புதன், 23 நவம்பர், 2011

போராட்டத்தால் அணுமின் கழகத்திற்கு ரூ.1,500 கோடி நஷ்டம்: லாபம் அடைந்தது யார்?

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தால், தற்போதைய சூழலில் அணுமின் சக்தி கழகத்திற்கு, 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பணி முடக்கம்:"மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை, அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அணு உலைக்குள் வெறும், 40 பேர் மட்டுமே சென்று, அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்."ரஷ்ய விஞ்ஞானிகளை உள்ளே அனுமதிக்கக் கூடாது' என்பதில், போராட்டக் குழுவினர் தீவிரமாக உள்ளதால், அணுமின் நிலைய பணியில் ஈடுபட்ட 150 பேர் உட்பட, 960 பேர், பணிக்குச் செல்லாமல், ஒரு மாதமாக ஓய்வில் உள்ளனர்.வரும் டிசம்பர் மாதம், உற்பத்திப் பணி துவங்க இருந்த நிலையில், மார்ச் மாதத்திற்கு மின் உற்பத்தி தள்ளிப்போடப்பட்டதால், மின் நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்பட வேண்டிய, 2,000 மெகாவாட் மின்சாரத்திற்கான மூன்று மாத விற்பனைத் தொகை, அணுமின் கழகத்திற்கு நஷ்டமாகி உள்ளது.

நஷ்டம்:கூடங்குளத்திலிருந்து, யூனிட் 2.51 ரூபாய் விலைக்கு, ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் தலா, ஆறு கோடி ரூபாய்க்கு மின்சாரம், தினமும் வினியோகம் செய்யப்படும்.
முதல் உலை தாமதத்தால், இரண்டாவது உலைக்கும் சேர்த்து, இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வகையில், மாதம் 360 கோடி ரூபாய், மின்சார விற்பனைத் தொகை கிடைத்திருக்கும். மூன்று மாதங்களுக்கு உற்பத்தி தள்ளி வைக்கப்பட்டதால், மூன்று மாதத்திற்கு மின்சார விற்பனைத் தொகை மட்டும், 1,080 கோடி ரூபாய்; 1,000 பேருக்கான மூன்று மாத சம்பளம், 20 கோடி ரூபாய்; வீடுகள், கட்டடங்களுக்கான பராமரிப்பு பணிகள், பாதிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கருவிகள், கம்ப்யூட்டர் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தேய்மானம், மீண்டும் கட்டுமான தொழிலாளர்களை அழைத்து வருதல், கான்ட்ராக்ட் நிறுவனங்கள் கேட்கும் நிவாரணம் ஆகியவற்றைச் சேர்த்து, மொத்தம், 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மக்கள் பணம்...:போராட்டத்தால் மக்களுக்கும், மக்களின் வரிப்பணத்திற்கும் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், திரைமறைவில் சிலர் லாபம் பார்ப்பதாக, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக