செவ்வாய், 22 நவம்பர், 2011

ஜெ. 300 கேள்விகளுக்குப் பதிலளித்தார்- நாளையும் விசாரணை

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதா ஆஜரானார். அவருடன் தோழியும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான சசிகலாவும் ஆஜரானார்.இன்றைய விசாரணையின் போது 300 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்தார்.
காலை 11 மணிக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜரானார்கள். இதையடுத்து ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா விசாரணையை தொடங்கினார்.
இன்று மட்டும் ஜெயலலிதாவிடம் 300 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு அவர் பதிலளித்தார். இதுவரை மொத்தம் 3 நாட்கள் ஜெயலலிதா விசாரிக்கப்பட்டுள்ளார். மொத்தம், கிட்டத்தட்ட 1000 கேள்விகள் வரை அவர் பதிலளித்துள்ளார். இன்னும் கிட்டத்தட்ட 450 கேள்விகள் வரை கேட்கப்பட வேண்டியுள்ளது.
இதனால் நாளையும் விசாரணை தொடரும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா அறிவித்துள்ளார். இதையடுத்து நாளையும் ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகிறார்.
வருவாய்க்கு அதிகமாக ரூ. 66 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்தது தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூர் பரப்பன அக்ரஹாரவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த அக்டோபர் 20, 21ம் ஜெயலலிதா நேரில் ஆஜரானார்.

அப்போது நீதிபதி மல்லிகர்ஜூனைய்யா 567 கேள்விகளை கேட்டார். அவற்றுக்கு ஜெயலலிதா பதிலளித்தார். மேலும் 722 கேள்விகள் பாக்கி இருப்பதால், அவற்றைக் கேட்பதற்கு வசதியாக நவம்பர் 8ம் தேதி ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார் ஜெயலலிதா.ஆனால் அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம், தேவைப்பட்டால் வேறு தேதியை கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று ஜெயலிதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து நவம்பர் 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா ஆஜராகவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டும் ஆஜரானார்கள்.
வேறு தேதி கேட்டு ஜெயலலிதா சார்பில் மனு செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, நவம்பர் 22ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். தேவைப்பட்டால் 23ம் தேதியும் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தார். அதன்படி இன்று விசாரணை தொடங்கியது.

6 அமைச்சர்கள் வந்தனர்
ஜெயலலிதாவுடன் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 6 அமைச்சர்களும் பெங்களூர் கோர்ட்டுக்கு வந்தனர். கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அடையாள அட்டை இல்லாத வக்கீல்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தட்டி வைத்து தடபுடல் வரவேற்பு

ஜெயலலிதாவின் வருகையையொட்டி அதிமுகவினர் இந்திரா நகர் பழைய விமான நிலையத்தில் இருந்து சிறை வளாகம் வரை வரவேற்புத் தட்டிகளை வைத்துள்ளனர். ஒசூர் சாலை முழுவதும் ஏராளமான வரவேற்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அதிமுகவினர் பெங்களூரில் குவிந்தனர்.
தடை உத்தரவு
ஜெயலலிதா வருகையையொட்டி பரப்பன அக்ரஹாரா, மடிவாளா, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை 144 போலீஸ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக, 2,000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக