சனி, 19 நவம்பர், 2011

குடி: கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை!

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
- 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனும் டெல்லி அரசின் முடிவுக்கெதிராக ‘போராடும்’ டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்க முழக்கம்!
அன்றைய தினம் ஏறக்குறைய நூறு பேர் அந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் இருந்தார்கள். அவர்கள் அனைவரது மனநிலையும் இதுதான். அவர்கள் உச்சரித்த எண்ணற்ற வார்த்தைகளின் சாராம்ச பொருளும் இதுவேதான்.
உழைக்கும் மக்களில் ஆரம்பித்து, அதிகார வர்க்க எடுபிடிகள் வரை சகல தரப்பினரும் அங்கு சிதறியிருந்தார்கள். மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள் முடிய அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். இரைச்சல்களுக்கிடையில் தங்கள் முதலாளிகளை திட்டினார்கள்.
மேலாளரின் கன்னத்தில் அறைந்தார்கள். மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். கல்லூரித் தாளாளரின் கைகளை ஒடித்தார்கள். காதலியுடன் முரண்பட்டார்கள். மனைவியை அடித்தார்கள். மகனுக்காக ஏங்கினார்கள். மகளுக்காக துடித்தார்கள். அப்பாவை அடித்தார்கள். அம்மாவை கொஞ்சினார்கள். அண்ணனை கொன்றார்கள். அக்காவை போற்றினார்கள். தங்கையை முத்தமிட்டார்கள். தம்பியை உதைத்தார்கள். மாநில முதல்வரை அவமானப்படுத்தினார்கள். பிரதமரின் கோவணத்தை அவிழ்த்தார்கள். மத்திய – மாநில அமைச்சர்களின் வீட்டு பெண்களை சந்திக்கு இழுத்தார்கள். கை கோர்த்தார்கள். கை குலுக்கினார்கள். கட்டிப் பிடித்தார்கள். கட்டி உருண்டார்கள். சிரித்தார்கள். அழுதார்கள். கதறினார்கள். கலைந்தார்கள்.
மறுநாள் அல்லது வரும் வார இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் கூடுவார்கள். திரும்பவும் கனவு காண்பார்கள். ஒரே மனநிலையை பலதரப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள்.
இது ஏதோ ஒரு டாஸ்மாக் கடையில், என்றேனும் ஒருநாள் நடந்த – நடக்கும் – சம்பவமல்ல. இதுதான் தமிழகத்திலுள்ள 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளையும் சுற்றி அன்றாடம் நிகழும் நிகழ்வுகள். நகரங்களில் உள்ள 3,562 டாஸ்மாக் கடைகளிலும் கிராமப்புறங்களிலுள்ள 3,128 கடைகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கிறார்கள். டாஸ்மாக்கே நமது ஆண்களின் புனிதக்கோவிலாக மாறிவருகிறது.
இந்த உண்மை அதிகார வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனாலும் சுவரெழுத்து எழுதவும், அரசுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகிக்கவும், அடிப்படை உரிமைக்காக சாலை மறியல் செய்யவும், தடை விதிப்பது போல் அரசாங்கம் இப்படி பகிரங்கமாக பேசுவதற்கு தடையேதும் விதிப்பதில்லை. பதிலாக தங்களைத்தான் திட்டுகிறார்கள் என்று தெரிந்தே அரசாங்கமும், தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் டாஸ்மாக்கையும், ‘பார்’களையும் ‘ஸ்பான்சர்’ செய்து நடத்துகின்றன.
———-
குடி : கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை ! ”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
உடைமையாளர்களுக்கு சொந்தமான இந்த வாக்கியத்தை, 1500 ஆண்டுகளுக்கும் முன்பே உடைமையற்றவர்களின் மனதிலும் நாவிலும் வலுக்கட்டாயமாக ஒருவன் புரண்டு, தவழ வைத்தான். அதற்கு குடிப் பழக்கத்தையே அடிப்படை காரணமாக மாற்றினான். இதன் மூலம் அரசின் வருவாயை பெருக்கினான். அவன் கவுடில்யன். அவன் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்’ நூலில் இதுகுறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.
அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க ‘சுராதயக் ஷா’ என ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் ‘அதயாக் ஷா’ எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…
இன்றைய டாஸ்மாக்கின் நடைமுறை அப்படியே ‘அர்த்த சாஸ்திரத்தை’ அடியொற்றி இருப்பதைக் காணலாம். இதனையடுத்து வந்த அனைத்து அரசுகளுமே குடியை அரசு கஜானாவை நிரப்பும் கண்ணியாகவே பார்த்தன. பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’, குடிக்குரியதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (அதாவது ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை 1902 – 03-ஆம் ஆண்டுகளில் அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ.9,28,000 என உயர்ந்துள்ளது (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்).
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்திப் பல்வேறு மையப்படுத்தும் நடவடிகைகளையும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் கிளர்ந்து எழாமல் இருப்பதற்காக மது அருந்தும் பழக்கத்தை திணித்தது.
குடிநிர்வாகம் குறித்த ஆங்கிலேயரின் அணுகல் முறைக்கு அவர்கள் அயர்லாந்தில் 1799-ல் மேற்கொண்ட முயற்சிகளே முன்னுதாரணமாக இருந்தது. அதன்படி இந்தியாவில் சமுதாய அளவிலான குடி விவசாயங்களைத் தடை செய்து மையப்படுத்தப்பட்ட சாராய உற்பத்தி சாலைகளை ஏல முறையில் தரகு முதலாளிகளிடம் (‘மரியாதையும் மூலதனமுள்ள பெருவியாபாரிகளிடம்’ என்பது அயர்லாந்தில் ஆங்கிலேய அரசு பயன்படுத்திய வார்த்தை) அளிப்பது. சாராயக் கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது. அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது என்றும், கள் உற்பத்தி மற்றும் கள் குடிக்கும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து ரசாயனங்களை கலந்து மதுவை தயாரிப்பது என்றும் முடிவுக்கு வந்தனர்.
இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டுமென மாகாண அரசுகளுக்கு 1859ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினர். இதனையடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்துப் பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்துவந்த தாதாபாய் துபாஷ் என்பவனிடம் மும்பை மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள். தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. (1951ல் விட்டல் மல்லையா – விஜய் மல்லையாவின் தந்தை – இந்நிறுவனத்தை ‘முயன்று’ வாங்கினார்). இப்படித்தான் நாடு முழுவதுமே சாராய தரகு முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.
1947 ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்த அதிகார மாற்றத்துக்கு பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது. இன்றைய தமிழக அரசின் வருவாய் நிலையும் குடி வழியாக வரும் வருவாயை நம்பியே இருக்கிறது. 2010 – 11-ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் வழியாக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.
ஆனால், இந்த விவரங்கள் உணர்த்தும் செய்தியோ வேறு. நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு, முதலாளிகளுக்கு ஏராளமான – தாராளமான – சலுகைகள் வழங்கப்படுவதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே அரசாங்கங்கள் குடி விற்பனையை ஊக்குவிக்கின்றன. இங்கிலாந்தில் லாட்டரியும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் சூதாட்டங்களும் எப்படி உழைக்கும் மக்களை பலி வாங்குகிறதோ அப்படி தமிழகத்தில் டாஸ்மாக் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை காவு வாங்குகிறது.
————–

குடி : கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை !
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
என்ற வாக்கியம் பொருளாதார ரீதியாக ஒரு அர்த்தத்தை தருவது போலவே பண்பாட்டுக்கு ரீதியாக வேறொரு பொருளைத் தருகிறது. ஆனால், அனைத்து அர்த்தங்களின் ஆணிவேரும் ஒன்றுதான். அது, பொழுதுபோக்கையும் சேர்த்து சுரண்டுவது. இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் மேல்நிலை வல்லரசுகளின் சுரண்டல்களுக்கு ஏற்ப உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக – தக்கை மனிதர்களாக – மாற்றுவதுதான் இந்த வாக்கியத்தின் பின்னால் இருக்கும் உண்மை.
இதனடிப்படையிலேயே உழைப்பு நேரங்களை எப்படி அட்டவணைப் போட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் நிறுவனங்கள் சுரண்டுகிறதோ அப்படி அத்தொழிலாளியின் ஓய்வு நேரங்களையும் அட்டவணைப் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கின்றன. எதைப் பார்க்க வேண்டும், எதை ரசிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எந்தத் தொழிலாளிக்கும் இல்லை. உழைக்கும் நேரம் போலவே ஓய்வு நேரமும் பறிபோய் விட்டது. அதாவது தொழிலாளர்களின் பொழுதுபோக்கு நேரங்கள், சுரண்டல் அமைப்பின் உழைப்பு நேரங்களாகிவிட்டன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘வீக் எண்ட்’ கலாச்சாரம், இன்று பிரபஞ்சம் தழுவிய கலாச்சாரமாக மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.
வாரநாட்களில் 10 அல்லது 12 அல்லது 14 மணிநேரங்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளியின் கண்முன்னால், வார இறுதி என்ற கொண்டாட்டத்தை எலும்புத் துண்டு போல காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் ‘வீக் டேஸில்’ கோழையாக – மேலாளரின் அடக்குமுறைக்கு கட்டுப்பட்டு கீழ்படிந்து – இருப்பது ‘வீக் எண்ட்’டை உத்திரவாதப்படுத்துகிறது. குடிக்கும் நேரத்தை எதிர்பார்த்தே குடிக்காத நேரங்களை கடத்தும் மனநிலைக்கு தள்ளுகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் குடித்துவிட்டு வேலைக்கு வரக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் நிறுவனங்கள், குடிக்காமல் அதே தொழிலாளி உறங்கவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.
அதனாலேயே உரிமைக்காக குரல் எழுப்புவர்களின் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர், குடித்துவிட்டு ‘மாண்புமிகு’களை என்ன திட்டினாலும் கண்டுக் கொள்ளாமல் செல்கின்றனர். சாலைகளில் வண்டிகளை நிறுத்தினால் அபராதம் விதிப்பவர்கள், டாஸ்மாக் கடை வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும்படி எப்படி நிறுத்தினாலும் புன்னகையுடன் நகர்கின்றனர். இப்படியாக பொது ஒழுங்கையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாக்க டாஸ்மாக் அவசியமாகிறது.
ஆக, குடிப்பது என்பது உள்ளார்ந்த விருப்பமல்ல. அது திணிக்கப்பட்டது. இதுவே பின்னர் விருப்பமாக உருவெடுக்கிறது. உடல் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்து உடல் வலிமையை இதனாலேயே உழைக்கும் வர்க்கம் இழக்கிறது. அடுத்த நாள் அல்லது அடுத்த வார வேலை(களை) செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம், என்றைக்கும் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளுகிறது.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு வரன் தேடும்போது மாப்பிள்ளை குடிப்பவராக இருந்தால், அந்த மணமகனை நிராகரிப்பார்கள். இன்று குடிக்கும் பழக்கம் இல்லாத நபர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்கத்தான் பெண்கள் தயங்குகிறார்கள். ‘என்றாவது குடிப்பதில் தவறில்லை’ என்ற போக்கு அதிகரித்திருக்கிறது. மிதமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அவ்வப்போது குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்ற தர வரிசை பெருமைக்குரிய அடையாளமாக மாறியிருக்கிறது.
இப்படி மதுவுக்கு அடிமையாகி இருப்பதாலேயே குறைந்தபட்ச எதிர்ப்புணர்வு கூட இல்லாமல் போய்விடுகிறது. ஐந்து ரூபாய்க்கு தேநீர் பருகும்போது, இந்த அளவில், இவ்வளவு டிகாஷனுடன் டீ வேண்டும் என்று கேட்பவர்கள், மேஜையின் மீது ஈ மொய்ப்பதை சுட்டிக் காட்டி துடைக்கச் சொல்கிறவர்கள், டாஸ்மாக் கடையில் அவர்கள் தரும் ‘சரக்கை’ மறுபேச்சில்லாமல் தங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வாங்கிச் செல்வது எதனால்? சிறுநீர் கழிக்கும் இடம் அருகிலேயே இருக்க, யாரோ எடுத்த வாந்தி காய்ந்திருக்க, அதன் அருகிலேயே அமர்ந்து குடிக்க நேர்வதை அவமானமாக கருதாதது ஏன்? சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் டாஸ்மாக் சுவர் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் மரணமடைந்தது நினைவில் இருக்கலாம். இன்றும் பழுதுப்பட்ட சுவர்கள் பல டாஸ்மாக் கடைகளை தாங்கித்தான் நிற்கின்றன. அதன் அடியில் அமர்ந்துதான் இப்போதும் பலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 120 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வணிக விற்பனைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படும் விழா நாட்கள், குடிப்பதற்கான நாட்களாகவும் இருக்கின்றன. உடைகளின் விற்பனை இந்நாட்களில் அதிகரிப்பது போலவே மது பானங்களின் விற்பனையும் அதிகரிக்கின்றன.
திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடித்த காலம் மலையேறி, இப்போது கதாநாயகன் குடிக்க வேண்டும் என்பது ‘சாமுத்ரிகா லட்சணத்தில்’ வந்து நிற்கிறது. இந்த ‘லட்சணத்தை’ பத்திரிகைத்துறையில் இப்போது அதிகம் பார்க்கலாம். கண்முன் இருக்கும் உதாரணம், 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை. இக்காலத்தில் இலங்கை தூதரக அதிகாரியான அம்சா, தமிழக பத்திரிகையாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைத்தார். அதுவரை ‘சிங்கள இராணுவம்’ என்று எழுதி வந்த ஊடகம், இந்தப் ‘பார்ட்டி’க்கு பிறகு ‘இலங்கை இராணுவம்’ என்று எழுத ஆரம்பித்தன. ஈழப்பிரச்னை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, சில கோப்பைகள் மதுவே இலங்கைத் தூதரகத்துக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.
இதே வழிமுறைகளை பல காவல்துறை அதிகாரிகளும், ஆணையர்களும் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். செய்தியாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைப்பதன் வழியாக அவர்களிடமிருந்து செய்திகளை அறிந்துக் கொள்கிறார்கள்; செய்திகள் வராமல் தடுக்கிறார்கள். பணி உயர்வு, ஊதிய உயர்வு, இட மாற்றம் போன்ற விஷயங்கள் ‘விருந்து’களில் தீர்மானமாகின்றன. இராணுவ ரகசியங்களை அறிய எந்த சித்திரவதைகளையும் அண்டை நாடுகள் செய்வதில்லை. ‘ஒரு ஃபுல்’ முழு ரகசியத்தையும் தாரை வார்த்து விடுகிறது.
குடிக்கு அடிமையான – அடிமையாக்கப்பட்ட மனிதர்களை குறி வைத்துத்தான் தரகு முதலாளிகளும் பன்னாட்டு மது உற்பத்தி நிறுவனங்களும் களத்தில் இறங்குகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கும் என்கிறது புள்ளி விவரம். 2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்’ அல்லது 24 ‘ஆஃப்’ அல்லது 12 ‘ஃபுல்’ இருக்கலாம்.
இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் எதுவொன்றையும் மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒன்றுக்குள் மற்றது அடக்கம். மற்றதுக்குள் இன்னொன்று அடக்கம். அந்தவகையில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அரசு சாரா அமைப்புகள் பல பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் போதை மறுவாழ்வு மையங்களை தொடங்குவதும், கவுன்சிலிங் என்ற பெயரில் ஒரு தொகையை பறிப்பதும், புதிதுப் புதிதாக மன நோய்கள் பூப்பதும், மருந்துகள் அறிமுகமாவதையும் சொல்லலாம்.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடட் ப்ரீவரீஸ் லிட் நிறுவனத்தின் அதிகாரியான ரவி நெடுங்காடி, ”மூன்றில் இரண்டு பங்கு வாடிக்கையாளர்கள் குறைந்த வயதுடையவர்கள். சட்டப்படி குடிக்க அனுமதி இல்லாதவர்கள். இவர்களை குறி வைத்துதான் நாங்கள் விற்பனையில் இறங்கியிருக்கிறோம். 3500 இலட்சம் பேர் இப்போது குடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 5 ஆயிரம் இலட்சமாக உயர்த்துவதுதான் எங்கள் நோக்கம்…” என்று பெருமையுடன் பேசியிருக்கிறார்.
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”  என டிராகுலாவின் பற்களை ஆல்கஹால் கொண்டு மறைத்தபடி தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் புன்னகைக்கிறார்கள். அவர்களுக்கான வார்த்தைகளை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வாக்கியமாக மாற்றத் துடிக்கிறார்கள்.
குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக