திங்கள், 14 நவம்பர், 2011

மதிய சாப்பாடு தருவதோடு, காதலுக்கும் தூது போகும் மும்பை டப்பாவாலாக்கள்?



மும்பை: மதிய சாப்பாட்டோடு காதல் கடிதங்களையும், பரிசுகளையும் கொண்டு வந்து கொடுத்து, காதல் தூதர்களாக மும்பை டப்பாவாலாக்கள் மாறியுள்ளனர்.
மும்பை, எப்போதும் பரபரப்புடன் இயங்கும் நகரம். போக்குவரத்து நெரிசலும் அதிகம். புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகம் வருவதற்கே பல மணி நேரம் ஆகிவிடும். 10 மணிக்கு தொடங்கும் அலுவலகத்துக்கு காலை 7 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டால்தான் முடியும். அப்போதுதான் 2 மின்சார ரெயில்கள் மாறி அலுவலகத்துக்கு குறித்த நேரத்துக்கு போய் சேரலாம்.  இதனால், பலர் மதிய உணவை கையோடு எடுத்துச் செல்வதில்லை. ஆனால், மதியத்துக்குள் வீட்டு உணவு அலுவலகத்துக்கு வந்துசேர்ந்துவிடும்.
இதற்கு உதவுவது டப்பாவாலாக்கள். வீட்டில் இருந்து டிபன் கேரியர்களை, டிபன் பாக்ஸ்களை வாங்கி, அதை குறித்த நேரத்தில் சம்பந்தப்பட்டவரிடம் சேர்க்கும் பணியை டப்பாவாலாக்கள் செய்கின்றனர். வீட்டில் இருந்து அலுவலகம் வருவதற்குள் நான்கைந்து இடத்தில் அந்த டிபன் கேரியர் வெவ்வேறு டப்பாவாலாக்களிடம் கைமாறும்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அந்த டிபன் கேரியர் அலுவலகத்தை சென்றடைந்துவிடும். மதியம் சாப்பிட்டு முடித்ததும், அதேபோல் நான்கைந்து இடத்தில் கைமாறி வீட்டுக்கு போய்விடும்.
இந்த மும்பையின் மொத்தம் 5 ஆயிரம் டப்பாவாலாக்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும், 2 லட்சம் டிபன் கேரியர்களை அவர்கள் கொண்டு செல்கின்றனர். அதோடு, வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்ற அலுவலக கோப்புகள், செல்போன், பணத்தையும் இந்த டப்பாவாலாக்களிடம் குடும்பத் தலைவிகள் கொடுத்து அனுப்புகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் காதல் தூதர்களாக டப்பாவாலாக்கள் மாறி உள்ளனர். டிபன் கேரியர்களோடு காதல் கடிதங்கள், பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகளையும் அவர்கள் இப்போது டெலிவரி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
டப்பாவாலாக்களின் இந்த காதல் சேவைக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. சாப்பாட்டோடு காதல் செய்தியும் வருவதால், புதிய உற்சாகத்துடன் வேலை பார்க்க முடிவதாக பலர் தெரிவித்துள்ளனர். காதலர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதால், டப்பாவாலாக்களின் காதல் சேவைக்கு மவுசு அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக