புதன், 16 நவம்பர், 2011

அழகிரியின் ‘பொட்டு’வுக்கே கியாதி என்றால், பொட்டுவின் ‘தட்டு’வுக்கு?


Viruvirupu

 After court ruled improper Gonads Act slapped on him, N Suresh Babu alias Pottu Suresh, was released from prison. After spending more than 100 days behind bars at Palayamkottai central prison, this close confidante of union minister M K Alagiri came out as a miracle. But, how was that possible? மதுரை காவல்துறையில் பல்வேறு விதமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. எல்லாமே பொட்டு சுரேஷ் சமாச்சாரம்தான்! இவர்கள் அதிகாரத்தையும், ஆதாரங்களையும் கைநிறைய வைத்துக்கொண்டு பொட்டு சுரேஷை அள்ளி உள்ளே போட, பொட்டு இவர்களை தள்ளி கொண்டு வெளியே வந்தது எப்படி என்பதுதான் சூடான விவாதம்!

கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரையில் அழகிரி சக்கரவர்த்தியாக இருந்த நாட்களில், குறுநில மன்னராக இருந்தவர் பொட்டு.
ஜாமீனில் வெளியே வரவே முடியாது (1 வருடத்துக்கு) என்று பொட்டு சுரேஷ்மீது குண்டர் தடைச் சட்டம் பாய்ந்தது. வழக்கும் அப்படியே பதிவானது. இனி பொட்டு அவ்வளவுதான் என்று இவர்கள் சொல்லிக்கொண்டு இருக்க, சட்டத்தை சாமர்த்தியமாக வளைத்துக்கொண்டு வெளியே வந்தார் பொட்டு.
இது எப்படி சாத்தியம் என்று சென்னையிலிருந்து எகிறுகிறார்கள். மதுரைக்காரர்கள் பதில் சொல்ல திணறுகிறார்கள்.
“முழுமையான ஆதாரங்கள் இருப்பதாக சொன்னீர்கள்? பொட்டுவுக்கு எதிராக சாட்சிகள் தயார் என்றீர்கள்? ஆளையும் அமுக்கி உள்ளே போட்டீர்கள். குண்டாஸிலும் கேஸ் பதிவு செய்தீர்கள். இப்போது என்னாச்சு? இதுதான் நீங்க வழக்கு போட்ட லட்சணமா?” என்று சென்னை விட்ட டோசுக்கு, கையைப் பிசைகிறது மதுரை காவல்துறை.
நமது மதுரை காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். அவர்கள் சொல்லும் கதை, பொட்டு சாம்ராஜ்யம் இன்னமும் சரியவில்லை என்பதையே காட்டுகிறது. குண்டர் தடைச் சட்டத்தில் பிடித்து உள்ளே போடப்பட்ட நபராக இருந்தாலும், மதுரை போலீஸில் கீழ்மட்டங்களில் ‘பொட்டு அண்ணன்’ என பயம் கலந்த விசுவாசத்துடனேயே அழைக்கப்படுகிறார் அண்ணன்.
மதுரை காவல்துறையில் நமது தொடர்பாளர்களில் ஒருவர், “மதுரையில் பொட்டுவை மாட்டிவிட 1008 விவகாரங்கள் இருக்க, காவல்துறையில் இருந்த ‘சிலர்’  வேண்டுமென்றே கோர்ட்டில் சும்மா தட்டினாலே நொருங்கக்கூடிய பிராஜைல் விவகாரங்களையே வழக்குகள் ஆக்கினார்கள். அவையெல்லாம், ‘பொட்டு கைது’ என்று பத்திரிகையில் செய்தி வர வைக்கும். அவ்வளவுதான். அதற்குமேல் ஆளை டச் பண்ணாது” என்கிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரை புதுநத்தம் ரோட்டில் இயங்கிவந்த யோகா அன் கோ நிறுவனம் யாருடையது என்பது அந்த வீதியில் உலாவும் பசுமாட்டுக்குகூட தெரியும். மாண்புமிகு அண்ணன் பொட்டு சுரேஷ் அவர்கள் பங்குதாரராக உள்ள நிறுவனம் அது.
பொட்டுவை மாட்டிவிட ஆதாரம் தேடி போலீஸ் புகுந்த இடம் இதுதான். அங்கே புகுந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர் போலீஸார். போலீஸார் உள்ளே புகுந்த நேரத்தில், நிறுவனத்தில் இருந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் பொட்டு சுரேஷின் நெருங்கிய நண்பர். அத்துடன் யோகா அன்கோ நிறுவனத்தில் பொட்டு சுரேஷின் பார்ட்னரும் இவர்தான்!
அந்த அலுவலகத்தில் 4 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதில் 5 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று சொல்லிக் கொண்டு ஸ்டேஷன் திரும்பினார்கள் போலீஸ்.
ஆவணங்கள் சொன்னதெல்லாம், பொட்டுவுக்கு அந்த நிறுவனத்தில் பங்கு உள்ளது என்பதைத்தான்! அது ஒரு கிரிமினல் குற்றமா? ஒரு நிறுவனத்தில் பொட்டு பங்குதாரராக இருந்த காரணத்துக்காக ஜெயிலில் அடைக்க முடியுமா? அந்த விஷயம் புஸ்ஸ்ஸ்!
அதையடுத்து, பொட்டுவை தனிப்பட்ட முறையில் சிக்க வைப்பதைவிட, அவரை வைத்து அழகிரியை வழக்குகளில் இழுத்துவிடலாம் என்ற அடுத்த ப்ராஜெக்ட் ஒன்று ஓடியது. அழகிரியைச் சிக்க வைப்பதென்றால், மதுரையில் பொட்டு சுரேஷ் அல்லது எஸ்ஸார் கோபியை தாஜா பண்ணி அப்ரூவர் ஆக்க வேண்டும் என்பதை போலீஸ் அறிந்திருந்தது.
இதில் எஸ்ஸார் கோபி, அழகிரியின் பழைய ஆள். 1990-களில் இருந்தே அழகிரியுடன் தொடர்பில் இருப்பவர்.
1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, அழகிரி ஆதரவாளர்கள் பலருக்கு பதவிகள் கிடைத்தன. அப்போது எஸ்ஸார் கோபிக்கு பதவி ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், அவரது ஆட்கள்தான் அழகிரியின் தனிப்பட்ட பாதுகாப்பைக் கவனித்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட பர்சனல் பாடிகார்ட் போல!
தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டபோது, அழகிரி, மன்னன் ஆகியோருடன், எஸ்ஸார் கோபியும் கைது செய்யப்பட்டவர். அந்தளவுக்கு பழைய பின்னணி இருக்கிறது அவருக்கு. அவரை லபக் என்று பிடித்து உள்ளே போட்டது மதுரை போலீஸ்.
எஸ்ஸார் கோபி கைது செய்யப்பட்ட வழக்கு, அவனியாபுரம் (மதுரை) ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை சம்மந்தமானது. போலீஸ் காவலில் அவரை எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு செய்திருந்தது போலீஸ். கோர்ட், ஒரே ஒரு நாள் மாத்திரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
அந்த ஒரு நாள், எஸ்ஸார் கோபியை சத்திரப்பட்டி ஸ்டேஷனில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அன்றைய தினமே அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
அந்த வாக்குமூலத்தில், “தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷின் உத்தரவுப்படி, ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை கொலை செய்தோம்” என்று எஸ்ஸார் கோபி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டதாக நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தனர் பொலீஸார்.
போலீஸ் விசாரணைக்கான ஒரு தினம் முடிவடைந்து, 7வது மாஜிஸ்திரேட் ஜான் சுந்தர்லால் முன்னிலையில் எஸ்ஸார் கோபி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மாஜிஸ்திரேட், “உங்களிடம் வாக்குமூலம் ஏதாவது பெறப்பட்டதா?” என்று கேட்ட கேள்விக்கு, எஸ்ஸார் கோபியிடமிருந்து அலாதியான பதில் ஒன்று வந்தது.
“போலீஸ் காவலில் போலீசார் சொல்லிக் கொடுத்ததை, அப்படியே கூறும்படி என்னிடம் கூறினர். அதன்படி போலீசார் சொல்லி நான் கூறியதை வீடியோவில் பதிவு செய்து எனது வாக்குமூலமாக எடுத்துக் கொண்டனர்” என்பதே அவரது பதில்.
மொத்தத்தில், போலீஸின் ஒரு நாள் விசாரணையில் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி விட்டு, அன்றைய தினம் முடிந்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டபோது, கதையைத் தலைகீழாக திருப்பி விட்டார் எஸ்ஸார் கோபி. அவர் கொடுத்த வாக்குமூலம், ‘மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலம்’ என்ற வகைக்குள் வந்துவிட்டது.
“போச்சுடா” என்று கையை உதறிய அப்பாவியான மதுரை போலீஸ், அடுத்து பொட்டு சுரேஷை தாஜா செய்யத் தொடங்கியது. பொட்டுவாவது நீதிமன்றத்தில் ‘சரியாக’ சொல்வாரா என்பதே எதிர்பார்ப்பு.
பாட்சா படத்தில் ரஜினிகாந்த், “எனக்கு இன்னொரு பேரும் இருக்கு” என்று ஒரு டயலாக் அடிப்பார். அதன்பின்தான் அவரது ‘இன்னொரு பெயரின்’ பிளாஷ்பேக் காட்சிகள் வரும். அதேபோல பொட்டு சுரேஷ், வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், பொட்டுவுக்கும் ‘இன்னொரு பின்னணி’ இருந்தது.
பொட்டு சுரேஷ் அழகிரியிடம் வந்து சேர்ந்தது எஸ்ஸார் கோபி வந்து சேர்ந்ததன் பின்னர்தான். அதற்குமுன் பொட்டு எங்கே இருந்தார் தெரியுமா? அ.தி.மு.க.-வில்!
அ.தி.மு.க. ஆட்சியில் ராஜன் செல்லப்பாவின் சில ‘நிழலான’காரியங்களைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் சாட்சாத் இதே பொட்டு சுரேஷ்தான்.
பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் சேர்ந்தார். தி.மு.க.-வுக்கு பொட்டு வந்தது, மதுரை ஜில்லாவில் ஊர்ஊராக போய் தி.மு.க. கொள்கைகளை மேடை போட்டு விளக்குவதற்கா? சேச்சே, அதல்ல. அ.தி.மு.க.-வில் ராஜன் செல்லப்பாவுக்கு என்னென்ன பணிகளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தாரோ, அதே திருப்பணிகளை தி.மு.க.வில் மன்னன், மிசா பாண்டியன், தளபதி ஆகிய மூவருக்கும் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்தத் திருப்பணிகள் பொட்டுவின் ‘ஸ்பெஷல் டச்’சுடன் இருக்கவே, மதுரை தி.மு.க.வில் “யாரையா இந்தாள்? அட்டகாசமாக தட்டி விட்டு வருகிறாரே?” என்ற வியப்புப் பார்வை பொட்டுவின்மீது பதிந்தது.
‘பொட்டு’-வின் ஒவ்வொரு ‘தட்டு’ம் புத்தனாம்பட்டிக்கு போய் ‘கட்டு’ போட வைக்கும் அளவுக்கு காரம் மணம் குணம் நிறைந்து இருக்கும்.
அதற்கும் பின்னர்தான், அழகிரியின் நம்பிக்கை வட்டத்துக்குள் வந்தார். அழகிரிக்கு வலது கரம் ஆனார். எஸ்ஸார் கோபி, மன்னன், மிசா பாண்டியன், தளபதி எல்லோரையும் ஓவர்-டேக் பண்ணி அழகிரியின் தளபதி என்ற அந்தஸ்தை படித்தார்.
சரிங்க. பொட்டு தி.மு.க.-வுக்கு வருவதற்கு முன்பு, அ.தி.மு.க.-வில் யாரே ஒருவருக்கு சில ‘நிழலான’ காரியங்களைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சொன்னீங்களே.. அவரேட பேரு என்னங்க? ஆங்.. ஞாபகம் வந்திரிச்சு… ராஜன் செல்லப்பா! இவரு இப்ப என்ன பண்ணிட்டு இருக்காரு?
கடந்த மாதம் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 3,12,226 வாக்குகளைப் பெற்று, மதுரை மேயராக இருக்காருங்க!
-மதுரையிலிருந்து அதிபன் தங்கராசுவின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக