செவ்வாய், 4 அக்டோபர், 2011

J.குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை’ என்று தோழர்கள் வருத்தப்பட்டனர்

எல்லாரையும் கழற்றிவிட்டது ஏன்?

''ஜெயலலிதாவிடம் கோபித்துக்கொண்டு விஜயகாந்த் பக்கம் கம்யூனிஸ்ட்கள் ஜாகை மாற்றிய கதையை நான் உமக்குச் சொன்னேன். போயஸ் கார்டனுக்குப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற அவர்களுக்கு கேட்ட மாநகராட்சிகள் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த நகராட்சிகள் தரப்படவில்லை என்பதைவிட... 'எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை’ என்று தோழர்கள் வருத்தப்பட்டனர். அதை நான் உமக்குச் சொன்னேன். 'குடிக்கத் தண்ணீர் தராத போயஸ் கார்டன்’ என்று தலைப்பிட்டு 'கம்யூனிஸ்ட் கேப்டன்’ கதை என்று நீர் வெளியிட்டீர். இந்த விவகாரம் மற்றவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியதைப்போலவே, முதல்வரையும் அதிரவைத்ததாம்!''

''அப்படியா?''
''இந்த செய்தியைப் பார்த்துவிட்டு கார்டன் ஊழியர்கள், செயலாளர்களிடம் அவர் கடுமையாகக் கோபப்பட்டாராம். 'நம்மிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களை இப்படியா அவமரியாதை செய்வீர்கள்?’ என்று கத்தித் தீர்த்துவிட்டாராம். அதற்கு ஊழியர்கள் ஒரு காரணம் சொல்லி இருக்கிறார்கள். கார்டனுக்குள் வருபவர்கள் முதலில் ஓர் அறையில் உட்காரவைக்கப்படுவார்கள். அங்குதான் அவர்களுக்கு தண்ணீர், ஸ்நாக்ஸ்,டிஃபன் போன்றவை வழங்கப்படும். அங்கு இருந்து முக்கிய சந்திப்புக்கான அறைக்கு அழைத்துச் செல்வார்கள். அங்குதான் பேச்சுவார்த்தைகள் நடக்கும். அந்த அறைக்குள் இந்த மாதிரியான பொருட்களை அனுமதிப்பது இல்லையாம். அந்த அடிப்படையில்தான் அவர்களுக்குத் தண்ணீர் தராமல்விட்டு இருப்பார்களே தவிர, மற்றபடி தண்ணீர் தரக் கூடாது என்ற எந்த உத்தரவும் போடப்படவில்லை என்று இப்போது விளக்கங்கள் சொல்கிறார்கள். 'பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களிடம் இதையே விளக்கமாகச் சொல்லி இருக்கலாமே... சொல்லி இருந்தால், அவர்கள் வெளியில் போய் வருத்தப்பட்டு இருக்க மாட்டார்களே’ என்று முதல்வர் ஆதங்கப்பட்டாராம். அதையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்!'' என்ற கழுகாரின் சிறகுகள் ஈரம் குறைந்து சடசடக்கத் தொடங்கின!

''கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மொத்தமாக முடிந்தும்விட்டன; முறிந்தும்விட்டன. இந்திய கம்யூனிஸ்ட் மட்டுமாவது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர்களையும் ஜெயலலிதா தக்கவைக்க​வில்லை. 'இது ஏதோ திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது’ என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்​வதை மறுப்பதற்கு இல்லை.''

''தா.பாண்டியனும் தாக்குப் பிடிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?''

''திருப்பூர் மாநகராட்சியை எதிர்​பார்த்த அவர், கடைசிக் கட்டத்தில் அதை வலியுறுத்தவே இல்லை. 30 மாநகராட்சி வார்டுகளைக் கேட்டார். 10-தான் கிடைக்கும் என்றார்களாம். 58 பேரூராட்சி கவுன்சிலர் கேட்டார்கள். 20 தரப்படும் என்றார்களாம். பெரிய சிக்கல், மாவட்ட கவுன்சிலர்கள் விஷயத்தில்தான் நடந்துள்ளது. 19 இடங்களை இவர்கள் கேட்க.. அ.தி.மு.க. தரப்பு 7 இடங்கள்தான் தர முடியும் என்றதாம். 'நாங்கள் திருவாரூர் மாவட்டத்திலேயே 7 மாவட்ட கவுன்சிலர்களை வைத்துள்ளோம்’ என்றார்களாம். ஆனால், எதிலும் இறங்கி வருவதாகத் தெரியவில்லையாம். அதனால்தான், இதற்கு மேல் அவமானப்பட வேண்டாம் என்று கிளம்பிவிட்டார்கள்.''

''ஓஹோ!''

''அ.தி.மு.க. தரப்பில் கேட்டால் வேறு மாதிரி சொல்கிறார்கள். 'நாங்க கேட்டதைக் கொடுக்கலேன்னா... விஜயகாந்த் பக்கம் போய்விடுவோம்.’ என்று மிரட்டும் தொனியில் தா.பாண்டியன் பேசினார். ஆகவே, அமைதியான சூழ்நிலை எழவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பேச வந்தவர்களுக்கு நாங்கள் உரிய மரியாதை கொடுத்தோம் என்கிறார்கள் இவர்கள். பரமக்குடி சம்பந்தமாக பேசிய அக்கட்சித் தலைவர் ஒருவர், 'இந்த துப்பாக்கிச் சூடு முதல்வரின் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது’ என்றாராம். அதுதான் அந்தக் கட்சிக்குக் கல்தா கொடுக்கக் காரணமாம்!''

''விஜயகாந்த் விஷயத்துக்கு அ.தி.மு.க-வின் ரியாக்ஷன்?''

''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100-வது நாள் விழாவை சட்டசபையில் கொண்டாடினார்கள். அந்த விழாவில் கலந்துகொண்டு விஜயகாந்த்தும் பேச வேண்டும் என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே போனில் பேசி அழைத்தாராம். 'வருகிறேன்’ என்று விஜயகாந்த்தும் சொன்னாராம். பிறகு, 'ஆட்சிக்கு வந்தா 100 நாள் ஆகும்... 200 நாள் ஆகும்... இதுக்கெல்லாமா விழா கொண்டாடுவாங்க’ என்று விஜயகாந்த் சொன்னதாக ஜெயலலிதாவுக்கு யாரோ சொல்லி இருக்கிறார்கள். இதைத்தான் அ.தி.மு.க. தரப்பும் தனது கோபத்துக்கான காரணமாகச் சொல்கிறது. மொத்தத்தில் சிறு சிறு வார்த்தைகளும், மனவருத்தங்களும் சேர்ந்து ஒரு கூட்டணிக்கு மூன்று மாதங்களுக்குள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது!''

thanks vikatan+giritharan kanchipuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக