் பழங்குடியினரான மீனவர்கள் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்? கடலும் கடற்கரையும் அவர்கள் வாழ்க்கையுடன் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேட எண்ணி கன்னியாகுமரி கிராமத்தில் பிதுங்கி வழியும் சுற்றுலா லாட்ஜூகளுக்குப் பின்னால் கடலைத் தழுவி வாழ்ந்து கொண்டிருக்கும் வாவுத்துறை, கன்னியாகுமரி மீனவர் கிராமங்களுக்குப் போன அனுபவப் பதிவு இதோ.
சாலையிலிருந்து இறங்கி வரும் போது வலது புறம் திரும்பினால் விவேகானந்தர் பாறை படகுத் துறை, இடது புறம் திரும்பினால் வாவுத்துறை. ‘வாவுத்துறை உங்களை வரவேற்கிறது’ என்ற பலகையைத் தாண்டி படகுகளுக்கு அருகில் மீனவர்களின் வள்ளங்கள் மிதக்கும் கடற்பகுதி விவேகானந்தா பாறை படகு குழாமுக்குப் போகும் பயணிகள் வரிசையாக அனுப்பப்படும் கூண்டு போன்ற கட்டிடத்தை ஒட்டியிருக்கிறது. படகில் ஏற வரிசையில் நிற்கும் போது சன்னல் வழியாக இந்த வள்ளங்களையும் மீனவர்களையும் பார்க்க முடியும்.
நாலைந்து பேர் இரண்டு மூன்று குழுக்களாக சீட்டாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்ற எல்லோரும் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். சுமார் 30-40 வள்ளங்கள் கடலிலும், கரையிலுமாக நிலை கொண்டிருக்க அவற்றைச் சுற்றி சுறுசுறுப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு படகுக்கு அருகில் மூன்று பேர் நின்று வலை பிரித்துக் கொண்டிருந்தார்கள். அதிகாலை 3 மணி போல கடலுக்கு மீன் பிடிக்கப் போவதற்கான  தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
‘என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? சொல்கிறோம்’ என்று மூன்று பேரில் இளைஞராக தெரிந்தவர் முன்வந்தார். பெயர் ராஜா என்று சொன்னார். மற்ற இருவரில் ஒருவர் வயதானவர் இடையிடையே சில கருத்துக்களைச் சொன்னார். மூன்றாமவர் வாய் திறக்கவே இல்லை. வாயில் வெற்றிலை அடக்கியிருந்தார் என்று தோன்றியது. அவர் பெயர் யாகப்பன் என்று பின்னர் தெரிந்தது.
அவர்கள் பயன்படுத்துவது வள்ளம் எனப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகள். சுனாமிக்குப் பிறகு கட்டுமரங்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்தியிருக்கிறார்கள். இவர்களது வாவுத்துறை, அதை அடுத்த கன்னியாகுமரி இரண்டு இடங்களிலும் வள்ளங்களில்தான் மீன் பிடிக்கப் போகிறார்கள்.
கன்னியாகுமரி கிராமத்துக்கு கிழக்கே சின்ன முட்டம் கிராமத்தில் படகுத் துறை இருக்கிறது. அங்கு ஸ்டீம் லாஞ்சுகளில் மீன்பிடிப்புக்குப் போவார்கள். நாகப்பட்டினம் துறையில் பார்த்தது போன்று பெரிய படகுகளில் ஏழெட்டு பேர் போய், 3 நாட்கள் முதல் 10-15 நாட்கள் வரை கடலில் தங்கி மீன் பிடித்து வருவார்கள். அதற்கேற்ற மீன் சேமிப்புக் கிடங்கு, குளிர் பெட்டி வசதி, உணவு சமைக்க அடுப்பு, உணவு பொருட்கள், பல நூறு லிட்டர் டீசல் என்று எடுத்துப் போவார்கள். இழுவலை பயன்படுத்தி பெரும் அளவிலான மீன்களை அள்ளி வந்து விடுவார்கள்.
அவர்களது முதலீடும் அதிகம் வருமானமும் அதிகம். வள்ளத்தில் போகும் மீனவர்களுக்கு கிட்டத்தட்ட அன்றாடங் காய்ச்சி பிழைப்புதான்.
ஒரு வள்ளத்தில் 4 பேர் போவார்கள். ஒரு சில மணி நேரங்கள் கடலுக்குப் போய் மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து மீனை விற்று விட்டு மீண்டும் அடுத்த நாள் கடலுக்குப் போவதுதான் வாழ்க்கை. ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கப் போவார்கள். பெரிய நீராவிப் படகுகளுக்கு இருக்கும் 45 நாட்கள் தடை இவர்களுக்குக் கிடையாது.
வாவுத் துறையில் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டுப் போய் 7 மணி முதல் திரும்பி வர ஆரம்பிப்பார்கள், வெயில் ஏறுவதற்கு முன்பு மீன் விற்றுத் தீர்த்திருக்க வேண்டும். மதியம் சாப்பிட்டு ஓய்வெடுத்து விட்டு, மாலையில் வலையை ரிப்பேர் செய்வது, அடுத்த நாள் தொழிலுக்கு தயாரித்தல் என்று மீண்டும் படகுக்கு வந்து விடுகிறார்கள்.
ஆண்டின் ஒவ்வொரு சீசனிலும் மீன் பிடிப்பு மாறலாம். எந்த வகை மீன் பிடிப்பது என்ற திட்டத்துக்கேற்ப வலையும் மாறும். வலையின் விலை 1 லட்ச ரூபாய் வரை ஆகும். தினமும் பழுதுகளை செப்பனிட்டுக் கொண்டே இருந்தால் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இப்போது அவர்கள் பிடிப்பது கொயிலு குட்டி, பாறை குட்டி போன்ற சிறு மீன்கள்தான்.
நவீன கருவிகளை வாங்கினால் மீன்பிடிப்பு மேம்பட முடியும். ஜிபிஎஸ், காம்பஸ் போன்வற்றை பல ஆயிரம் கொடுத்து எல்லோராலும் வாங்க முடிவதில்லை. பரம்பரை பரம்பரையாக வரும் அறிவிலும் அனுபவத்திலும் எந்த பகுதியில் மீன் கிடைக்கும் என்று உணர்ந்து, மீன் பிடிக்கப் போகும் போது நீரோட்டத்தைப் பின் தொடர்ந்து மீன் கூட்டத்தைக் கண்டறிவதும், கடலுக்குள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்வதுமாக தொழில் செய்கிறார்கள்.
எக்கோ கருவிகள் மூலம் மீன்களின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது, ஆனால் தேவையில்லை, வாங்கவில்லை.
கன்னியாகுமரியிலிருந்து தெற்கு நோக்கி போனால் இந்திய பெருங்கடல், மேற்கே போனால் அரபிக் கடல், கிழக்கே வங்காள கடல். திட்டத்தின்படி எங்கு அதிக வாய்ப்போ அங்கு போகிறார்கள். இறால் போன்ற விலை உயர்ந்த மீன்கள் கேரளா கடற்கரைக்கு அருகிலான கடலில் நிறைய கிடைக்கின்றன. அங்கு காயல்கள் அதிகமாதலால் இறால் வளரும் சேற்றுப்பகுதிகள் நிறைய இருக்கின்றன. கன்னியாகுமரி பகுதியில் கல் இடுக்குகளில் வளரும் கல் இறால்தான் கிடைக்கிறது. இங்கு ஆண்டுக்கு மூன்று  மாதங்கள்தான் இறால் பிடிக்க முடியும். மற்ற மாதங்களில் கிடைப்பதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தனாறு கடலில் கலக்கும் மணக்குடி காயல் பகுதியில் இறால் கிடைக்கிறது.
வாவுத்துறையில் வசிக்கும் முக்குவ சாதி மீனவர்களுக்கும், அருகில் இருக்கும் கன்னியாகுமரியில் வசிக்கும் பரவர் சாதி மீனவர்களுக்கும் பிணக்குகள் ஏற்பட்டு சமரசம் செய்து கொண்டு தனித்தனி குழுக்களாக பிரிந்து செயல்படுகிறார்கள். வாவுத்துறையினர் அதிகாலையில் போய் முற்பகலில் திரும்பி விட, கன்னியாகுமரி மீனவர்கள் பிற்பகல் 3-4 மணிக்குப் புறப்பட்டு போய், நட்சத்திரம் தோன்றும் நேரத்தில் வலை விரித்து, நட்சத்திர ஒளியில் மேல் வரும் மீன் பிடித்து பின்னிரவில் கரை திரும்பி மீன் விற்கிறார்கள்.
இரு தரப்பு மீனவர்களும் கத்தோலிக்க மடத்தைச் சேர்ந்தவர்கள்தான். கோட்டாறு மறை மாவட்டத்தின் கீழ் வருபவர்கள். இந்து மதத்தின் எச்சங்களாக பீடித்திருக்கும் சாதிப் பிரிவினை உடைந்து போகாமல் சின்னச் சின்னதாக பல தகராறுகள் ஏற்பட்டன. வீணாக எதற்கு சச்சரவு என்று பிரிந்து விட்டார்கள். வாவுத்துறையினர் கடந்த ஒரு ஆண்டுக்குள் தங்களுக்குள் பணத் திரட்டி தனியாக சர்ச் கட்டிக் கொண்டார்கள். ஆனால், மீன் விற்கும் சந்தை இரண்டு பிரிவிற்கும் பொதுவாக வாவுத்துறையில்தான் இருக்கிறது.
கன்னியாகுமரி கிராமத்தில் சுமார் 600-700 வீடுகள் இருக்கின்றன. சுமார் 400-500 படகுகள் இயங்குகின்றன. கன்னியாகுமரிக்கு கிழக்கே, சின்ன முட்டம், தொடர்ந்து புது கிராமம். மேற்கு பக்கம் குளச்சல்.
வாவுத்துறையிலிருந்து வலது பக்கம் பார்த்தால் விவேகானந்தர் பாறைக்குப் போகும் படகு குழாம், கடிகார சுழற்சிக்கு எதிர் திசையில் பார்வையைத் திருப்பினால், முதலில் திருவள்ளுவர் பாறை, அடுத்து விவேகானந்தர் பாறை, கடல், பார்வை எல்லையின் வலது முனையில் கூடங்குளம் அணுமின் நிலையம், அதை அடுத்து சின்னமுட்டம் மீனவர் கிராமம், தொடர்ந்து கன்னியாகுமரி என்று ஊர்கள். சின்ன முட்டம் மீனவர் கிராமத்துக்கும் கன்னியாகுமரி கிராமத்துக்கும் நடுவில் இருக்கிறது விவேகானந்தபுரம் என்று தமிழிலும் விவேகானந்தா கேந்திரா என்று அமைப்பினராலும் அழைக்கப்படும் இடம். இது ஆர்.எஸ்.எஸ் இன் பினாமி அமைப்பு.
கன்னியாகுமரியில் வந்து முடியும் தேசிய நெடுஞ்சாலை தாண்டி சிறிது தூரத்திலேயே ஊருக்குள் நுழையும் போது வலது பக்கம் இருக்கிறது அதன் நுழைவாயில். ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஏகநாத் ரானடே என்பவர் 1970களின் தொடக்கத்தில் கன்னியாகுமரிக்கு வந்து இந்த இடத்தை வளைத்துப் போட்டு ஏற்படுத்திய அமைப்பு. அதே நேரத்தில்தான் கடலுக்கு சில மீட்டர் தொலைவில் இருக்கும் பாறையை விவேகானந்தர் பாறை என்று மாற்றி இன்று ஒரு சுற்றுலா தலமாக மாற்றியிருப்பது.
ஒரு லாட்ஜ் போல போய் தங்கிக் கொள்ள அறைகள் வாடகைக்கு விடுகிறார்கள். இந்தியா முழுவதும் இருந்து பலர் வந்து தங்குகிறார்கள். பல ஏக்கர்கள் நிலத்தை கடற்கரைக்கு அருகில் வளைத்திருக்கிறார். அன்றைய மத்திய அரசு ஆதரவுடன் இந்துத்வவாதிகள் இதை நிறைவேற்றியிருக்கின்றனர். அப்போதைய அரசுகளும், கேரளாவில் இயங்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பும் திட்டமிட்டு செய்தது என்று யாகப்பன் சொன்னார்.
இந்த விவேகானந்தர் பாறையும் விவேகானந்தபுரமும் அமைக்கப்பட்ட வரலாற்றைச் சொன்னார். அவருக்கு 54 வயதாகிறது, 1958ல் பிறந்தவர். அவருக்கு நினைவு தெரிந்தது முதல் “இப்போது விவேகானந்தர் பாறை இருக்கும் இடம் செடிகள், மரங்கள் வளரக் கூடிய இடம். ஆடு மாடுகள் மேயப் போகும். அப்போது கடலும் உள்வாங்கிதான் இருந்தது. கரை வரை வந்திருக்கவில்லை. பெண்கள் சாணி வறட்டி தட்டி உலர்த்தும் இடம். அந்தப் பாறையில் ஒரு குருசு வைக்கப்பட்டது.”
“ஆர் எஸ் எஸ் காரன்கள் கேரளாவிலிருந்து வந்து ஒரு நாள் குருசை பிடுங்கி எறிந்து விட்டு அதில் விவேகானந்தர் சிலையை வைத்து விட்டார்கள். ஒரு மீன் பிடி படகு போன்ற படகில்தான் போனார்கள்.  மீனவர்கள் பொதுவாக வெளி உலக விவகாரங்களில் வித்தகம் பெற்றவர்கள் கிடையாது. மீன் பிடிப்பதும், விற்பதுமாக இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்துபவர்கள்.  இதை எல்லாம் எப்படி எதிர்கொள்வது என்ற நுணுக்கமாக யோசிக்காமல் வெளிப்படையான எதிர்ப்பைக் காட்டுவார்கள். மீனவர்கள் எல்லாம் போராட ஆரம்பித்து, எதிர்வினையாக போலீசைக் கொண்டு குவித்து தாக்க ஆரம்பித்தார்கள்.”
“மீனவர்கள் எங்கே போவார்கள், கடலுக்குள்தான் படகில் ஏறி தப்பிக்க முடியும். நான் அப்ப சின்ன பையன், மூணாங்கிளாசோ என்னவோ படிச்சுக்கிட்டிருந்தேன்.  விபரம் தெரியாது. ஆனால் போலீசிடமிருந்து தப்பிக்க எங்க அப்பா என்னையும் தூக்கிக் கொண்டு கடலுக்கு படகில் போனதும் திரும்பி அந்த பாறையைத் தாண்டி ஊருக்குள் அழைத்துப் போனதும் இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு என்ன என்று விபரம் புரியவில்லை”
“கொஞ்ச கொஞ்சமாக அந்த பாறையில் மரம் செடிகளை அழைத்து கட்டிடங்களை கட்டினார்கள். சுற்றுலா பயணிகளை படகுகளில் அழைத்துப் போய் காட்டி சுற்றுலா இடமாக வளர்த்தார்கள். அதன் பிறகு பெரிய போட் விட ஆரம்பித்தார்கள். இந்த இடங்கள் எல்லாம் எங்க இடம்தான். ஆக்கிரமித்து கட்டினார்கள். படகு போவதற்கு இடையூறாக மணல் குவிவதால் மணலைத் தோண்டிக் குவிக்க ஆரம்பித்தார்கள். மணல் தோண்டத் தோண்ட கடல் அரிப்பு அதிகமாக கரைக்குள் கடல் வர ஆரம்பித்தது. அதை எதிர்த்து மீனவர்கள் குரல் கொடுத்து விண்ணப்பம் கொடுத்தார்கள்.
“1980களில் எம்ஜிஆர் ஆட்சியில் முத்துசாமி போக்குவரத்து அமைச்சராக இருக்கும் போது படகு போக்குவரத்தை அரசாங்க நிறுவனமாக மாற்றிக் கொண்டார்கள். அதன் பிறகு இப்படியே தொடர்கிறது.”
கிருத்தவ மத போதகர்களுக்கும் இந்த ஏகநாத் ரானடேவுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் இடையேயான வேறுபாடு பளிச்சென உறைத்தது. கிருத்துவ மதம் பரப்ப வந்தவர்கள், மீனவ மக்களுக்கு மத்தியில் சர்ச் அமைத்து அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆகி விட்டார்கள். மீனவர்களுக்கு கல்வி வசதி, மருத்துவ வசதி, அரசியல் வழிகாட்டல் என்று அவர்களோடு இணைபிரியாமல் ஒன்று கலந்து விட்டார்கள். அவர்களுக்குப் போட்டியாக, இந்து மதத்தைப் பரப்ப வந்த ஒரு காவித் துறவியின் மனம் எப்படிப் போயிருக்கிறது!
கன்னியாகுமரி மீனவர் கிராமத்துக்கும் சின்ன முட்டம் கிராமத்துக்கும் நடுவில் மீனவர் மக்கள் சமூகம் வளர வேண்டிய அவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக உரிமையுள்ள ஒரு பெரும் பரப்பை வளைத்து வேலி கட்டி, அதற்குள் உள்ளூர் மக்கள் வருவதற்கு தடை செய்து இந்தியா முழுவதுமிருந்து வரும் மக்களுக்கு தங்க வசதி செய்து கொடுத்து பாரத தேசத்தைக் கட்டி அமைக்கிறார்கள். விவேகானந்தர் பாறையும் உள்ளூர் மக்களிடமிருந்து தனிப்பட்டு சுற்றுலா சின்னமாக பராமரிக்கப்படுகிறது. ஏகநாத் ரானடே மீனவர்களுக்கு நடுவே வாழப் போயிருந்தால் ஒருவேளை அவரது இந்து மத புனிதம் கெட்டுப் போயிருக்கலாம். விவேகானந்தபுரத்துக்குள்ளும் விவேகானந்தா பாறைக்கும் உள்ளூர் மக்களுக்கு சென்று வர உரிமை இல்லை.
விவேகானந்தா கேந்திரம் என்பது வெளியூரிலிருந்து வரும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு லாட்ஜாகவும், இந்துத்துவா இயக்கங்களுக்கு ஒரு செயல் களமாகவும் பயன்படுகிறது. இந்து மதம் உழைக்கும் மக்களின் மத்தியில் இழைக்கும் அநியாயத்துக்கு இது ஒரு வலுவான வாழும் எடுத்துக்காட்டு.
“சுனாமியின் போது பெரிய பாதிப்பு இங்கு இல்லை. இந்தப் பகுதி நிலம், கடல் மட்டத்திலிருந்து உயரமாக இருப்பதால், புயல் சுனாமி போன்ற பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படுவதில்லை. சுனாமியின் போது கடற்கரை ஓரமாக இருந்த சில குடிசைகள் அடித்துப் போகப்பட்டன. சர்ச்சுக்குள் வெள்ளம் புகுந்தத்து. மற்றபடி பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை. சுனாமி வீடு கட்டித் தருகிறோம் என்று ஊருக்கு உள்ளே கடலிலிருந்து தள்ளி இருக்கும் இடத்தில் வீடு கட்டிப் போகச் சொன்னார்கள். சில பேர் அதற்கு மயங்கி ஒப்புதலும் கொடுத்தார்கள். கடலிலிருந்து விலகி மீனவர்கள் வாழ முடியாது என்று நாங்கள் எல்லோரும் மறுத்து விட்டோம்.”
இன்றைய தலைமுறையிலும் பல இளைஞர்கள் மீன்பிடித்தொழிலில் இறங்குகிறார்கள். யாகப்பனின் மூன்று மகன்களில் இரண்டு பேர் படித்து நிறுவனங்களுக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். மூத்த மகன் கடல் தொழிலில் இறங்கி விட்டான். அவரது அண்ணன் கன்னியாகுமரி புனித அந்தோணியார் பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கிறார். அவருக்கு படகில் போவது சின்ன வயதிலிருந்தே ஒத்துக் கொள்ளவில்லை. வாந்தி வருவது என்ற ஒவ்வாமைகள். படித்து கொஞ்ச நாள் பல்லவன் போக்குவரத்து கழகத்தில் சென்னை, வேலூரில் வேலை பார்த்தார். திருமணத்துக்குப் பிறகு கன்னியாகுமரி பள்ளியில் ஆசிரியராக நியமனம் பெற்றாராம்.
இதற்குள் இருட்டி விட்டிருந்தது. தூரத்தில் தெரிந்த விளக்குகள்தான் கூடங்குளம் அணுமின்நிலையம் என்று சுட்டிக் காட்டினார். கடலுக்குள் சில கிலோமீட்டர் தூரம்தான் இருக்கும். அப்படியே சர்ச்சைச் சுற்றிக் கட்டியிருந்த நடைபாதையில் நடந்து போய் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு விடை பெற்று முடித்துக் கொண்டோம். திரும்பும் போது கிராமத்துக்குள் நுழைந்து முடிந்தால் பரவர் பகுதியையும் பார்த்து விடலாம் என்று நடந்தேன்.
புதிதாகக் கட்டப்பட்ட சர்ச்சுக்கு முன்னர் இரண்டு சாதியினரும் பொதுவில் பயன்படுத்திய பழைய சர்ச் இப்போது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிராமத்தில் வீடுகள் எல்லாமே நல்ல கான்கிரீட் கூரைகளுடன், தொலைக்காட்சி, வசதிகளுடன் இருந்தன. தெருக்களில் தார் அல்லது சிமென்டு தளம் போட்டிருந்தார்கள். குப்பை கூழங்கள், சாக்கடைகள் எல்லாம் முறையாக பராமரிக்கப்படுவது புரிந்தது. பெண்களும், குழந்தைகளும் நவீன உடை உடுத்து உலாவிக் கொண்டிருந்தார்கள். இரு சக்கர வண்டிகளில் இளைஞர்கள்  சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
அலங்கார மாதா சர்ச் முன்பு திரும்பி சாலைக்கு வந்தேன்.
அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும் போது மணி 4.30. பல் தேய்த்து விட்டு சூரிய உதயம் பார்க்கப் போகலாம் என்று திட்டம். விவேகானந்தா கேந்திரத்துக்குள்ளே நடந்து கடற்கரைக்குப் போக முடியும். பெரிய இடம், நிறைய மரங்கள். அங்கங்கு சில கட்டிடங்கள். இந்துத்துவா சக்திகளின் கேந்திரமாக இயங்கும் இடம்.
சுமார் கால் மணி நேர நடைக்குப் பிறகு கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். கடலில் எப்படி வேலி போட்டிருப்பார்கள்? கடற்கரைக்கு சில மீட்டர்கள் முன்னதாக சுவர் கட்டிச் சுற்றுச் சுவரை மூடியிருந்தார்கள். கடற்கரைக்குப் போக ஒரு கேட். அந்த கேட்டை காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம் மட்டும், சுற்றுலா பயணிகள் சூரிய உதயம், மறைவு பார்க்க வசதியாக திறக்கிறார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்த சில நிமிடங்களில் ஒரு சீருடை அணிந்த பாதுகாவலர் வந்து கதவைத் திறந்து விட்டு விட்டு காவலுக்கு நின்று கொண்டார். மீனவர்கள் உள்ளே வந்து விட்டால்?
வெளியே போனால், மணலில் ஷீட் விரித்து சங்கு, சிப்பி விற்பவர்கள், காபி டீ விற்பவர்கள் தயாராக காத்திருந்தார்கள். கிராமத்திலிருந்து கடற்கரையோரமாக வந்திருந்தார்கள். இங்கிருந்து கடற்கரையோரமாக நடந்து கிராமத்துக்குப் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
சூரியன் உதிக்கும் வரை கடல் அலையில் கால் நனைத்து விட்டு புறப்பட்டேன். மணல் மெத்தென்றிருக்கும் கரு மணல். நடந்து கேந்திரம் சுற்றுச் சுவரை தாண்டியதுமே வள்ளங்கள், கிராமங்கள் கண்ணில் பட்டன. அதிகாலையில் மலம் கழிப்பவர்களை தொந்தரவு செய்யாமல் போக வேண்டும். அப்படியும் ஒரு படகின் மறைவில் இருந்தவர் முன்பு வந்து விட்டேன். மற்றபடி தவிர்த்துக் கொண்டு வள்ளங்களின் ஊடாக நடந்தேன்.
மாலையில் மீன் பிடிக்கப் போவதற்கு தயாராக, அதிகாலையிலேயே வலைகளை பிரித்துக் கட்ட ஆரம்பித்திருந்தார்கள். கல்லால் கட்டப்பட்ட அணை ஒன்றில் கல் கல்லாகத் தாண்டி படகுகள் நிறைய நின்றிருந்த துறைக்கு வந்தேன். முந்தைய நாள் பேசியவர்கள் சொன்ன விபரங்களை இந்தப் பகுதியில் ஒருவரிடம் பேசி உறுதி செய்யலாம் என்று பார்த்தேன். மூன்று பேர் ஒரு வள்ளத்தின் முனையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“கடலுக்குப் போய் விட்டு வந்தாச்சா, இனிமேல்தான் போகப் போறாங்களா” என்று கேள்வி போட்டேன்.
“மதியம் 3, 4 மணிக்குப் போகணும். இப்பவே தயாரிச்சு வைத்துக் கொள்வாங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் வெயில் ஏறி விடும். அதற்கு முன்பு இந்த வேலைகளை முடித்து விடுவோம்”
இவர்கள் பிற்பகல் கடலுக்குப் போய் இரவு திரும்புபவர்கள்.  சூசை மரியான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஊரில் ரட்சகர் தெரு, அலங்கார மாதா தெரு, சூசையப்பர் தெரு, அந்தோணியார் தெரு, சகாயமாதா தெரு தொடர்ந்து சின்ன முட்டம் இருப்பதாக விபரம் சொன்னார். இவரும் வாவுத்துறை மீனவர்களுடனான பிரச்சனைகளைப் பற்றிச் சொன்னார். அவர்களுடன் இவர்களுக்கு ஒத்துப் போவதில்லை.
கூடங்குளம் பற்றி பேசினார்.
“கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது கூடங்குளம். ஒரு விபத்து நடந்தால் மேற்கே திருவனந்தபுரம் வரை, கிழக்கே திண்டுக்கல் வரையில் மக்களை வேறு இடத்துக்குக் கொண்டு போகணும். அதை எப்படிச் செய்வீங்க? வாழ்வதற்கு கரெண்ட் வேணும் என்று சொல்கிறான். வாழ்வே இல்லை என்றால் கரண்ட் எதுக்கு?” என்று பல எளிமையான கேள்விகளை கோபமாக முன் வைத்தார்.
“கடற்கரை காரங்க என்றால் அவங்களுக்கு எல்லாம் இளக்காரம். இவங்க வச்சிருக்கிற கருவிகள், இன்டர்நெட் இல்லாமலேயே நாங்க கடலில் வழி கண்டு பிடித்து தொழில் செய்கிறோம். இவங்க சொல்கிற ஓட்சும், புரோட்டீனும் இல்லாமலேயே உடல் உறுதியாக இருக்கிறோம். படிச்சவனுங்க என்று பைத்தியக்காரன் ஆக்கப் பார்க்கிறான்”
“போராட்டத்துக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்கிறான். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு 14,000 கோடி எங்கிருந்து வந்தது? என்று நீ முதலில் சொல்லு. 10-15 வருஷம் முன்னால மதக் கலவரம் நடந்தது. அப்போ புத்தி கெட்டு நடந்தது (இப்போ எல்லாம் இல்லை). அப்போ அந்தப் பக்க ஊரில் எல்லாம் மக்கள் தெருவுக்கு வர வேண்டி ஆனது. சாப்பாடு கிடையாது. இங்க இருந்த மீனவர்கள் படகில் அரிசியையும், பருப்பையும், எடுத்துக் கொண்டு போய் அவங்களுக்குக் கொடுத்து உதவி செய்தாங்க? அதுக்கெல்லாம் கணக்கு எவன் சொல்ல முடியும்?”
“கன்னியாகுமரியில் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவா ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 3 நாள் மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்து மக்கள் வந்தாங்க. தாய் வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடுவது எங்க கடமை. மூணு நாளும் காலைல காபி, டிபன், மத்தியானம் சாப்பாடு, சாயங்காலம் காபி, ராத்திரி சாப்பாடு எல்லாம் நாஙகதான் போட்டோம். எத்தனை லச்சம் செலவாச்சின்னு கணக்கு வச்சா போடுவோம்.”
“எவனாவது கணக்குன்னு கேட்டுக்கிட்டு கிராமத்துக்குள்ள வந்தான்னா திருப்பிப் போக மாட்டான். எப்படிப் போட்டோம்னு தெரியணுமா?, ‘டேய், சார் நல்ல சட்டை எல்லாம் போட்டிருக்காருடே, உள்ளே கூட்டிட்டுப் போ’ என்று போய் ரச வடையும், இட்லியும் கொடுத்தா தெரியும் கணக்கு!”
“இடிந்த கரையில மக்கள் மீது எவனாவது கை வச்சான்னா, கன்னியாகுமரியில வந்திருக்கும் டூரிஸ்டு ஒருத்தன் கூட வெளிய போக முடியாதபடி செய்து போடுவோம்”
“கடற்கரை மக்களுக்கு அறிவில்லை, அணு உலை பாதுகாப்புதான்னு சொல்றானுங்க? அப்ப ஏன் கடற்கரையில் அணுஉலையை வைக்கிற? அப்படி சொல்லக் கூடியவன் ஊரில, அவங்க வீடுகளுக்கு நடுவில வைக்க வேண்டியதுதானே” என்று பொரிந்து தள்ளி விட்டார்.
“அப்படி ஏதாவது விபத்து நடந்தால் நம்ம காலத்திலேயே நடக்கணும் என்றுதான் எனக்கு ஆசை. அத்தோடு நாமும் சாவோம், எல்லாவனும் சாவான். எதிர்காலத்தில நம்ம புள்ள குட்டிகளுக்கு என்ன ஆகும் என்று நமக்கு பதைக்காமல் இருக்கும் அல்லவா!”
“இந்த டூரிஸ்டுகளுக்கு எங்கள பார்த்தா இளக்காரம். இவ்வளவு பெரிய லாட்ஜூகள் கட்டியிருக்கான். அவ்வளவிலிருந்தும் சாக்கடை எல்லாம் அன்னா தெரியுதே கண்வாய் அது வழியாக கடலுக்குள்ளதான் வந்து சேருகிறது. அத மாதிரி 3 இருக்கு. நாங்க ஏதாவது சொல்றோமா. கடலுக்கு வந்து விட்டு வீட்டுக்குப் போனா, காலை டெட்டால் சோப்பு போட்டு கழுவா விட்டால் நோய் வந்து விடும். இந்த லாட்ஜுகள் எல்லாம் மணி முதலாளிக்கு சொந்தம். ஒரு டூரிஸ்ட் கன்னியாகுமரிக்கு 1 லட்ச ரூபாயோடு வந்தா, 70,000 ரூபாய் மணி முதலாளிக்குத்தான் போகும், 30,000 ரூபாய்தான் மற்றவங்களுக்கு பிரிச்சுக்கும்.”
“பகவதி அம்மன் கோவிலச் சுற்றி பிராமணனுங்க வீடுதான் இருந்தது. அவங்க எல்லாம் லாட்ஜூகளுக்கு வித்து விட்டு பஞ்சலிங்கபுரத்துக்குப் போய் விட்டாங்க. கன்னியாகுமரி ஊரில் மீனவர்கள் மட்டும்தான் இன்னுமும் ஊராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீதி எல்லாம் டூரிஸ்டு தொழிலுக்குப் போய் விட்டது.”
பேசி முடித்து விட்டு எழுந்து கரையோரமாகவே நடந்து வாவுத்துறையில் காலையில் மீன் பிடிக்கப் போனவர்கள் திரும்பி வரும் சந்தைப் பகுதிக்கு வந்தேன். சூரியன் நன்கு மேலே ஏறியிருந்தது. படகுகள் மீன் சுமையுடன் திரும்பிக் கொண்டிருந்தன. மீன் சந்தையும் சூடுபிடித்திருந்தது. கன்னியா குமரி எனும் புகழ் பெற்ற சுற்றுலா மையத்தின் மண்ணின் மைந்தர்கள் அந்த சுற்றுலாவோடு தொடர்பில்லாமல் தங்களது அன்றாட வாழ்வை சுறுசுறுப்புடன் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
_____________________________________________________
- வினவு செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக