சனி, 29 அக்டோபர், 2011

கலைஞரை நோக்கி கேப்டன் கறுப்பு செவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு

Viruvirupu
உள்ளாட்சித் தேர்தலின்பின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. காலத்தின் கட்டாயம் அவரை தி.மு.க. பக்கமாக சாய வைக்கப் போகின்றது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்தவர் விஜயகாந்த். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இவரது பேச்சுக்கள் தி.மு.க.வை தாக்கும் வகையிலேயே அன்று முதல் இன்றுவரை இருந்தன. அப்படியான ஒருவரால், தி.மு.க. பக்கம் சாய முடியுமா?
“வேறு வழி?” என்று கேட்கிறார்கள் அரசியல் விவகாரங்களில் அவருடன் கூடவே இருப்பவர்கள்.

தே.மு.தி.க.வினரை ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் கழட்டி விட்டபோது, தனித்து நின்று சாதிக்கலாம் என்றுதான் நினைத்தார் அவர். ஒருவேளை சறுக்கினால் என்ன செய்வது என்ற செகன்ட்-தாட்டில், கம்யூனிஸ்டுகளை சேர்த்துக் கொண்டார். முடிவு ரசிக்கும் படியாக இல்லை.
மீண்டும் அ.தி.மு.க.வுடன் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு இல்லை என்றே அவர் நினைக்கிறார். கம்யூனிஸ்ட்களை அருகே வைத்திருப்பதாலும், பெரியளவில் பலன் ஏதும் கிடையாது. தனித்து நிற்பது என்ற முடிவை அடுத்த தடவையும் எடுத்து ரிஸ்க் எடுக்கவும் அவர் தயாராக இல்லை என்கிறார்கள்.
இந்த நிலையில், அவருக்கு உள்ள இரண்டு சாய்ஸ்களில் ஒன்று காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாகச் செல்வது. அடுத்தது, திமு.க.!
இதில் காங்கிரஸ் கட்சி இன்னமும் தி.மு.க.வை கைவிட்டதாக சொல்லவில்லை. கலைஞர் வேறு, டில்லிக்குப் போய் சோனியாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறார். தவிர, காங்கிரஸ் கட்சியின் ‘தனிச் செல்வாக்கும்’, உள்ளாட்சித் தேர்தலுடன் தமிழகத்தில் பல்லிளித்து விட்டது.
இதனால், தி.மு.க. பக்கமாக கேப்டனின் பார்வை செல்லத் தொடங்கியுள்ளது என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல்களில், “தி.மு.க. ஆதரவு கேட்டால் தயங்காமல் ஆதரவு கொடுக்கலாம்” என்று வாய்மொழி சம்மதம் சென்னையில் இருந்து சென்றிருக்கிறதாம்.
“நாளைக்கே நாடாளுமன்ற தேர்தலில் அவங்ககூட கூட்டணி அமைந்தாலும் அமையலாம். இப்போதைக்கு தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டாம்” என்பதே கேப்டனின் எண்ண ஓட்டம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக