திங்கள், 3 அக்டோபர், 2011

இழுத்தடித்தது என்ற காரணத்தாலேயே வழக்கு தள்ளுபடிJeyalalitha

ஜெயலலிதா, ‘கறுப்பு-டு-வெள்ளை பண டீலில்’ இருந்து தப்பினார்!

ஜெயலலிதா குற்றமற்றவர் என்பதற்காக அல்ல. சி.பி.ஐ. இந்த வழக்கை அதிக காலம் இழுத்தடித்தது என்ற காரணத்தாலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.சென்னை, இந்தியா: கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டவிரோதமாக பணம் சேர்த்தார் என்று தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று, சி.பி.ஐ.யின் ‘நடவடிக்கையால்’ ஜெயலலிதாவுக்கு சாதகமாக முடிந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது எதனால் தெரியுமா? ஜெயலலிதா குற்றமற்றவர் என்பதற்காக அல்ல. சி.பி.ஐ. இந்த வழக்கை அதிக காலம் இழுத்தடித்தது என்ற காரணத்தாலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது அனேகமாக ஒருவித மியூச்சுவல் அண்டர்ஸ்டான்டிங் டீல் மூலம் நடைபெற்றிருக்கலாம்.

பல ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற விவகாரம் இது.
ஜெயலலிதா, 1992-ம் ஆண்டு முதல்வராக இருந்த நேரத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். புரட்சித் தலைவி முதல்வராக இருக்கும்போது பிறந்தநாளைக் கொண்டாடினால், பக்தகோடிகள் சும்மா இருப்பார்களா? பரிசு மழையில் நனைய வைத்துவிட்டார்கள்.
ஆண்டிப்பட்டியில் இருந்து ஒரு அ.தி.மு.க. தொண்டர் பூங்கொத்து அனுப்பியிருந்தால், அது வேறு விவகாரம். ஆனால் இவரது பிறந்தநாள் பரிசாக அப்போதைய அமைச்சர்களும், தொழிலதிபர்களும் காசோலைகளாகவும், ரொக்கமாகவும் கொடுத்தவை 2 கோடிக்கும் அதிகமான தொகை.
இப்போது உங்களுக்கு இதழோரத்தில் ஒரு கேலிச்சிரிப்பு வரவேண்டுமே… ஸ்பெக்ட்ரம் ஊழலில் லட்சக்கணக்கான கோடிகளில் பணம் கைமாறியதாகப் பேசுகிறார்கள். இது வெறும் 2 கோடி ருபா விவகாரமல்லவா என்ற நினைப்பில்!  ஆனால், இது நடைபெற்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாட்களில் 2 கோடி பெரிய தொகை. (மசாலா தோசை ரூ1.25)
வழக்கு ஏன் போடப்பட்டது என்றால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, குறிப்பிட்ட தொகைக்குமேல் கிடைத்த பரிசு தொகையை அவர் அரசுக் கணக்கில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், அதனை தனது சொந்தக் கணக்கில் சேர்த்துக் கொண்டார் என்ற காரணத்தால்தான்!
அதுவும் இந்தப் பணம், பிளாக்கை ஒயிட் ஆக்கிய பணம் என்பது, போயஸ் கார்டன் பசுமாட்டுக்குக்கூட தெரிந்த ரகசியமாக இருந்தது.
அந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா கொஞ்சம் அட்டகாசம் பண்ணி விட்டதில் அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக 24.6.1996ல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாம் குறிப்பிட்ட பிளாக்-டு-ஒயிட் லீலைக்காக ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அப்போது அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன், அழகு  திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் வழக்குப் பாய்ந்தது.
இரண்டு மாதங்களில் இந்த வழக்கு மாநில அமைப்பான சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடமிருந்து, மத்திய அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 7.8.1996ல் சி.பி.ஐ. வழக்கை ஏற்றுப் பதிவு செய்து கொண்டது.
அதுவரைக்கும் சரி. அதன்பின் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அது எப்போது தெரியுமா? 10 ஆண்டுகள் கழித்து, 31.7.2006ல்!
இது போதாதா? ஜெயலலிதாவும் அவரது முன்னாள் சகாக்களும் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில், “10 ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சட்ட விரோதம். எனவே, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று கோரி மனுக்களைத் தாக்கல் செய்தனர். சி.பி.ஐ. நீதிமன்றத்தில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதற்குத்தான் இப்போது 2011ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு என்ன? “சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தபின், குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலுள்ள கால அவகாசத்தைப் பார்த்தால், சம்பவம் நடந்த தேதியிலிருந்து 14 ஆண்டுகள் 5 மாதங்களுக்குப் பிறகே குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21 என்ன சொல்கிறது? ஒவ்வொரு குடிமகனுக்கும் விரைவான விசாரணை, விரைவான நீதி கிடைக்க வேண்டியது அடிப்படை உரிமை என்கிறது. அந்த வகையில் இந்தக் காலதாமதத்தால், ஜெயலலிதாவுக்கும் மற்றையவர்களுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சட்ட ரீதியான உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 14 ஆண்டுகள் 5 மாதங்கள் என மிக நீண்ட காலதாமதம் செய்யப்பட்டுள்ளதால், வழக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஜெயலலிதா உட்பட மற்றையவர்களும் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்பதே நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு!
ஜெயப்படியான வேறு சில நீண்ண்ண்டகால வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக