ஞாயிறு, 27 நவம்பர், 2011

சிம்புவுக்கு ரெண்டு முகம். கேரவனுக்குள்ள இருக்கும்போது ஒருவிதமா பேசுவார்.

ஏ.ஜே.முருகனை நினைவிருக்கிறதா? சிம்புவை ‘மன்மதன்’ ஆக்கிய மன்மதன் படத்தின் டைரக்டர். ‘இல்லையே, சிம்புதானே அந்தப் படத்தோட டைரக்டர்’ என்று நம்புபவர்களும் இன்றுவரை இருக்கிறார்கள். மன்மதனுக்காக சிம்புவுக்கும் முருகனுக்குமிடையே நடந்த லடாய் குறித்து செய்திகள் பரபரப்பாக அடிபட்டபோதுகூட முரு கனின் தரப்பில் கனத்த மௌனம்தான் பதில். அதே முருகன் தற்போது மனக்குமுறலில் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அவரைச் சந்தித்தபோது அத்தனையையும் கொட்டித் தீர்த்துவிட்டார்.

”நான் எழுதுன ‘மிஸ்டர் லவ்’ங்கிற கதையை 2001-ல் சிம்புகிட்ட சொன்னேன். கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சுடுச்சு. ‘என்னோட மூணாவது படமா இதுல நடிக்குறேன்’னு சொன்னார். ஆனால் சிம்புவின் ஆறாவது படமாதான் அது வந்தது. காரணம், சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர். அவருக்குக் கதை பிடிக்கலை.

மூணு வருஷம் ஓடிடுச்சு. பட பூஜைக்கு சில மாதங்களுக்கு முன்னால், சிம்பு என்னைக் கூப்பிட்டு ஒரு கண்டிஷன் போட்டார். ‘கதை, திரைக்கதைக்கு என்னோட பெயர் போட்டுக்குவேன். இதுக்குச் சம்மதிச்சாதான் நீ இந்தப் படத்துக்கு டைரக்டர்’ன்னு சிம்பு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். எனக்குத் தலை சுத்துச்சு. ‘பல வருஷமா ஆசைப்பட்ட டைரக்ஷன் சான்ஸாவது கிடைச்சுதே’ன்னு கடைசியில் சம்மதிச்சேன். அவர் நீட்டுன பாண்ட் பேப்பர்ல கையெழுத்துப் போட்டேன். அதற்குப் பிறகும் சிம்புவின் வில்லங்கம் தொடர்ந்தது. டைரக்டர்ங்கிற க்ரெடிட்டையும் எனக்குக் கொடுக்க அவருக்கு மனசில்லை. எனக்கு நெருக்கடி கொடுத்து, படத்துலர்ந்து துரத்த முயற்சி செஞ்சார்.
சிம்புவுக்கு ரெண்டு முகம். கேரவனுக்குள்ள இருக்கும்போது ஒருவிதமா பேசுவார். ஷூட்டிங் ஸ்பாட்ல வேற விதமா பேசுவார். முக்கியமான ஆட்கள் யாராவது வந்துட் டாங்கன்னா, கேவலமா திட்டுவார். ஷூட்டிங் முடிஞ்சதும், தண்ணியடிச்சுட்டுப் பல நாட்கள் அழுதுருக்கேன். ‘டார்ச்சர் தாங்காம நானா ஓடிடணும், அவரே படத்தை எ டுக்கணும்’ங்கிறது சிம்புவோட ப்ளான்.

எங்கப்பா ஒரு விவசாயி. என்னோட முதல் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்கு எங்கப்பாவை மேடைக்கு அழைச்சு கௌரவப்படுத்தணும்னு ஆசைப்பட்டேன். எனக்கே மேடையில் இடம் மறுக்கப்பட்டபோது, எங்கப்பாவுக்கு ஏது மரியாதை? டைட்டில் கார்டில்கூட என்னோட பெயர் ஒரு செகண்ட் நேரத்துல வந்துட்டுப் போயிடும்.

எந்தவொரு இடத்திலாவது அவரோட வல்லவனைப் பற்றி வாய் திறக்கிறாரா? சிம்புவோட கேரியர்ல மன்மதன்தான் அவருக்கு ஒரு அடையாளம் கொடுத்தது. அந்தப் பட த்தின் டைரக்டரா வெளியுலகத்துக்கு சிம்பு தன்னேயே காட்டிக்கிட்டார். ‘முருகன் டம்மி டைரக்டர்’ன்னு சில பத்திரிகைகளில் நியூஸ் வந்தப்போ நான் கதறி அழுதுருக்கேன். நான் டம்மியான ஆள்ன்னா, என்னை ஏன் சிம்பு டைரக்டரா போடணும்? நான் சிம்புக்கு மாமனா மச்சானா?

படம் முடிஞ்ச பிறகு, சிம்பு எனக்கு ஒரு டூ வீலர் வாங்கிக்கொடுத்தார். என் மனைவி சித்ராவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆனப்போ, 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார். மற்றபடி எனக்குப் பேசப்பட்ட மூணு லட்ச ரூபா சம்பளத்துலயோ, தெலுங்கு, கன்னட ரைட்ஸ் விற்றதுலயோ ஒரு காசு நான் வாங்கலை.

இத்தனைக்குப் பிறகும் சிம்பு மீது எனக்குக் கோபம் இல்லை.

என் வருத்தம் எல்லாம் ராஜேந்தர் மேலதான். நானெல்லாம் அவருக்கு ஒரு எதிரியா? எனக்கு ஒரு படம் கிடைச்சா, உடனே நியூஸ் அவருக்குப் போயிடுது. என்னை டைரக்டரா போட்டு படம் எடுக்க முன்வர்றவங்ககிட்ட, ‘முருகனுக்குத் தொழில் தெரியாது’ன்னு சொல்றார். ஒரு டி.வி. பேட்டியில் கூட ராஜேந்தர் என்னைப் பற்றி தவறாகப் பேசினார்.

‘‘என்னய்யா, உன்னைப் பற்றி டி.ஆர் ஃபிலிம் சேம்பர்ல கன்னாபின்னான்னு பேசுறார்னு ஒருத்தர் வந்து சொன்னார்’’ என்று என்னை வச்சுப் படமெடுக்க அட்வான்ஸ் கொடுத்து, மியூசிக் கம்போஸ் பண்ணின பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தைக் கைவிட்டார். முருகன்தான் ‘மன்மதன்’ படத்தின் உண்மையான டைரக்டர்’ன்னு யாரும் எனக்காகக் குரல் கொடுக்கலை. அதே போல ‘முருகனுக்கான வாய்ப்பை ராஜேந்தர் கலைச்சு விடுறார்’ என்றும் யாரும் சொல்ல மாட்டாங்க.

‘அவனுக்கு சினிமா தெரியாது. இவனுக்கு சினிமா தெரியும்’ன்னு சர்டிஃபிகேட் கொடுக்க, டைரக்ஷன் என்ன ராஜேந்தர் குடும்பச் சொத்தா? ஒரு சின்னப்பையனோட எதிர்காலத்தையும் குடும்பத்தையும் கெடுக்கலாமா? எல்லாத்தையும் மறந்து இத்தனை வருஷம் பேசாம ஒதுங்கியிருந்தேன். ராஜேந்தர் என்னை இப்படிப் பேச வச்சுட்டார்’’ என்று கண்களில் நீர் முட்ட, முடித்துக்கொண்டார் முருகன்..

இயக்குநர் ஏ.ஜே.முருகனின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க டி.ராஜேந்தரைத் தொலைபேசியில் அணுகினோம். ‘அப்படி யாரையுமே எனக்குத் தெரியாது. தெரியாதவங்களைப் பற்றி நான் இண்டர்வியூ கொடுக்க முடியாது’ என்று போனை வைத்துவிட்டார். நாம் மீண்டும் அவரை அழைக்க, ‘நான் யாரைப் பற்றியும் தப்பா பேசலை. எல்லாம் கடவுளுக்குத் தெரியும்’ என்று முடித்துவிட்டார் டி.ஆர்.

- ஆனந்த் செல்லையா,
படங்கள்: ஆர்.சண்முகம்
thanks kumudam+sasireka birmingham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக