சனி, 5 நவம்பர், 2011

கால் கைகள் உடைக்கப்பட்டு வரும் இங்குள்ள கைதிகளுக்கு இந்த உப்புதான் வைத்தியப் பொருள்.

Ltte torture camp 051111புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (21)
21. உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
ltte toture081111நான் சிறைக்குள் மீண்டும் சென்றதும் அங்கிருந்த எல்லோரும் என்னை உற்று உற்றுப் பார்த்தனர். குறிப்பாக அவர்கள் எனது முதுகுப் பக்கத்தை அவதானிப்பதை உணர்ந்தேன். அதற்குக் காரணம் என்ன என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். அதை எனக்கு விளக்கிக் கூறியவர் எனக்கு அருகில் இருந்த வயோதிபர்தான். ஆனால் அதை அவா பல நாட்கள் கழித்துத்தான் சொன்னார்.

அவர் தெரிவித்த தகவல்களிலிருந்து, என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்ற வசீகரன் என்பவன், அங்கு மிகவும் பிரபலமான (கர்ணகடூரமான) ஒரு விசாரணையாளன். அவனது குறியீடு (Trade Mark) அவன் விசாரணைகளின் போது எப்போதும் வைத்திருக்கும் அந்த காய்ந்த தென்னம்பாளைதான். அந்தப் பாளையால் அவன் முதுகில் குறி வைக்காத நபர்கள் அங்கு இல்லையென்றே சொல்லலாம். வேறொரு விசாரணையாளன் விசாரணை செய்யும் கைதியைக்கூட அவனுடைய அந்தப் பாளை பதம் பார்க்கும். அவன் அவ்வாறு கட்டறுந்த காளையாக செயல்படுவதற்கான தைரியத்தை, அந்த முகாமுக்குப் பொறுப்பாக இருந்த காந்தியிடம் அவனுக்கு இருந்த  செல்வாக்கு வழங்கிக் கொண்டிருந்தது.

வசீகரனுக்கு மட்டுமின்றி, அங்கு விசாரணையாளர்களாக இருந்த ஒவ்வொருவருக்கும் விசேடமான குறியீடுகள் உண்டு. சிலருக்கு இரும்புக் கம்பிகள். சிலருக்கு மரக்கட்டைகள். வேறு சிலருக்கு மின்சாரக் கேபிள்கள். மிளகாய்த்தூள் இப்படிப்பலப்பல. எனது முதுகில் அவனது தென்னம்பாளை அடியால், சிறு சிறு கீறல் காயங்கள் ஏற்பட்டு, எரிவையும் வலியையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதை எனக்குப் பக்கத்திலிருந்த அந்த வயோதிபர் அவதானித்துவிட்டு மிகவும் மனம் வருந்தினார். பின்னர் அங்கிருந்த ஒரு கைதியிடம் சென்று ஏதோ கதைத்தார். அந்தக் கைதி என்னைப் பின்பக்கமாக அழைத்துச் சென்று, ஒரு தேநீர்க் குவளையில் சிறிது கறி உப்பை போட்டுக் கரைத்துவிட்டு, அதை எனது முதுகில் தடவினார். உப்புப் பட்டதும் அந்த இடம் மிகவும் எரிவாக இருந்தாலும், அது அவசியம் என்பதால் பொறுமையுடன் தாங்கிக் கொண்டேன்.

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்றொரு சொல் வழக்கு தமிழில் உண்டு. சிலரின் உதவியை நன்றி கூறுவதற்கு ‘அவனது உப்பைத் திண்டு வளர்ந்தவன் நான்’ எனவும் சொல்வதுண்டு. உப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்க, ‘உப்பில்லாப் பண்டம்’ குப்பையிலே என்று குறிப்பிடுவதுமுண்டு. இந்திய சுதந்திரப் போரின்போது, பிரிட்டிஸாருக்கு எதிராக காந்தி நடாத்திய உப்புச் சத்தியாக்கிரகம் உலகப் புகழ் பெற்றது. ஆனால் இவ்வளவு அத்தியாவசியமான உப்பு எல்லா நாடுகளிலும் விளைவதில்லை. (இந்த விடயத்தில் இலங்கையர்கள் கொடுத்து வைத்தவர்கள்) உப்புக்காக முன்னைய காலங்களில் சில நாடுகளுக்கிடையில் போர் நடந்த வரலாறுகளும் உண்டு. ஆதிகாலத்திலிருந்து தெய்வ வழிபாடுகளில் உப்பும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று வந்துள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த உப்புக்கு, புலிகளின் இந்தச் சிறைச்சாலையிலும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் அந்த முக்கியத்துவம் வேறு வகையானது. இங்கு கைதிகள் மீது புலிப் புலனாய்வாளர்களால் நடாத்தப்படும் விசாரணைகளின் போது ஏற்படும் உடற் காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதானால், நிச்சயமாக விசேட முறிவு தறிவு வைத்தியர்களைக் கொண்ட ஒரு வைத்தியசாலையும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளும் அத்தியாவசியம். ஆனால் அந்தவிதமான ஏற்பாடுகள் எதுவும் இங்கு கிடையாது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

‘சூப்’ வைப்பதற்காக ஆட்டுக்கால் எலும்பைத் தட்டி உடைப்பது போல, தினமும் கால் கைகள் உடைக்கப்பட்டு வரும் இங்குள்ள கைதிகளுக்கு இந்த உப்புதான் வைத்தியப் பொருள். உப்பே இங்கு எல்லாவிதமான துன்பங்களுக்குமான ‘சர்வரோக நிவாரணி’. இந்த நிலையில் விசாரணையின் முதல் நாள் ருசியை அனுபவித்துவிட்டு வந்த எனக்கும், அந்த உப்புதான் இப்பொழுது நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இனிமேல் என்மீது நடாத்தப்பட இருக்கும் ‘விசாரணைகளுக்கும்’ இந்த உப்புதான் ஆபத்பாந்தவனாக இருக்கப் போகின்றது என்பது நிச்சயம்.

இந்த உப்பைக்கூட, இங்குள்ள கைதிகள் மிகவும் இரகசியமாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், அந்த உப்பைப் பெறவே அவர்கள் சாதுரியமாக சில தந்திரோபாயங்களைக் கையாண்டுதான் பெற்றிருக்கிறார்கள். முதன் முதலாக அவர்கள் சாதாரண முறையில் அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் உப்புக் கேட்டபோது, “என்ன தேவைக்கு உப்பு?” என புலிகள் வினாத் தொடுத்திருக்கிறார்கள்.

அதற்கு என்ன பதிலைச் சொல்வது என அவர்கள் தடுமாறிய நேரத்தில், ஒருவர் முன்வந்து மிகவும் சாதுரியமான முறையில், “சில வேளைகளில் எங்களுக்குத் தரும் பொங்கல் மிஞ்சிப் போகிறது. அதை நாங்கள் வீணாக்காமல் தண்ணி ஊத்தி வைச்சு, காலையில் உப்புப் போட்டுக் கரைச்சுக் குடிக்கத்தான் உப்புக் கேக்கிறம்” என விளக்கி, அந்த உப்பைப் பெறுவதற்கு வழிவகுத்துவிட்டார். (முன்பொருமுறை மிகுதியான பொங்கலை அங்குள்ள மலசல கூடக் குழிக்குள் கொட்டியதற்காக அங்குள்ள தைகிகளுக்கு மோசமான ;தர்மஅடி’ கிடைத்ததாகப் பின்னர் அறிந்தேன்)

உப்பு வைத்தியத்தை முடித்துக்கொண்டு, மதிய போசனத்தை (சீன வெள்ளையரிசி சீனிப் பொங்கல்) உண்டபின், அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். கூண்டுப் பறவையாகிப் போனபின்னர்தான், வெளியுலகின் புலக்காட்சிகளின் அருமையும், நமது உறவுகளின் நட்பார்ந்த தொடர்புகளின் மகிமையும் ஒருவருக்குத் தெரிய வரும் என்பதை அப்பொழுதுதான் நான் மிகவும் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டேன். மனிதன் ஒரு சமூகப்பிராணி என்ற வகையில், அவன் அதிலிருந்து பிரிக்கப்படும்போது ஏற்படும் மன உளைச்சல் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது.

எனது குடும்பத்தினர்களின் முகங்களும், என்னுடன் நாளாந்தம் பழகும் தோழர்களின் உருவங்களும், எமக்குப் பழக்கமில்லாவிடினும் நாம் நாளாந்தம் காணும் மனிதர்களின் தோற்றங்களும் மனக்கண்ணின் முன்னால் அடிக்கடி வந்து, எனது அகவுணர்வை எங்கெங்கெல்லாமோ அழைத்துச் சென்றது. இனிமேல் இங்கிருக்கும் என்போன்ற கைதிகள்தான் எனது உறவுகள். அவர்களுடன்தான் எனது நன்மை தின்மைகளை இனிமேல் பகிரப் போகின்றேன். அதுகூட எவ்வளவு காலத்துக்கோ? பொதுவாக மனிதர்கள் கூறிக்கொள்வது போல, என் தலைவிதி எவ்வாறு எழுதி வைக்கப்பட்டிருக்கிறதோ? அதை புலிகள் எவ்வாறு மாற்றி எழுதப்போகின்றனரோ? சிந்தனை எங்கெங்கெல்லாமோ சுழன்று வந்தது.

கண்களை மூடி சிந்தனை வயப்பட்டிருந்த எனது நினைவலைகளை, “மணியம்” என்ற உரத்த குரல் அறுத்தெறிந்தது. வாசலை நோக்கினேன். வாயிற்காப்போன் ஆதவன் இன்னொருவனுடன் சிறை வாசலில் நின்றிருந்தான். நான் அவர்கள் அருகில் சென்றேன். இரும்புக் கதவைத் திறந்து என்னை வெளியே வரும்படி அழைத்தனர். நான் சங்கிலிக் காலுடன் அவர்களுடன் தத்தி நடந்தேன்.

போகும்போதே தெரிந்துவிட்டது. காந்தியிடம் அழைத்துச் செல்கிறார்கள். என்னை முதன் முதலாகச் சந்தித்த அதே இடத்தில,; அதே வேப்ப மரத்தின் கீழ் காந்தி ‘வீற்றிருக்கிறான்’. வழமைபோலவே அந்த இரு பொமனேரியன் நாய்களும் இரு மருங்கிலும் வளர்த்தவன் முகத்தைப் பார்த்த வண்ணம் படுத்திருக்கின்றன. அவனது நெடிதுயர்ந்த உருவமும், சுருள் தலைமுடியும், முரட்டு மீசையும், உருட்டும் விழிகளும், எப்பொழுதும் சினத்துடன் தோற்றமளிக்கும் உருவமும், அன்று சற்று மிதமாக இருப்பதாகத் தோன்றியது.

நான் அருகில் சென்றதும், என்னை உற்றுப்பார்த்த அவன், தனக்கு முன்னால் இருந்த பின்னல் கதிரையைச் சுட்டிக்காட்டி, அதில் இருக்கும்படி சைகை செய்தான். நான் சற்றுத் தயங்கிப் பின்னர் அதில் இருந்தேன்.

அவன் என்னை ஆழமாக உற்று நோக்கிவிட்டுத் தனது கையில் இருந்த உருண்டையான தடியினால் எனது தோளில் பலமாக ஒரு தட்டுத்தட்டிவிட்டு, “என்ன பயமாக இருக்குதா?” எனக் கேட்டுவிட்டு, முழிகளை உருட்டி என்னைப் பார்த்தான். நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்

“என்னடா நான் கேட்கிறேன். நீ பேசாமல் இருக்கிறாய். நல்ல பூசை போட்டால்தான் வாய் திறப்பியள் போலை” என்று கூறிவிட்டு, எனது தலையில் அந்தக் கொட்டனால் ஒரு தட்டுத்தட்டினான். எனது மூளை ஒருமுறை கலங்கித் தெளிந்தது.

நான் அவனைக் கெஞ்சலாகவும் பரிதாபமாகவும் பார்த்தேன். ஏனெனில் அவன் அந்தக் கொட்டனால் எனது மண்டையைப் ‘பதம் பார்க்க’த் தொடங்கினால், எனது கதை அதோ கதிதான். என்னை சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை. அது ஒரு விநாடி வேதனைதான். ஆனால் உடலின் உயிர்நாடியான மூளையில் கொட்டனால் தாக்கி, அதன் காரணமாக நான் சிந்தனா சக்தியை அல்லது உடல் இயக்கத்தை இழந்தால், அதனால் படும் வாழ்நாள் முழுவதும் மரண அவஸ்தையை நினைக்கப் பயமாக இருந்தது. எனவே, அவனை அந்த நிலைக்குச் செல்லாதவாறு என்னவிதப்பட்டும் தடுத்துவிட வேண்டும் என எண்ணினேன்.

அவன் என்னைப் பார்த்து பயங்கரமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பின் அர்த்தம் என்னவென்று விளங்கவில்லை. ‘நீ எனது விளையாட்டுப் பொம்மை’ என்று தெரிவிக்கிறானா அல்லது ‘உனது தலைவிதி என்னுடைய கையில்’ என்று உணர்த்துகிறானா அல்லது ‘உன்னுடைய முடிவுக்கு முன்னர் இப்படித்தான் நாம் நடந்து கொள்வது வழமை’ என புரிய வைக்க முயல்கிறானா? அது எதுவாக இருந்தாலும், எவையுமே என்னைப் பொறுத்தவரை சந்தோசத்துக்குரிய நடவடிக்கைகள் அல்ல.

சிறிதுநேரம் அமைதி நிலவியது. பின்னர் அவன் என்னைப் பார்த்து, “உள்ளே சாப்பாடு எல்லாம் எப்படி?” என்று வினவினான். நான் இன்னொரு அடியைத் தவிர்ப்பதற்காக, “பரவாயில்லை” என்றேன்.

“அப்படியென்றால், திறம் எண்டு இல்லை, அப்படித்தானே” எனத் திடீரெனக் கேட்டான். ‘இதென்னடா சோதனை?’. ஏன எண்ணிக்கொண்டு, “இல்லை நல்லாய் இருந்தது!” என்றேன். “எதுவும் பிர்ச்சினையெண்டால் பயப்பிடாமல் என்னட்டைக் கூறலாம்!” என்று முடித்தான். எல்லா குள்ள நரிகளும் செய்யும் உபதேசம்தான்!

பின்னர் தனது இரண்டு பக்கமும் அவனது முகத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த பொமனேரியன் நாய்களைத் தடவிக் கொண்டே, என்னை நோக்கி திடீரென கேள்வியொன்றை வீசினான்.
“உன்னுடைய பிறஸ் (அச்சக) சாமனெல்லாம் எங்கை வைச்சிருக்கிறாய்?”

‘ஓகோ..சுற்றி வளைத்து அங்கேயா வருகிறாய்’ என எண்ணிக் கொண்டேன். அவன் எனது பதிலுக்கு பொறுமையின்றிக் காத்திருப்பதாகத் தோன்றியது. ‘இன்னொருமுறை அவனது கையிலிருந்த பொல்லு என்னை நோக்கி உயர விடக்கூடாது’.

அவனது கேள்விக்கு பதிலளிக்கத் தயாரானேன்.

தொடரும்
முன்னைய பதிவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக