திங்கள், 21 நவம்பர், 2011

சொத்து குவிப்பு வழக்கு- பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நாளை ஆஜர்

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
வருவாய்க்கு அதிகமாக ரூ. 66 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்தது தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூர் பரப்பன அக்ரஹாரவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த அக்டோபர் 20, 21ம் ஜெயலலிதா நேரில் ஆஜரானார்.
அப்போது நீதிபதி மல்லிகர்ஜூனைய்யா 571 கேள்விகளை ஜெயலலிதா கேட்டுள்ளார். மீதி கேள்விகள் பாக்கியுள்ளதால் நவம்பர் 8ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தவிர்ப்பதற்காக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் 8ம் தேதி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டும் செவ்வாய்கிழமை ஆஜரானார்கள். ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை.
வேறு தேதியில் ஆஜராக அனுமதி கேட்டு முதல்வர் ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா வரும் 22ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. தேவைப்பட்டால் 23ம் தேதியும் விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா நாளை பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக