செவ்வாய், 8 நவம்பர், 2011

தினமணி’ ஆசிரியர் மீது அவதூறு வழக்கு : கருணாநிதி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 4-ம் தேதி ‘தினமணி’ தலையங்கத்தில் ஒரு செய்தி வெளியானது. அதில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாள சின்னம் என்பதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டி காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா, அவரது ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமை செயலகத்தை கட்டி விடக்கூடாது என்பதற்காக மட்டும் இந்த நூலகம் கட்டப்படவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
அண்ணா நூலகம், அறிஞர் அண்ணாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கட்டப்பட்டது. அனைத்து மக்களும் அதிகம் விரும்பும் நூல்கள் அடங்கிய இந்த நூலகம் பொதுப்பணித்துறையின் நேரடி பார்வையில் கட்டப்பட்டது. அந்த நூலகம் கட்டுவதற்கான டெண்டர் வெளிப்படையானது. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. கட்டிடம் கட்டப்பட்டபின் அதற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என பெயரிடப்பட்டது. இந்நிலையில் வேண்டும் என்றே ‘தினமணி’ ஒரு அவதூறான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி கற்பனையாக எழுதப்பட்டது.
எந்தவித விசாரணையும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் உண்மைக்கு புறம்பாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது திமுக தலைவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தேசிய அளவில் ஆட்சி அமைப்பதில் மூளையாக செயல்பட்டு வரும் ஒரு மிகப்பெரிய தலைவரை இழிவுபடுத்தும் வகையில் செய்தி எழுதப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த செய்தி வெளியிட்டதன் மூலம் அதன் ஆசிரியர், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் குற்றம் செய்தவராவார்.

இந்த பொய்யான செய்தி வந்தவுடன் ஏராளமான தொண்டர்களும், நண்பர்களும், நலம் விரும்பிகளும் தொலைபேசி மூலம் விசாரித்து வருகின்றனர். எனவே இந்த செய்தியை வெளியிட்ட ஆசிரியர் வைத்தியநாதன், பதிப்பாளர் ஜுன்ஜுன்வாலா ஆகியோரை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499, 500ன் கீழ் தண்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் குமரேசன், கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆஜரானார்கள். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், வரும் 15ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக