புதன், 23 நவம்பர், 2011

ஜெ.விடம் விசாரணை முடிந்தது- 192 கேள்விகளுக்கு பதிலளித்தார்

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று 4வது முறையாக ஆஜராகி மீதமுள்ள 192 கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 1,339 கேள்விகள் தயார் செய்யப்பட்டன. அதில் ஜெயலலிதா இதுவரை 1,147 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மீதமுள்ள 192 கேள்விகள் இருந்தன.
நேற்றைய விசாரணை முடிந்தவுடன் சென்னை திரும்பிய ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் வந்தார். நேற்றைய விசாரணையின்போது தனது வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரமான திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று மட்டும் அவர் 580 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இன்று காலை 11 மணிக்கு விசாரணை துவங்கியது. ஜெயலலிதா மீதமுள்ள 192 கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் எழுத்துப் பூர்வமான விளக்கமும் அளித்தார். பிற்பகல் 2.30 மணிக்கு இந்த விசாரணை முடிந்தது.
கடந்த அக்டோபர் மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி 571 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இநத் வழக்கில் ஜெயலலிதாவிடம் நடத்தப்பட வேண்டிய விசாரணை இன்றுடன் முடிவடைந்துள்ளது. வரும் 29ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசியிடம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக