செவ்வாய், 4 அக்டோபர், 2011

சுற்றுச்சூழலை பாதுகாக்க கார் இறக்குமதியில் இலங்கை அரசு கெடுபிடி


Honda Hybrid Car
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கார் இறக்குமதியில் இலங்கை அரசு கடைபிடித்து வரும் கடுமையான வரிவிதிப்பு முறைக்கு நல்ல பலன் கிட்டியுள்ளது. இதனால், அங்கு பெருமளவு எரிபொருள் மிச்சமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கார் இறக்குமதிக்கான வரி கணிசமாக உயர்த்தப்பட்டது. மேலும், ஹைபிரிட் கார்களுக்கு குறைவான வரியும், பெட்ரோல், டீசல் கார்களுக்கு பன்மடங்கு கூடுதலாக வரியும் நிர்ணயிக்கப்பட்டது.இலங்கை அரசின் இந்த புதிய இறக்குமதி வரி ஒருவிதத்தில் வாடிக்கையாளர்களுக்கு கடும் சுமையாக இருந்தாலும்கூட சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பேரூதவியாக மாறியுள்ளது. அங்கு இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் கார்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியும், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களுக்கு 450 சதவீத இறக்குமதி வரியும் விதிக்கப்படுகிறது.இதனால், இலங்கையில் ஹைபிரிட் மற்றும் பெட்ரோல், டீசல் கார்களின் விலையும் ஒன்றாக இருக்கிறது. எனவே, அங்குள்ள வாடிக்கையாளர்கள் ஹைபிரிட் கார்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இந்த வரிவிதிப்பு கொள்கையால் அங்கு கடந்த ஜனவரி முதல் மேமாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 5.36 கோடி லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

எரிபொருள் மிச்சமின்றி பெட்ரோல், டீசல் கார்களிலிருந்து வெளிப்படும் கார்பன் புகையும் பெருமளவு குறைந்துள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நம்நாட்டில் கார்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால், கார்களால் நம் நாட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், நம்நாட்டில் கார்களுக்கா வரிவிதிப்பு கொள்கைகள் இலங்கைக்கு நேர்மாறாக இருக்கிறது.

சாதாரண கார்களை விட இங்கு ஹைபிரிட் கார்களின் விலை 70 முதல் 100 சதவீதம் வரை கூடுதலாக உள்ளன. இதனால், ஹைபிரிட் கார் வாங்குவதைவிட வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை தேர்வு செய்யவே விரும்புகின்றனர்.

நம்நாட்டில் ஹைபிரிட் கார் விற்பனை படுமந்தமாக இருந்ததால் ஹோண்டா கார் நிறுவனம்கூட கடந்த ஆண்டு தனது ஹைபிரிட் காரை இந்திய சந்தையில் விற்பனை செய்வதை நிறுத்தியது.

இலங்கை அரசுப்போன்று இந்தியாவில் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் கார்களுக்கான வரியை குறைத்தால் வாடிக்கையாளர்கள் ஹைபிரிட் கார்கள் பக்கம் தங்களது கவனத்தை திருப்புவர். மேலும், மரபுசார்ந்த எரிபொருளில் இயங்கும் கார்கள் மீதான வரியை உயர்த்தினால், அது நிச்சயம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முதல்படியாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக