அகில இந்திய அளவில் ஓட்டுக்கட்சி அரசியலில் தனி முன்னுதாரணம் படைத்தவர் ஜெயலலிதா மட்டுமே. இதில் மாயாவதி, மம்தா பானர்ஜி போன்றோர் கூட வெகுவாக பின்தங்கித்தான் உள்ளனர். ஆணவம், செருக்கு, அகம்பாவம், மேட்டிமைத்தனம், பழிவாங்குதல் என்று எல்லா டிகிரிகளிலும் கொட்டை போட்டவர் புரட்சித் தலைவி.
அம்மா அரசவையில் அகில இந்திய தலைவர்கள் பலரும் பம்மித்தான் நடந்து கொள்வர். காங்கிரசு, பா.ஜ.க கட்சிகளுக்கு இந்திய அளவில் தனிப்பெரும்பான்மை கிடையாது என்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் காலந்தள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஜெயாவை சகித்துக் கொள்கிறார்கள்.
அதே போன்று ஜெயாவும் இந்திய அரசியல் கனவில் ஒரு முக்கிய இடத்தை அடைய வேண்டுமென்று உறவு கொள்கிறார்.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்காகவே அரைமனதாக கூட்டணியை அமைத்தவர் ஜெயா. கூட்டணி பேரம் முடியாமலேயே வேட்பாளரை அறிவித்து பின்னர் வேறுவழியின்றி மாற்றிதெல்லாம் திடுக்கிடும் விசயமல்ல. இப்படி நடக்கவில்லை என்றால்தான் ஆச்சரியமாக இருக்கும்.
இதெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், விஜயகாந்த், சரத்குமார், கிருஷ்ணசாமி அனைவரும் தெரிந்த ஒன்றுதான். இவர்களைப் பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் காலந்தள்ள முடியாது என்பதால் சகித்துக் கொள்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை சொந்தக் கொள்கை என்பது எதாவது செய்து அரசியலில் நீடிப்பது, அதையும் சொந்த பலத்தில் செய்ய முடியாது, மாறி மாறி கூட்டணிகளின் தயவில் நீடிப்பது என்று சீரழிந்து போய்விட்டார்கள். விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஒரு ஆம்பளை ஜெயலலிதா என்பதால் பிரச்சினை இல்லை.
சட்டமன்றத் தேர்தலில் உள்ள நிர்ப்பந்தம் உள்ளாட்சித் தேர்தலில் இல்லை என்பதால் கூட்டணிகளை கழட்டிவிட ஜெயலலிதா தயங்கவில்லை. ஆனாலும் இந்த அளவுக்கு மோசம் போக மாட்டோம் என்று வேண்டுமானால் கூட்டணிக் கட்சிகள் நினைக்கலாம். மற்றபடி அவர்களுக்கும் இது ஒரு அதிர்ச்சியாக இருக்காது.
சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், காரியவாதம், போன்றவை கோலேச்சும் ஓட்டுக்கட்சி அரசியலின் யோக்கியதையை இந்த அளவுக்கு வெளிப்படுத்தியமைக்காக நாம் ஜெயலலிதாவை பாரட்டலாம். வேறு என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக