சனி, 26 நவம்பர், 2011

புலிகளின் சித்திரவதை முகாம்கள் இருந்த இந்த வளவுகள் முறைப்படி அகழ்வாராய்ச்சி

deadbodyபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (24)
24. புலிகளின் முகாம்கள் இருந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்வது அவசியம்!
வசீகரனிடமிருந்து மீண்டும் விபரீதம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. “ஐயா தப்பீட்டியள்” எனச் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து அகன்றுவிட்டான். தயாபரனின் விசாரணை தொடர்ந்தது.

ஆனாலும் உண்மையான விசாரணை இன்னமும் ஆரம்பமாகவில்லை. அங்கு சென்றபின்னர்தான் புலிகளின் விசாரணை முறைகளை அறிந்துகொள்ள முடிந்தது. முதலில் அவர்கள் ஒருவரின் குடும்பப் பின்னணியை முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.
அதாவது என்னுடைய பெயர், தாய் தந்தையரின் பெயர்கள், சகோதரர்களின் பெயர்கள், அவர்களின் துணைவர்கள் மற்றும் பிள்ளைகளின் பெயர்கள், பிள்ளைகள் திருமணம் செய்திருந்தால் அந்த விபரங்கள், தாய் தந்தையரின் சகோதரர்களின் பெயர்கள், அவர்களது துணைவர்கள் பிள்ளைகளின் பெயர்கள் என அது நீண்டுகொண்டே போகும்.
அதுமாத்திரமின்றி, நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த இடங்கள், படித்த இடங்கள், செய்த வேலைகள், நெருங்கிய நண்பர்கள், திருமணம் செய்திருந்தால் மனைவியின் பிள்ளைகளின் பெயர் மற்றும் விபரங்கள், மனைவியின் குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள் என்பனவும் விசாணையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் ஏதாவது அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்களில் அங்கம் வகித்திருந்தால் அந்த விபரங்கள், வேறு பொது விடயங்களிலான ஈடுபாடுகள் எனப் பல விடயங்களைப் புலிகளின் விசாரணையாளர்கள் ஒவ்வொரு கைதியிடமும் முழுமையாக விசாரித்துப் பதிவு செய்து கொள்வர். அதன்படி என்னிடமும் பூரண விபரங்கள் பெறப்பட்டன. இந்த விசாரணையே இரண்டு மூன்று தினங்கள் நீடித்தன.விசாரணைகளின் போது தயாபரன் என்னிடம் ஓரளவு கண்ணியமாக நடந்துகொண்டான். முதல்நாள் விசாரணை நடந்து நான் சிறைச்சாலைக்குள் சென்றபோது, இரவு குற்றுயிரும் குறையுயிருமாக இரவு தூக்கிச் செல்லப்பட்ட அந்த புளொட் இயக்க வாலிபன் மரணமடைந்துவிட்டதாக சக கைதிகள் குசுகுசுத்ததை அவதானித்தேன். அவரது உடல் அந்த முகாம் இருந்த வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் பேசிக்கொண்டனர். அவ்வாறு முன்பும் விசாரணைகளின்போது கொல்லப்பட்ட பலரின் உடல்கள் அந்த வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டுள்ளதாகக் கைதிகள் கூறினர்.

இந்தக் தகவல்களில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், விசாரணைகளின் போது பலர் இறப்பது அடிக்கடி நிகழ்ந்து வந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. உதாரணமாக நான் அங்கு ஒரு கைதியாகச் சென்றபின்னர் கூட, பளைப் பகுதியிலுள்ள சின்னத்தாளையடி என்ற கிராமத்தில் நடந்த ஒரு இளம் ஆசிரியையின் கொலை சம்பந்தமாக சிலர் புலிகளால் கைதுசெய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே, அவர்களில் ஒருவரான எனக்கு நன்கு தெரிந்த இயக்கச்சி மல்வில் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரம் என்ற நெடிய திடகாத்திரமான இளைஞர் விசாரணைகளின் போதே அடித்துக் கொல்லப்பட்டார்!

புலிகளின் கைதிகளாக இருப்பவர்களில் பலா இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாக, மிலேச்சத்தனமான முறையில் கொல்லப்பட்டு வந்துள்ளதை, அவர்களின் பல சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் அறிவர். அவர்கள் கூறுவதுபோல, அவ்வாறு கொல்லப்பட்ட பலரின் உடல்கள் அந்த முகாம் வளவுகளுக்குள்ளேயே புதைக்கட்டுமிருக்கலாம். இதுபற்றி அரசாங்கம் எவ்வளவு அக்கறையுடன் ஆய்வுகளை மேற்கொள்கின்றதோ தெரியவில்லை.

பொதுவாகவே அரச இராணுவத்தினர் ஒரு பகுதியிலிருந்து புலிகளை விரட்டிய பின்னர், அங்கிருந்த புலிகளின் முகாம் கட்டிடங்களைத் தகர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளதை அறிய முடிகிறது. உதாரணமாக இங்கு இரண்டொன்றைக் குறிப்பிடலாம்.

1995 அக்டோபர் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளை இராணுவம் விரட்டிய பின்னர், எம்மைப் புலிகள் தடுத்து வைத்திருந்த ஆனைக்கோட்டையிலிருந்த Tank 2 என்ற முகாம் பகுதியை நானும், என்னுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ஒரு ஓய்வுபெற்ற அதிபரும் சென்று பார்வையிட்டோம். ஆனால் அங்கு முகாம் ஒன்று இருந்ததிற்கான அடையாளமே தெரியாதபடி, இராணுவத்தினர் அந்தக் கட்டிடத்தைத் தகர்த்து வெறும் கற்குவியலாக்கியிருந்தனர்.

அதேபோல வரணி எருவன் பகுதியிலிருந்த ‘மேல்வீடு’ எனப் புலிகளால் அழைக்கப்பட்ட பகுதியையும் சென்று பார்வையிட்டோம். அதுவும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அத்துடன் சாவகச்சேரி கல்வயல் பகுதியில் புலிகள் வன்னிக்குத் தப்பியோடுவதற்கு முன்னர், பிரபாகரன் தங்கியிருந்ததென அக்கிராம மக்களால் தகவல் தரப்பட்ட மிகுந்த பலமான பாதுகாப்புடன் கட்டப்பட்டிருந்த நிலக்கீழ் வீடொன்றையும் எமது நண்பர்கள் சிலர் சென்று ஆராய்ந்தபோது, அதுவும் இராணுவத்தால் சேதமாக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

புலிகளின் சித்திரவதை முகாம்கள் இருந்த இந்த வளவுகள் முறைப்படி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, அங்கு மரணமடைந்தவர்களின் உடல்கள் ஏதாவது புதைக்கப்பட்டுள்ளனவா என ஆராய வேண்டியது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத கடமைகளில் ஒன்று. அதைச் செய்வதற்குத் தேவையான தகவல்களை, இப்பொழுது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான புலி உறுப்பினர்களிடமிருந்தே அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரத்தில் இலங்கையில் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி ஓயாது அறிக்கை வெளியிடும் சர்வதேச மற்றும் மனித உரிமை அமைப்புகள், புலிகளினால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான மக்கள் பற்றியும் அக்கறை செலுத்தினால், அவர்களது மனித உரிமைப் பணிகள் பக்கச்சார்பின்றி அமையும். (துணுக்காயில் இருந்த புலிகளின் வதை முகாமில் வைக்கப்பட்டிருந்த 4,000 கைதிகளில் நூற்றுக்கும் குறைவானோரே விடுவிக்கப்பட்டனர். மிகுதியானோருக்கு என்ன நடந்தது என்பதைப் பின்னைய தொடர்களில் பார்ப்போம்)

எனது விசாரணையின் இரண்டாம் நாள், தயாபரன் நான் இருப்பதற்காக ஒரு இரும்பு நாற்காலியை வரவழைத்துத் தந்தான். அங்கு இருந்த சுமார் 15 வரையிலான விசாரணைக் குடில்களில் ஏககாலத்தில் விசாரணைகள் நடைபெறும். ஒருவரின் விசாரணைகளின் விபரங்கள் மற்றவருக்குக் கேட்காவிடினும், எதேச்சையாக அவர்களைப் பார்க்க முடியும். இடையிடையே கைதிகள் மீது விசாரணையாளர்கள் தாக்குதல் நடாத்தும்போது, அவர்களின் அபயக் குரல்களைக் கேட்கவும் முடியும். ஆனால் எல்லாக் கைதிகளும் விசாரணைகளின்போது, முன்னால் உள்ள நிலத்தில்தான் குந்தியிருக்க வேண்டும். கால்களில் இரும்புச் சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்தால், சௌகரியமாக உட்கார முடியாமல் மரண அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

அந்த வகையில் நான் ‘கொடுத்து வைத்தவன்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எனது விசாரணையாளன் தயாபரன் எனக்கு ஒரு நாற்காலி உபயம் செய்திருக்கிறான். காலில் சங்கிலிகளுடன் அவதிப்பட்ட எனக்கு அது ஒரு பெரும் ஆறுதலாக இருந்தது. அதுமாத்திரமின்றி காலையிலோ மாலையிலோ என்னை விசாரணை செய்யும் நேரத்தில் அவனுக்கு தேநீh வந்தால,; ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் எனக்கும் சிறிது தேநீர் வாங்கித் தந்தான்.

இதுவரை நடந்த விசாரணைகளில் தயாபரன் என்மீது வன்முறையை செயலளவிலோ சொல்லளவிலோ பிரயோகிக்கவில்லை. இது அவர்களது வழமைக்கு மாறாக இருந்தது. அத்துடன் இது புயலுக்கு முன்னர் தோன்றும் அமைதியோ என்ற அச்சமும் ஏற்பட்டது. ஆனால் அடிக்கடி அவன் என்னிடம், “இஞ்சை நீங்கள் ஒண்டையும் ஒளிக்கக்கூடாது. எல்லாத்தையும் ஒளிக்காமல் சொல்ல வேணும். அப்பிடி நடந்தியள் எண்டால் உங்கடை விசாரணை கெதியாய் முடிஞ்சு, கெதியாய் வீட்டை போகலாம். இல்லையெண்டால் வில்லங்கத்திலை மாட்டிறதோடை, கனகாலம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்” என எச்சரிக்கை செய்து வந்தான். இந்தப் பீடிகையும் எனக்குள் பலவித அச்சங்களை உருவாக்கி வந்தது.

1991 டிசம்பர் 26ம் திகதி என்னைக் கைதுசெய்ததிலிருந்து கடந்த 6 நாட்களாக தயாபரன் என்னிடம் நடாத்தி வந்த ஆரம்பகட்ட விசாரணைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றியது. காலையில் 9 மணியளவில் விசாரணைக்குப் போவதும், பின்னர் மதிய உணவுக்காக 1 மணி அளவில் திரும்பி வந்து, மீண்டும் 2 மணியளவில் விசாரணைக்குச் சென்று 5 மணி அளவில் அன்றைய விசாரணை முடிந்து திரும்பி வருவதுமாக தினசரி வாழ்க்கை கழிந்து வந்தது.

இந்த நாட்களில் விசாரணையில் கேட்கப்படும் கேள்விகள் ஒரு பக்கமும், வீட்டைப் பற்றிய கவலைகள் ஒரு புறமுமாக மன உளைச்சல் அதிகரித்துச் சென்றது. அன்றைய அந்தச் சூழ்நிலையில் ஏற்பட்ட உணர்வுகளை, 19 வருடங்களின் பின்னர் இன்று எழுதும் போது உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவது இயலாத காரியம்தான். சில விடயங்களை அனுபவபூர்வமாகத்தான் உணர முடியும். அவற்றில் சிலவற்றை எழுத்தில் ஓரளவு வெளிப்படுத்த முடியும். இன்னும் சிலவற்றை திரைப்படம் போன்றவற்றில்தான் அழுத்தமாக வெளிக்கொணர இயலும். ஆனால் ஒருவருடைய இந்த மாதிரியான துன்பியல் அனுபவங்களை எவ்வாறு வெளிப்படுத்த முடியும் என்பதற்கு, நிரந்தரமான நிலையான அளவுகோல்கள் எவையும் இருப்பதாக அறுதியிட்டுக் கூறிவிட முடியாது என்பதே உண்மை.

என்னைப் பொறுத்தவரை, நான் ஆனைக்கோட்டையிலுள்ள புலிகளின் வதை முகாம் ஒன்றில் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனது குடும்பத்தினருக்கோ நான் எங்கிருக்கிறேன் என்பது எந்தக் காரணத்தைக் கொண்டும் தெரிவதற்கு வாய்பில்லை. அதமாத்திரமில்லாமல், நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதுகூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நான் இங்கு எனக்குப் புலிகள் தரும் உடல் உள சித்திரவதைகளைத்தான் தாங்குகின்றேன். எனது வீட்டுக்காரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் என்னையிட்டு ஒவ்வொரு நிமிடமும் நிச்சயம் வேதனை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்து வெகுநாட்களாகிவிட்டன. தூங்கும் சொற்ப நேரத்தில்கூட பல கெட்ட கனவுகள் வந்து போயின. தூங்காத நேரங்களில் சிறுபராயம் முதல் நிகழ்ந்த சம்பவங்கள் மனதில் வந்து போயின. இரவில் கைதிகள் தூங்காமல் இருக்கக்கூடாது என்று கருதியோ என்னவோ, தினசரி காலையிலும் மாலையிலும் நடக்கும் கைதிகள் கணக்கெடுப்பு முடிந்த பின்னர், இரவு வேளைகளில் ஒவ்வொரு கைதிக்கும் கட்டாயப்படுத்தி இரண்டு இரண்டு ‘பிறிற்ரோன்’ குளிகைகள் தரப்பட்டன. அங்கிருந்த புலி உறுப்பினர்களில் ஒருவனான மெய்யப்பன் என்பவனே இந்தக் குளிகைகளை கைதிகளுக்குத் தினசரி வழங்குவான். அவனை கைதிகள் தமக்குள் கிண்டலாக ‘டாக்டா மெய்யப்பன்’ என்று அழைத்து, அந்தத் துன்பத்திலும் இன்பம் கண்டனர்.

இன்று 1992ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி. அதாவது புத்தாண்டு தினம். வெளியே எப்படியோ, உள்ளேயிருக்கும் எங்களைப் பொறுத்தவரை, வழமை போலவே இன்றைய காலையும் விடிந்தது. வழமை போல இன்றும் விசாரணைகள் தொடரும். சில விசாரணையாளர்கள் ‘கைவிசேடமாக’ அடிதடியுடன் விசாரணைகளை ஆரம்பிக்கவும் கூடும். எனது விசாரணைகூட இனி யுத்த காண்டத்தில் பிரவேசிக்கக்கூடும்.

களைகட்டாத புத்தாண்டுக் காலை நேரத்தில், வெளியில் தாம் இருந்த காலத்து புத்தாண்டு வேளைகளை நினைத்து கைதிகள் இரை மீட்பது அவர்களது முகபாவனையில் தெரிந்தது.

இந்த நேரத்தில் புலி உறுப்பினன் ஒருவன் வந்து, காந்தி என்னை அழைப்பதாகக் கூறி, என்னை வெளியே எடுப்பதற்கு சிறைக் கதவைத் திறந்தான்.

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக