செவ்வாய், 15 நவம்பர், 2011

உ.பியை 4 மாநிலங்களாக பிரிக்க மாயாவதி அமைச்சரவை ஒப்புதல்


Mayawati
லக்னோ: 75 மாவட்டங்களுடன் பரந்து விரிந்திருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வருமான மாயாவதி 2012ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். இந்த ஆட்சியில் மாயாவதியின் பெயர் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி கெட்டுவிட்டது. இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அவ்வப்போது சர்பிரைஸ் விசிட் கொடுத்து விவசாயிகளை ஆச்சரியப்படுத்தி விவசாயிகள் தோழன் என்று பெயர் வாங்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
இவர் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பாஜக, சமாஜ்வாடி கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க முனைப்பாக உள்ளன. ஏற்கனவே பிரச்சனைகள் இருக்கையில் இந்த போட்டிக் கட்சிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று மாயாவதி யோசித்தார். உடனே ஆங்கிலேயர்களின் திட்டமான பிரித்து ஆளுதல் அவர் நினைவுக்கு வந்ததது போலும். 75 மாவட்டங்கள் உள்ள பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாக்கத் திட்டமிட்டார். பூர்வாஞ்சல் (32 மாவட்டங்கள்), ஹரித் பிரதேஷ் (22 மாவட்டங்கள்), மத்திய உபி (14 மாவட்டங்கள்), பண்டல்கண்ட் (7 மாவட்டங்கள்) என 4 மாநிலங்களாகப் பிரிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கான மசோதாவை வரும் 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் தனது திட்டம் குறித்து அமைச்சர்களிடம் மாயாவதி தெரிவித்தார். அதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாயாவதி மேலும் தெரிவித்ததாவது,

நிர்வாக மேம்பாடு மற்றும் மாநில வளர்ச்சிக்காக மாநிலத்தை பிரித்துத் தான் ஆக வேண்டும். உத்தரப் பிரதேசம் வளராததற்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம். உத்தரப் பிரதேசத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்குமாறு நான் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டேன். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை என்றார்.

மாநிலம் உண்மையிலேயே பிரிக்கப்படுகிறதோ இல்லையோ தனது இந்த அறிவிப்பின் மூலம் மாயாவதி தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளை எளிதில் பெற்று மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்கிறது ஓர் ஆய்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக