ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் சிறிதரன், யோகேஸ்வரன்,சிறிகாந்தா

உறுப்பினர்களான சிறிதரன், யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா ஆகியோரை இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப கூட்டம் பிரான்ஸ் ஸ்ராஸ்போர்க் நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை பிரான்ஸ் ரிசிசி எனப்படும் நெடியவன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அணி மேற்கொண்டிருந்தது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா, கஜேந்திரகுமார், கஜேந்திரன், வணபிதா இம்மானுவேல் அடிகளார், உட்பட நெடியவன் குழு உறுப்பினர்கள் பிரான்ஸ், சுவிஸ், நோர்வே ஆகிய நாடுகளிலிருந்தும் வருகை தந்து கலந்து கொண்டனர்.பிரான்ஸ் ஸ்ராஸ்போர்க் சுவிஸ் நாட்டை அண்மித்த நகராகும். இச்சந்திப்பில் எதிர்காலத்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டதாகவும், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் சிறிதரன், யோகேஸ்வரன், சிறிகாந்தா ஆகியோரை இணைத்துக்கொள்வது தொடர்பாக இணக்கம் காணப்பட்டதாகவும் இதில் கலந்து கொண்ட  ஒருவர் தெரிவித்தார். சிறிதரன், சிறிகாந்தா, ஆகியோர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொள்வதற்கு அக்கூட்டத்தில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் யோகேஸ்வரன் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. தன்னால் இதற்கு உடனடியாக பதிலளிக்க முடியாமல் இருப்பதாகவும், தான் மட்டக்களப்புக்கு சென்று தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய பின் பதிலளிப்பதாக கூறினார் என  அச்சந்திப்பில் கலந்து கொண்ட பிரான்ஸ் ரிசிசி பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
யோகேஸ்வரனை இதற்கு சம்மதிக்குமாறு நெடியவன் குழு வலியுறுத்தியதாகவும், கஜேந்திரகுமார் அணியின் கிழக்கு மாகாண இணைப்பாளராக யோகேஸ்வரனை நியமிப்பதாக கூறியதாகவும் தெரியவருகிறது.  இதற்கான முழுமையான நிதி வழங்கப்படும் என்றும் நெடியவன் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜேர்மனியில் இருக்கும் மாவை சேனாதிராசாவுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர் பேர்ளினில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் மாவை சேனாதிராசாவுக்கு ஸ்ராஸ்போர்க்கில் நடைபெற்ற சந்திப்பு பற்றி எதுவும் தெரியாது என்பதை உறுதிப்படுத்த கூடியதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக