வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஜெ.விடம் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என முதல்வராக்கிய மக்கள் ஏமாற்றம்

;சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி,
பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறை அத்துமீறி நடந்துகொண்ட இந்தச் செயலுக்கு தமிழக காவல்துறைக்கு தலைமை தாங்குகிற முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் இருந்து கண்டன குரல் வராவிட்டாலும் கூட குறைந்த பட்ச அனுதாபத்தையாவது, தேவேந்திர குல மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், முதல் அமைச்சர் அனுதாபம் தெரிவிப்பதற்கு பதிலாக, போலீசாரின் அத்துமீறலை மூடி மறைக்கும் வகையில் துப்பாக்கிச் சூட சம்பவத்திற்கு ஜாதி சாயம் பூச முற்பட்டார். நல்லதொரு சுமூக சூழல் தென் தமிழகத்தில் மலர்ந்து வரும நேரத்தில் முதல் அமைச்சரின் இந்தப் பேச்சு எந்த தரப்பு மக்களுக்கும் ஏற்புடையதாக இல்லை. இந்த பரமக்குடி கொடிய சம்பவத்திற்கு காரணமான காவல்துறை உயர் அதிகாரிகள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் இடைக்கால பணிநீக்கம் செய்ய வேண்டும். உயர் நீத்த குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற எந்த விதமான கோரிக்கையையும் ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜெயலலிதா அரசின் கடந்த கால ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக 1995ல் கொடியங்குளம் சம்பவம், அதே ஆண்டு அக்டோபர் 6ல் மெரினா துப்பாக்கிச் சூடு, 1992ல் வாச்சாத்தி சம்பவம், அதே ஆண்டு செங்கல்பட்டு காரணையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு, 1994ல் சிதம்பரம் பத்மினி மானபங்கம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு போன்ற எண்ணற்ற சம்பவங்களால், ஜெயலலிதா அவர்கள் மீதும் அவரது அரசு மீதும் வெறுப்புற்ற இருந்த மக்கள் காலத்தால் அவரிடம் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என நம்பி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முழுமையாக ஆதரித்து வெற்றிப் பெற செய்தார்கள். இவ்வாறு முதல் அமைச்சராக்கிய மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆட்சிக்கு வந்த 4 மாதங்களுக்குள் காவல்துறையை கட்டவிழ்த்துவிட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் 7 உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் குறித்து, சிறிதும் கூட மனவருத்தம் கொள்ளாது, தவறு இழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதது போன்ற காரணங்களால் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் இந்த அரசு மீது வெறுப்பாக உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் வரும் 13ஆம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எந்தவிதத்திலும் ஆதரவு அளிப்பதில்லை என தொண்டர்களின் கருத்துக்கிணங்க புதிய தமிழகம் முடிவு செய்கிறது.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக