புதன், 16 நவம்பர், 2011

மார்வாடிகள் சதி? அங்காடிதெரு(ரங்கநாதன்) இடிப்பு ?

சவுகார்பேட்டை தெருவில் வசிக்கும் மார்வாடிகள் எத்தனை கட்டடங்களை கட்டி வைத்திருக்கிறார்கள். இவர்கள் தெருவில் சாலையின் நீளமே வெறும் பத்து அடிகள்தான். இவையெல்லாம் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பார்வையில் விதிமீறல்களாகத் தெரியவில்லையா?
விதிமுறை மீறி கட்டினா இப்படித்தான் ஆகும்’ என்கிற கடை முதலாளிகளுக்கு எதிரான பேச்சு ஒருபுறம், வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவான பேச்சு மறுபுறம் என இரண்டையும் வாங்கிக் கொண்டு அமைதியாய் இருக்கிறது தி.நகரின் கடை வீதிகள். விதிமுறை மீறிய கட்டடங்கள் என்கிற குற்றச்சாட்டோடு பத்து நாட் களுக்கும் மேலாய் மூடிக் கிடக்கின்றன வணிக வளாகங்கள்.
கடந்த 10-ம் தேதி அனைத்துக் கடை ஊழியர்கள், உரிமையாளர்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டு, கடைகளைத் திறக்குமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளையும் சீல் வைக்கும் முயற்சியை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொண்டிருக்கிறது. இதனால் அதிர்ந்து போன வர்த்தக அதிபர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 11-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘வரும் 30-ம் தேதி வரையில் வேறெந்த கடைகளுக்கும் சீல் வைக்கக் கூடாது’ என உத்தரவிட்டது.

தி.நகரின் ஆக்கிரமிப்பும், விதிமுறை மீறிய கட்டடங்களும் திடீரென்று நேற்று முளைத்த இடையூறுகள் அல்ல. கடந்த இருபது ஆண்டுகளாக கோலோச்சி வந்த ரங்கநாதன் தெருக் கடைகள் மீது இப்போது மட்டும் தீவிரப் பார்வை விழ என்ன காரணம்?
“ரங்கநாதன் தெருவில் 18 பெரிய கடைகள் இருக்கிறது. தற்போது சீல் வைக்கப்பட்ட கடைகள் நூறு. பெரிய நிறுவனங்களில் வேலை பார்க் கும் ஊழியர்களுக்கு சம்பளம், சாப்பாடு உள்ளிட்ட விஷயங்களுக்காக நாளொன்றுக்கு மூன்றரை லட்ச ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த பத்து நாட்களில் ஊழியர்கள் வேலை பார்க்காமலே ஒவ்வொரு நிறுவனமும், சராசரியாக 38 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறது.

10-ம் தேதி நடந்த ஒருநாள் போராட்டத்தில் தி.நகர் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மட்டும் 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இழப்புகளை எங்களுக்கு ஏற்படுத்தி தென்மாவட்ட வணிகர்கள் ஊரையே காலி செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்’’ எனச் சொல்லி ஆதங்கப்பட்டார் ரங்கநாதன் தெருவில் கடை விரித்திருக்கும் பெரிய வணிகர் ஒருவர்.
இந்த ‘சீல்’ முயற்சிகளுக்கு யார் காரணம்?

“ரங்கநாதன் தெருக் கடைகள் மட்டும்தான் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கிறதா? அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு எனப்படும் ரேடியோ மார்க்கெட்டில் சிறிய சந் துகளில் ஆயிரக்கணக்கான கடைகள் இருக்கிறதே? இங்கு நாளொன்றுக்கு நூறு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறதே? இந்தக் கடைகள் அனைத்தும் சரியான விதிப்படி கட்டப்பட்டதா? சவுகார்பேட்டை தெருவில் வசிக்கும் மார்வாடிகள் எத்தனை கட்டடங்களை கட்டி வைத்திருக்கிறார்கள். இவர்கள் தெருவில் சாலையின் நீளமே வெறும் பத்து அடிகள்தான். இவையெல்லாம் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பார்வையில் விதிமீறல்களாகத் தெரியவில்லையா?
அதிலும் லட்சக்கணக்கான வியாபாரிகள் செய்வது இங்கு கறுப்புப் பண வியாபாரம்தான். இவர்கள் கடைகளில் இரண்டு பேர் இருந்தாலே போதும். கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுவார்கள். ஆனால், நாங்கள் எங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சாப்பாடு போட்டு, அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்து லட் சக்கணக்கானோரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் செய்யும் சதி வேலைதான் எங்கள் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது’’ எனக் கொதி த்தார் பிரபல துணிக்கடை அதிபர் ஒருவர்.

உஸ்மான் ரோடு வணிகர் சங்க நிர்வாகி ஒருவர், “பதினைந்து ஆண்டுகளாகத்தான் தி.நகர் ரங்கநாதன் தெரு வளர்ந்து நிற்கிறது. அதற்கு முன்பெல்லாம் சவுகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பாரிமுனை மார்வாடிகள் துணிகள் வாங்க சூரத் செல்வார்கள். 100 ரூபாய்க்கு வாங்கும் துணியை 300 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்து வந்தார்கள். நாங்கள் வந்த பிறகு வெறும் இருபது ரூபாய் லாபத்தில் விற்றோம். மக்கள் எங்களின் தரத்திற்கும், எளிமைக்கும் அடிமையாகிப் போனார்கள். இதனால் மார்வாடிகளின் வியாபாரம் படுத்துவிட்டது.

எங்கிருந்தோ வந்த வடஇந்தியர்களுக்கு மத்தியில் மண்ணின் மைந்தர்களான நாங்கள் கடுமையான உழைப்பில் உருவானதுதான் ரங்கநாதன் தெரு. இதில் மண்ணைப் போட்டுவிட்டால் போதும் என அதிகார வர்க்கத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் எவர்சில்வர் பாத்திரம் என்றால் கிடைத்ததை வாங்குவார்கள். நாங்கள் வந்த பிறகு எந்தத் தகட்டில் வேயப்பட்டது? மும்பை ஸ்டீல், சேலம் ஸ்டீல் என பார்த்துப் பார்த்து பொருட்களை வாங்கிப் போட்டோம். அதேபோல், தங்கத்தின் தரம் குறி த்தெல்லாம் ரங்கநாதன் தெரு வந்த பிறகுதானே மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாரிக் குவித்துக் கொண்டிருந்த மார்வாடிகளுக்கு இந்த பதினைந்து ஆண்டுகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு முறையும் எங்களை அழிக்க திட்டமிட்டார்கள். இந்த முறை எங்கள் ஆணி வேரையே அசைத்திருக்கிறார்கள். இதில் அவர்கள் முழுமையான வெற்றியைப் பெற முடியாது. அரசின் கருணைப் பார்வை லட்சக்கணக்கான ஊழியர்கள் மீது விழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எந்த எதிர்ப்பையும் நாங்கள் சமாளிப்போம்’’ என்றார் உறுதியாக.

இந்த விவகாரத்தில் விசேஷமான அம்சம் என்னவென்றால், ரங்கநாதன் தெருக் கடைகள் விதிமுறைகளை மீறியதற்கு பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளே பொறுப்பு. இவர்கள் ‘மாமூலான’ விஷயங்களில் தீவிரம் காட்டியதால்தான் கட்டடம் இதுநாள் வரையில் தப்பித்து வந்தது. இப்போது வணிக அதிபர்கள் பெருத்த நஷ்டத்தால் கொந் தளிப்பில் உள்ளனர். நீதிமன்றத்தையும், அரசையும் சார்ந்து இருப்பதால் தற்போது அமைதி யாக இருக்கிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு தங்களிடம் மாமூல் வாங்கிய அதிகாரிகள் மீது மான நஷ்ட வழக்குத் தொடர திட்டமிட்டு வருகிறார்களாம். இதில் சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின்வாரியம் ஆகியவற்றில் லாபம் சம்பாதித்த அனைத்து அதிகாரிகள் பெயர்களையும் சேகரித்து விட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.

ரங்கநாதன் தெரு ஸ்தம்பிப்பதற்கு தாங்கள்தான் காரணம் என்பதை மறுக்கிறார்கள் சவுகார்பேட்டை மார்வாடிகள் சங்கத்தினர். “நீதிமன்ற உத்தரவின்படி தான் எல்லா வேலைகளும் நடந்து வருகிறது. நாங்கள் சதி வேலை செய்கிறோம் என்பதெல்லாம் அரசையும், நீதிமன்றத்தையும் குழப்பும் வேலை. யார் வந்தாலும் எங்கள் கடையில் வியாபாரம் நன்றாகவே நடக்கும்’’ என்கிறார்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாவிடம் பேசியபோது, “தென்மாவட்ட வணிகர்களை சீர்குலைக்க நடத்தப்பட்ட சதி இது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்க்க அரசு, நீதிமன்றம் என பல வழிகளில் போராடி வருகிறோம். பல கோடி ரூபாய் இழப்புகளுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம். வால்மார்ட் போன்ற மிகப் பெரும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் 51 சதவிகித அந்நிய முதலீட்டை இங்கு திணிக்கப் பார்க்கிறார்கள். வால்மார்ட் நிறுவனத்தின் மதிப்பே 13 லட்சம் கோடி ரூபாய். எங்களைப் போன்றவர்கள் காலி செய்துவிட்டுப் போய்விட்டால் அவர்கள் உள்ளே நுழைந்து விடலாம் என கணக்குப் போடுகிறார்கள். அரசு அதை அனுமதிக்காது என நம்புகிறோம். கடைகள் திறக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்’’ என்கிறார் தீவிரமாக.

வீதிக்கு வந்துள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் கவலை விரைவில் தீர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வணிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதே நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது தேவையான நடவடிக்கைதானே என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.!

தி.நகரில் கஞ்சித் தொட்டி...!

“ரங்கநாதன் தெருக் கடைகள் சீல் வைக்கப்பட்ட தால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதிக்கு வந்துள்ளனர். சரியான உணவுகூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆனால், சவுகார்பேட்டை மார்வாடிகள் கீழ்தளத்தில் கடைகளும், மேல்தளத்தில் வீடுகளும் கட்டியுள்ளனர். குறுகலான இந்த வீடுகளில் புற்றீசல் போல வடஇந்தியர்கள் வசிக்கின் றனர். இதேபோல்தான் ரிச்சி தெரு நிலையும். இங்கு மட்டும் பூகம்ப பாதிப்பு வராதா?

வெள்ள பாதிப்பு ஏற்படும் போது அரசு நிவாரணம் கொடுக்கிறது. தி.நகர் கடைகளில் வருமான வரி, விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. இதற்காகவே பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழர்களின் தொழில்களை முடக்குவதற்காக நடத்தப்படும் இந்தச் சதியை முறியடிக்க தமிழர் தொழில் பாதுகாப்பு இயக்கத்தை முத்துக்குமார் என்பவர் தலைமையில் தொடங்கியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக கஞ்சித் தொட்டியையும் ரங்கநாதன் தெருவில் திறக்க போகிறோம்’’ எனக் கொதிக்கிறார் இந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன்.

படங்கள்: ஞானமணி.
ஆ.விஜயானந்த்
thanks kumudam+vellaichamy muthukulathoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக