சனி, 12 நவம்பர், 2011

தாதா' தாவூத் இப்ராகிமுக்கு கடும் மாரடைரப்பு- இறந்தால் மும்பையில் உடலைப் புதைக்க விருப்பம்!

கராச்சி: பல காலமாக பாகிஸ்தானில் முகாமிட்டபடி சொந்த நாடான இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பல்வேறு தீவரவாத செயல்கள், கடத்தல், மிரட்டல், பணம் பறித்தல், கொலை என சகலவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்த தாவூத் இப்ராகிம் தற்போது மரணப் படுக்கையில் இருக்கிறார். 2வது முறையாக அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் மரணமடைந்தால் தனது உடலை மும்பையிலோ அல்லது அதற்கு அருகில் உள்ள தனது சொந்த ஊரிலோ அடக்கம் செய்யுமாறு தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளாராம் தாவூத். இந்தியாவால் தேடப்பட்டு வரும் நம்பர் ஒன் குற்றவாளி தாவூத் இப்ராகிம். மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் கேட் என்ற ஊரைச் சேர்ந்தவர். ஆனால் தான் ஒரு இந்தியர் என்பதையே மறந்து, இந்தியாவுக்கு எதிராக, அதிலும், தான் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள மும்பையைக் குறி வைத்து பலமுறை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் தாவூத். பல்வேறு விதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தார். இவரால் மும்பைக்குப் பெருமை கிடைக்கவில்லை, மாறாக புண்பட்டுப் போனதே மிச்சம்.
இப்படிப்பட்ட தாவூத் மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த பயங்கர தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றினார். இந்த சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி விட்டார். கராச்சியில் செட்டிலானார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தாவூத்தை தத்தெடுத்துக் கொண்டது. அவர்களின் பாதுகாப்பில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதப் போரைத் தொடுத்து வந்தார் தாவூத். தாவூத்தை ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கோரியபோதிலும், தாவூத்தா, அப்படின்னா யாரு என்ற ரீதியில் கேட்டு வருகிறது பாகிஸ்தான்.
இந்த நிலையில் தற்போது தாவூத் மரணத்தின் பிடியில் சிக்கியுள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாராம். அவருக்கு 2வது முறையாக கடும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் தனது வாழ்நாட்கள் எண்ணப்படுவதாக தாவூத்தே கூறியுள்ளார். மேலும் அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்களாம்.
56 வயதாகும் தாவூத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடன் இருக்கிறார்களாம்.
இந்த நிலையில் தான் மரணமடைந்தால் தனது உடலை மும்பையிலோ அல்லது சொந்த ஊரான கேட் நகரிலோ அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாராம் தாவூத். மேலும் தனது உடலை புதைக்க பொருத்தமான இடத்தைப் பார்த்து வைக்குமாறும் மும்பையில் உள்ள தனது ஆட்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு தலைவர் ஹிமன்ஷு ராய் கூறுகையில், இதுகுறித்து எங்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது. தாவூத்தின் ஆட்கள் புதைப்பதற்கு இடம் தேடி வருகிறார்கள்.அது உண்மைதான் என்றார்.
1955ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பிறந்தவர் தாவூத். அவரது மனைவி பெயர் ஜுபீனா சரீன். தாவூத்துக்கு மொத்தம் ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன்தான் கடைசிப் பிள்ளை. தனது மூத்த மகளை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்தத்தின் மகனுக்கு கல்யாணம் செய்து கொடுத்துள்ளார். மகனை இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளுக்குக் கட்டிக் கொடுத்துள்ளார். இன்னொரு மகளின் கல்யாணம்கடந்த ஆண்டுதான் நடந்தது.
இந்தியாவால் மட்டுமல்லாமல் அமெரிக்காவாலும் கூட தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர் தாவூத். நியூயார்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னர் சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா,தாவூத்தை அறிவித்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து கொலை வெறித் தாக்குதலை நடத்திய சம்பவத்திலும் கூட தாவூத்துக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
டி கம்பெனி என்ற பெயரில் தாவூத்தும் அவரது கூட்டாளிகளும் அழைக்கப்படுவது வழக்கம். தாவூத்தின் ஆட்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளிலும் இந்தக் கும்பல் செயல்பட்டு வருகிறது. தீவீரவாத செயல்கள, கடத்தல், ஆள் கடத்தல், பணம் பறித்தல், போதைப் பொருட்கள் விநியோகம், கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது என எல்லாவிதமான சட்டவிரோத செயல்களிலும் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.
தாயக இந்தியாவை சிதறடித்து, நாசப்படுத்தி, பல காலமாக அட்டூழியகங்களைச் செய்து வந்த தாவூத் தற்போது மரணப் படுக்கையில் இருப்பதாக வந்துள்ள செய்தி, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், சர்வதேச அளவிலும் உள்ள தாவூத் ஆதரவாளர்களுக்கு ஒரு சோகச் செய்தியாக அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக