செவ்வாய், 15 நவம்பர், 2011

மாநிலத்தில் 43 புதிய திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


சென்னையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் - காவல் துறை உயரதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றும் முதல்வர் ஜெயலலிதா. உடன், (இடமிருந்து) தலைமைச்
சென்னை, நவ. 14: மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாநிலம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள், சிற்றூர்களில் 43 புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  மேலும், மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் குழுவுடன் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் மாதந்தோறும் விவாதிக்க இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை முடித்து வைத்து அவர் பேசியது:  ஒரு நல்லாட்சி என்பது வலுவான மற்றும் சிறந்த கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே சாத்தியப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளேன். மக்களின் விருப்பங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது. அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, எனது எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறேன்.  வேளாண்மைக்கு முக்கியத்துவம்: எனது அரசில் வேளாண்மைக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருள்களையும் உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். உரம் போன்ற பொருள்களைத் தேவையின்போது வழங்காமல் பின்னர் வழங்கினால் அது வீணானதாகும். எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சாதுர்யமாகச் செயலாற்றிட வேண்டும்.  விவசாயிகள் தங்கள் கிராமங்களைவிட்டுச் செல்கிறார்களா? அவர்களின் வாழ்வில் அமைதி, நிம்மதி ஏற்படுகிறதா? உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா போன்ற அம்சங்களைக் கண்காணிக்க வேண்டும்.  குழந்தைகள்-இளைஞர்கள்: தனிப்பட்ட முறையில் என்னுடைய விருப்பமான துறை குழந்தைகள் மற்றும் இளைஞர் நலனாகும். ஒவ்வொரு குழந்தையும் சரியான கல்வி வாய்ப்பு, சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைப் பெற்றிட வேண்டும். குழந்தைகளை சமுதாயத்தின் மதிப்புமிக்க சொத்துகளாக உருவாக்க வேண்டும்.  மகளிர் நலனிலும் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மகளிரின் சுகாதாரம், கல்வி, வருவாயைப் பெருக்கும் வழிமுறைகளுக்கு ஆட்சியர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  பொது விநியோகத் திட்டம்: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்கள் ரேஷன் கடைகளில் சரியாக இருப்பு வைக்கப்படுகிறதா, சரியாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மகளிர் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுபோன்ற கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை வாரத்துக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும்.  மக்களுக்குக் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வீட்டு வாசலுக்கே குடிநீர் வசதி கிடைக்காவிட்டாலும், அருகிலாவது கிடைப்பதற்கு வழி செய்திட வேண்டும். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்குக் குடிநீர் குழாய்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ளது. அதில், எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் கண்காணிப்பது அவசியம்.  அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். கோயில் நிலங்கள், உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான நிலங்கள், மத்திய அரசின் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு ஏதும் இல்லாதபடி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.  டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அங்குள்ள வேளாண்மைப் பணிகள், குறிப்பாக, அறுவடைக்குப் பிந்தைய பணிகள், உணவு தானியம் வீணாவதைத் தடுப்பது, உணவுப் பொருள்களின் திருட்டைத் தடுப்பது போன்றவற்றில் யுக்திகளைக் கையாள வேண்டும்.  கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மீன்வளத் துறையின் திட்டங்கள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, குப்பை கொட்டும் தளங்கள், நீர் நிலைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தங்களது கவனத்தைச் செலுத்திட வேண்டும்.  43 புதிய திட்டங்கள்: மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களின் குழுவுடன் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் மாதந்தோறும் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். அப்போது, மாவட்டங்களில் உள்ள சத்துணவுக் கூடங்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள், சுகாதார வளாகங்கள், கிராமச் சாலைகள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட காட்சிகளை ஆட்சியர்கள் காண்பித்து அதன் செயல்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.  இதன்பின்பு, 43 புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக, தூத்துக்குடியில் புதிய சரக்கு முனையம் அமைப்பது, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பது, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர், பிரிண்டருடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.  உத்தரவுகளை வெளியிட வேண்டும்: பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொண்ட கோரிக்கைகளின் படி புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை, சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள் உறுதி செய்து உரிய உத்தரவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.    திட்டங்களின் விவரம்  * கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்படும்.  *  உக்கடம், ஆத்துப்பாலம், வடக்கு சுற்றுச்சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்.  *  ராமநாதபுரம் மாவட்டம் ஆழ்கடல் மீன்பிடிப்பு இனி, டோக்கன் முறை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அனுமதிக்கப்படும்.  *  அரியலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்துள்ள 42 கி.மீ. நீளமுள்ள சாலை சீரமைக்கப்படும்.  *  கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.  *  ஈரோடு மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.  *  ஈரோடு மாவட்டம் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே சாலை விரிவுபடுத்தப்படும்.  *  காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.  *  தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சரக்கு முனையம் அமைக்கப்படும்.  *  பெரியகுளம் - கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.  *  நாகப்பட்டினத்தில் மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.  *  பொன்னேரி வருவாய் கோட்டம் பிரிக்கப்பட்டு, அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும். அதில், அம்பத்தூர், மாதவரம் தாலுகாக்கள் இருக்கும்.  *  சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.  *  திருவண்ணாமலையில் நடைபெறும் மகாதீப திருவிழாவுக்கு மாநில அரசின் பங்கான 50 சதவீதம் 70 சதவீதமாக உயர்த்தப்படும்.  *  சித்ரா பௌர்ணமி தினம் மதப் பண்டிகையாக அறிவிக்கப்படுகிறது.  *  வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.  *  வேலூரில் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.  *  பட்டாசு ஆலைகளில் பணியாற்றுவோருக்கான பயிற்சி முகாம், சிவகாசியில் அமைக்கப்படும்.  *  நாமக்கல் புறநகர்ப்பகுதியில் பஸ் கட்டுமானத்துக்கான பிரிவு தொடங்கப்படும்.  *  கடலில் மீனவர்கள் காணாமல் போகும் நேரங்களில் தேவையின் அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்படும்.  *  தேடுதல் பணியில் ஈடுபடும் கடலோர போலீஸôருக்கு அதிவேக படகுகள் வழங்கப்படும்.  *  தூத்துக்குடி நகருக்கு கூடுதல் தண்ணீர் அளிக்கப்படும்.  *  தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்.  *  தூத்துக்குடி வி.வி.டி. சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.  *  பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பயிற்சி சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும். அந்தக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும்.  *  எஸ்.எம்.எஸ். முறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களின் வருகை பதிவு கணக்கிடப்படும்.  *  கடலூர் மாவட்டத்துக்கென ஒரு பெருந்திட்ட வளாகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  *  புதிதாக கட்டப்படும் அரசு விடுதிகளில் சூரிய மின் சக்தி அமைப்புகள் நிறுவப்படும்.  *  மேட்டூர் அணையில் இருந்து ஜூனில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, அங்குள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிக்கான நிர்வாக ஒப்புதல் ஜனவரியிலேயே அளிக்கப்படும்.  *  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் சீராகச் செல்லும் வகையில் ஒருங்கிணைந்த அளவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.  *  தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இணைப்புச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மலைப்பகுதியில் சுற்றுலா தலமாக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்கும்.  *  கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக் கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அங்குள்ள மாம்பழங்களை கொள்முதல் செய்து, மாம்பழக் கூழுடன் பால் சேர்த்த கலவையை மதிய உணவுத் திட்டத்தில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும்.  *  அரியலூர் மாவட்டம் மருதயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.  *  மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டவுடன் அனைத்து கால்வாய்களையும் பராமரிக்கும் பணி தொடங்கப்படும். அணை ஜுனில் திறக்கப்படும் போது, அவை நல்ல முறையில் இருப்பதற்கு வழி செய்யப்படும்.  *  தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து, அவற்றை பயிரிடும் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.  *  பெரம்பலூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனை சந்தை அமைக்கப்படும்.  *  திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன்மூலம், 60 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருவது தவிர்க்கப்படும்.  *  மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதின் அளவு 45-லிருந்து 18 ஆகக் குறைக்கப்படும்.  *  அனைத்து மாவட்டங்களிலும் சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு தனி உதவியாளர் நியமிக்கப்படுவார்.  *  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிரிண்டருடன் இணைந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.  *  தூத்துக்குடி மாவட்டம் கோரப்பள்ளம் கண்மாய் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்படும்.  *  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் பெரிய அளவில் உள்ளன. எனவே, அவை மறுசீரமைப்பு செய்யப்படும்.  *  கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக