செவ்வாய், 4 அக்டோபர், 2011

TNA ஒருபோதும் தகவல் வழங்கியிருக்காது : அரசு நம்பிக்கை

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எந்தவொரு தகவலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியிருக்காது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அரசு நேற்றுத் தெரிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் இதயசுத்தியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறானதொரு நிலையில் நாட்டுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் மூவரடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார்.
இந்த நிபுணர் குழு பல்வேறு கோணங்களில் பல்வேறு தரப்பினர்களிடம் எழுத்துமூலம் சாட்சியங்களைத் திரட்டி அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.தருஸ்மன் தலைமையிலான இந்த நிபுணர் குழுவிற்கு வன்னியில் நடந்த அவலங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரகசியமாகத் தகவல்களை வழங்கியுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சிங்கள பேரினவாதிகள் ஐ.நா. அறிக்கைக்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தவர்கள். இதனால் கொதிப்படைந்தனர். பல்வேறு கோணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கத் தொடங்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாகப் பேசப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக ஐ.நா. அறிக்கைக்கு சாட்சியம் வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றதே. இந்த விடயம் இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேட்டபோதே, அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுகளில் அரசுத் தரப்புக்குத் தலைமை வகிப்பவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நாட்டுக்கு எதிராக முக்கியமான தருணங்களில் செயற்படமாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.அதேபோன்றுதான் ஐ.நா.நிபுணர் குழுவுக்கும் அவர்கள் சாட்சியம் வழங்கியிருக்கமாட்டார்கள் என நாம் நம்புகின்றோம். ஊடகங்களில்தான் இவ்வாறான தகவல்கள் வெளிவருகின்றன. ஊடகங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வுடன் நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம். இது அவர்களுக்கும் தெரியுமென நினைக்கின்றோம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கு எதிராகக் கூட்டமைப்பு செயற்படாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.அதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை அரசு அடியோடு நிராகரித்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அறிக்கையை ஏற்றுள்ளதுடன் சிபாரிசுகளை நடைமுறைப் படுத்துமாறும் அரசை வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக