ஞாயிறு, 13 நவம்பர், 2011

ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப் பட விழா!

;பா. சரவணகுமரன்
திரையிடல்' என்னும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது "தமிழ் ஸ்டூடியோ' அமைப்பு. அந்த வகையில் இந்தியாவின் புகழ்பெற்ற ஆவணப் பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படங்களைக் கடந்த 29ஆம் தேதி திரையிட்டது.
போரும் அமைதியும், கடலில் மீன் வேட்டை, நர்மதாவின் நாட்குறிப்பு, நண்பர்களின் நினைவில், மனசாட்சியின் கைதிகள் ஆகிய நான்கு படங்களும் ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளின.
போரும் அமைதியும்: இந்தியா,பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட படம் இது. உலகளாவிய போர் வெறியைச் சாடி, அமைதியை வலியுறுத்தும் படம். "தான் வகுத்ததே சட்டம்' என்ற இறுமாப்புடன் திகழும் அமெரிக்கா, ஆயுத வியாபாரத்தை மையப்படுத்தி புதுப்புது எதிரிகளை உருவாக்குவதையும், போரில்லாத உலகம் எட்டாக் கனியாக இருப்பதையும் கவலையுடன் சொல்கிறது இந்தப் படம்.கடலில் மீன் வேட்டை:வளரும் நாடுகள் தங்களின் பொருளாதாரத் தேவைக்காக சர்வதேசக் கடல் எல்லையைத் தாரை வார்த்துக் கொடுப்பதையும், அதனால் மீனவ சமுதாயம் சந்திக்கும் பிரச்னையையும் அலசுகிறது இந்தப் படம். உலக வங்கியே இறால் பண்ணைகளை அந்நிய செலவாணி ஈட்டும் காரணியாக முன்னிறுத்துகிறது. இத்கைய இறால் பண்ணைகளால் மீனவ சமுதாயத்துடன் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இறால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கடல் நீரால் விவசாய நிலங்களும் உப்பு நிலங்களாக மாறி, மக்களைப் பாடாய்ப்படுத்தும் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் படம்.
நர்மதாவின் நாட்குறிப்பு:நர்மதா நதியின் குறுக்கே மேற்கிந்தியாவில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையால் விளைநிலங்களும், ஆதிவாசிகளும் பாதிக்கப்படும் கொடுமையைக் கண்முன்னே நிறுத்துகிறது "நர்மதாவின் நாட்குறிப்பு'.
நண்பர்களின் நினைவில்:1970ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையும், சீக்கிய தீவிரவாதத்தையும் அலசும் இந்தப் படம் பகத்சிங்கின் போர் குணத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.மனசாட்சியின் கைதிகள்:இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சொல்கிறது இந்தப் படம்.ஒவ்வொன்றும் களத்தில் நம்மை நிறுத்தி வைத்து உணர்ச்சியைத் தூண்டுகிறது. ஆயிரம் கேள்விகள் நம்முன் எழ, அரங்கை விட்டு வெளியேறுகிறோம்.சென்னை, தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்தப் படங்கள் திரையிடப்பட்டன. எடிட்டர் லெனின், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக