வெள்ளி, 11 நவம்பர், 2011

கசாப் ஒரு தீவிரவாதி.. தூக்கில் போடுங்கள்: இப்போது சொல்கிறது பாகிஸ்தான்!


Kasab
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் ஒரு தீவிரவாதி, அவனை தூக்கில் போட வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவனே இல்லை என்று கூறி வந்தது பாகிஸ்தான். கடந்த 2009ம் ஆண்டு தான் அவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று ஒப்புக் கொண்டது.
இந் நிலையில் கசாப் ஒரு தீவிரவாதி தான் என்று திடீரென அந்த நாடு 'கண்டுபிடித்துள்ளது'.மாலத்தீவில் நடந்து வரும் சார்க் நாடுகளின் 17வது மாநாட்டில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அமைச்சர் மாலிக் நிருபர்களிடம் பேசுகையில், கசாப் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். அவனை தூக்கில் போட வேண்டும்.

பாகிஸ்தானின் நீதி விசாரணைக் குழு விரைவில் இந்தியப் பயணம் மேற்கொள்ளும். அப்போது, கசாப்புக்கு விரைவில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வழிவகுக்கப்படும் என்றார்.

லஷ்கர் ஏ தொய்பாவுக்கும் கசாபுக்கும் உதவிகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அந்த அமைப்புக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்த ஆதாரம் ஏதும் இல்லை என்றார்.

மும்பையில் கசாப் மற்றும் 9 தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 166 பேர் கொல்லப்பட்டது நினைவுகூறத்தக்கது. கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். அவனுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவன் மேல்முறையீடு செய்துள்ளான்.

மாலத்தீவு கடல் பகுதியில் இந்திய போர் கப்பல்கள்:

சார்க் மாநாட்டையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்கள் மாலத்தீவில் இருப்பதால், அந்த நாட்டின் கடல் பகுதியை ஒட்டிய பகுதியில் இந்திய போர்க் கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாலத்தீவின் கோரிக்கையை ஏற்று இந்தியா இந்த பாதுகாப்பை தந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக