சனி, 5 நவம்பர், 2011

ஜெயலலிதா ‘நூலகத்தை ஒரு முறை வந்து பார்க்கட்டும்!

அண்ணா நூலகம் மாற்ற ஜெயலலிதா முடிவு ‘நூலகத்தை ஒரு முறை வந்து பார்க்கட்டும்!

சென்னை :நூற்றாண்டு நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்றப் போவதாக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நூலகத்தில் புத்தகம் படிக்க வந்த வாசகர்கள் சிலரின் கருத்து இதோ: குமார் (சூரியாநகர், கோட்டூர்புரம்): நான் சமூக சேவகராக உள்ளேன். தினமும் இந்த நூலகத்துக்கு வந்து படிக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இங்கிருந்துதான் பெறுகிறேன். இதன் மூலம் ஏழை மாணவர்கள் படிக்க உதவ முடிகிறது.
இந்த நூலகம் இருக்கின்ற சூழலை நாம் பார்க்க வேண்டும். அருகில் அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி, மற்றும் ஐடி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு அருகில் இருப்பதால், இது மாணவர்களுக்கு படிக்க பயன்படுகிறது. இப்போது இந்த நூலகத்தை இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதாக கூறுகிறார்கள். இது துக்ளக் ராஜ்ஜியமா என்ற சந்தேகம் எழுகிறது.ஏற்கெனவே சமச்சீர் கல்வி விஷயத்தில் நீதிமன்றம் குட்டு வைத்தது. மக்களை ஏமாற்ற ‘சைக்காலஜி வார்’ நடத்துகின்றனர். குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப்போவதாக சொன்னால் இரக்கம் வரும் என்று நம்புகிறார்கள். பிரியங்கா(அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி): கண்டிப்பாக இந்த நூலகத்தை இங்கிருந்து மாற்றக்கூடாது. பள்ளிப் பாடங்கள் தொடர்பான புத்தகங்களை இங்குதான் நாங்கள் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. வசதி இல்லாத மாணவர்கள் நல்ல சூழலில் படிக்க வேண்டும் என்றால் இங்கு வந்தால் போதும். நாங்கள் கேள்விப்படாத புத்தகங்கள் எல்லாம் இங்கே இருக்கிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஸ்வாதி (அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி): கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களும் இங்கு இருக்கிறது. இதை மாற்றக் கூடாது. மற்ற இடங்களில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் நூலகத்தை மாற்றுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

வினோத், வளசரவாக்கம் (வாசகர்): குழந்தைகளுக்காக ஒரு மருத்துவமனையை புதியதாக கட்டலாமே! கலைஞர் கட்டிய நூலகம், அதில் அவர் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது என்று தோன்றினால், அந்த கல்வெட்டை எடுத்துவிடலாமே! அதற்கு கலைஞர் மறுப்பு சொல்லமாட்டார் என்று நம்புகிறேன். ஒரு நாட்டில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மக்கள் போராட்டம் நடத்தியது கேள்விப்பட்டுள்ளோம்,

ஆனால் இங்கு தான் நூலகம் வேண்டும் என்று போராட வேண்டிய நிலை ஏற்படுத்தியுள்ளனர். இது என்ன ஜனநாயகம்?
விவேக், கோடம்பாக்கம்: (வாசகர்): இதை மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்ததே தவறு. இதை இன்னும் பெரியதாக கட்டவேண்டும் என்றோ, நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ அதை அவர் செய்துவிட்டுப் போகட்டும். தனக்கு பெயர் வரவேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினால், புதிய பணிகளை செய்து விட்டு பெயரை போட்டுக் கொள்ளலாம்.

சுபிக்ஷபூரணி, சிதம்பரம் (அண்ணா பல்கலைக் கழக மாணவி): அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி படிப்பில் சேர்ந்துள்ளேன். இங்கு தினமும் வருவேன். மதிப்பு மிக்க நிறைய புத்தகங்கள் இங்கு உள்ளன. பாடம் தொடர்பாக தெரிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகள் மருத்துவமனை என்பது நல்ல விஷயம்தான், அதற்காக இன்னொரு நல்ல விஷயத்தை கெடுக்க வேண்டுமா?

மோனிகா (அண்ணா பல்கலை மாணவி): குழந்தைகள் மருத்துவமனை கட்ட எவ்வளவோ இடம் இருக்கிறது. தமிழகத்தில் பெரிய நூலகமாக இருக்கும் இந்த நூலகத்தை மாற்ற நினைப்பது நல்லதற்கல்ல. இங்கு உலக அறிவு கிடைக்கிறது. அனைத்து வசதிகளும் இங்கு இருக்கிறது. இதை மாற்றக் கூடாது. லட்சுமி (மாணவி): அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அருகில் உள்ள நூலகம் இது. பொதுமக்களின் நலன் கருதி செயல்பட்டால் நல்லது.

ஸ்ருதி, சிதம்பரம் (சென்னை பல்கலை மாணவி): சென்னை பல்கலையில் எம்.பில்(கணக்கு) சேர்ந்து படிக்கிறேன். பி.எஸ்சி படிக்கிற காலத்தில் இருந்தே இங்குதான் இருக்கிறேன். பாட சம்பந்தமாக பல நூலகங்களுக்கு செல்லும் போது பழைய புத்தகங்கள் தான் அங்கே இருக்கிறது. நமக்கு என்ன தேவையோ அவை அதில் இல்லை. தேசிய திறனறி தேர்வு, மாநில திறனறி தேர்வு, போட்டித் தேர்வுகள், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக புத்தகம் தேடி இங்கு வருகிறேன். லேட்டஸ்ட் புத்தகங்கள் எல்லாம் இங்கே இருக்கின்றன. என் வசதிக்கு நிறைய புத்தகம் வாங்க முடியாது. இது பயனுள்ளதாக இருக்கிறது. நூலகத்தை மாற்ற வேண்டாமே.

ரேவதி, திருவண்ணாமலை(மாணவி): சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி விலங்கியல் படிக்கிறேன். ரெபரென்ஸ் நோட்ஸ் எடுக்க இங்கு வருவேன். இங்கு தான் புதிய, புதிய ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் உள்ளன. லேட்டஸ்ட் புத்தகங்கள் உள்ளன. அவற்றை படி எடுக்கும் வசதியும் உள்ளது. கணினி மூலம் படக்காட்சியாக பாடங்களை பார்க்க முடிகிறது. இது போல லேட்டஸ்ட் புத்தகம் வேறு எங்கும் இல்லை என்று கூறலாம்.

ராஜா, சின்னமலை, சென்னை(வியாபாரி): நான் பிபிஏ படித்துள்ளேன். என் வாழ்க்கையை மாற்றியது நூலகம்தான். திருச்சிதான் எனது சொந்த ஊர். எனது தந்தை இறந்த பிறகு நான் வழிதவறி பல்வேறு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானேன். திருச்சியில் உள்ள ஒரு நூலகத்தில் நான் படித்த ஒரு புத்தகம் தான், என்னை மாற்றியது. நல்ல பாதைக்கு அழைத்து சென்றது.

நான் திருந்தி காளான் வளர்ப்பு தொழில் செய்யத் தொடங்கினேன். அதற்கு பிறகு நூலகங்கள் தான் எனது கோயில். சென்னைக்கு வந்த பிறகு இங்குள்ள எல்லா நூலகத்துக்கும் நான் சென்று வருவேன். ஆனால் அண்ணா நூலகம் போல இதுவரை நான் பார்த்ததே இல்லை. இதை மாற்ற வேண்டும் என உத்தரவிட்ட ஜெயலலிதா ஒரே ஒருநாள் மட்டும் இந்த நூலகத்துக்குள் வந்து படித்துவிட்டு சென்று, பிறகு தனது முடிவை அறிவிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக