வெள்ளி, 25 நவம்பர், 2011

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு- 'வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி'


Retail
சென்னை: வெளிநாடுகளில் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை, வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சி தான் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவாகும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூறியுள்ளது.
இந்த அமைப்பின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்ரளிடம் பேசிய அவர்,
பன்பொருள் சில்லறை வணிகத்தில் (multi brand retail) அன்னிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லறை வணிகத்தில் (single brand retail) அன்னிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லறை வணிகம் முற்றிலும் அழிந்துவிடும். சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்.7 கோடி சில்லறை வியாபாரிகள் உள்ளனர். அவர்களை நம்பி 20 கோடி பேர் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 20 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். ஒரு கோடி பேர் அவர்களை சார்ந்துள்ளனர்.
வணிகர்கள் ஒருபோதும் தங்கள் உரிமையை இழக்கமாட்டார்கள். வணிகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதையும் அனுமதிக்க மாட்டோம்.

மத்திய அரசின் இந்த நிலையை கண்டித்து முதல் கட்டமாக 6ம் தேதி சென்னை, காஞ்சீபுரம், வேலூர், தருமபுரி, திண்டுக்கல், கோவை, மதுரை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
அடுத்த கட்டமாக தெருமுனை பிரசாரம் நடத்துவோம். 3வது கட்டமாக கவர்னர் மாளிகை நோக்கி பேரணியும், டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி பேரணியும் நடைபெறும். 4வது கட்டமாக நாடுமுழுவதும் ஒருநாள் கடையடைப்பு நடைபெறும். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் அனைத்து வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் கறுப்பு கொடி ஏற்றுவோம்.

வெளிநாடுகளில் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை, வெள்ளைப் பணமாக மாற்ற நடக்கும் மறைமுக முயற்சியே இது. அன்னிய முதலீட்டை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறோம்.
தமிழக முதல்வரையும் இது தொடர்பாக சந்தித்து பேசுவோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்துவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக