வெள்ளி, 25 நவம்பர், 2011

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி கொல்லப்பட்டார்


Kishenji
கொல்கத்தா: மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி மேற்கு வங்கத்தில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்கத்தாவிலிருந்து ஒளிபரப்பாகும் டிவி சேனல்கள் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன. ஜார்கிராம் அருகே உள்ள குஷ்பானி வனப்பகுதியில் நடந்த சண்டையின்போது கிஷன்ஜி சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கூட்டுப் படையினர் இங்கு கிஷன்ஜி உள்ளிட்ட மாவோயிஸ்டுகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் இறங்கியதாகவும், அதில் கிஷன்ஜி கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டைக்குப் பின்னர் அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்தபோது கிஷன்ஜியின் உடலையும், அவருக்கு அருகே ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி இருந்ததையும் பாதுகாப்புப் படையினர் கண்டு மீட்டுள்ளனர். இந்த சண்டையில் கிஷன்ஜி தவிர மேலும் 3 மாவோயிஸ்ட்களும் கொல்லப்பட்டனர்.இந்த சண்டையின்போது கிஷன்யின் நெருங்கிய உதவியாளரான சுசித்ரா மகதோவும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அதே பகுதியில்தான் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுசித்ராவை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிஷன்ஜி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மேற்கு வங்க மாநில அரசுத் தரப்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனேகமாக கண்டெடுக்கப்பட்ட உடல் கிஷன்ஜியினுடையதாக இருக்கும் என்றார்.
2 ஆண்டுகளுக்கு முன்பும் கூட இதேபோலத்தான் கிஷன்ஜி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது தவறு என்பது பின்னர் தெரிய வந்தது.
ஒருவேளை தற்போது இறந்திருப்பது கிஷன்ஜிதான் என்பது உறுதியானால் அது மாவோயிஸ்ட்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிஷன்ஜிதான் மாவோயிஸ்ட்களின் மூளையாக, பலமாக திகழ்ந்து வருகிறார். அவர் வகுத்துத் தரும் உத்திகளைத்தான் சமீப காலமாக மாவோயிஸ்ட்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். கடந்த கால கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது மேற்கு வங்கத்தை கடுமையாக ஆட்டிப்படைத்தனர் மாவோயிஸ்ட்கள் என்பது நினைவிருக்கலாம்.
அப்போது கிட்டத்தட்ட மாவோயிஸ்ட்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வந்தார் மமதா பானர்ஜி. ஆனால் தற்போது அவர் ஆட்சிக்கு வந்ததும் மாவோயிஸ்டகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளார். தனது கட்சியைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட்கள் கொன்றதால் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில்தான் கிஷன்ஜி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிஷன்ஜி கொல்லப்பட்டிருந்தால் அது மேற்கு வங்க அரசுக்கு பெரும் சாதகமானதாக அமையும். அதேநேரத்தில், மாவோயிஸ்ட்கள் முழு வீச்சில் தாக்குதலில் இறங்கக் கூடும் என்ற அபாயமும் காத்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் தஙக்ளது கோபத்தைக் காட்ட முடியாமல் போனாலும் கூட ஜார்க்கண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அவர்கள் ஆவேசத் தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக