சனி, 8 அக்டோபர், 2011

இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு!

உணர்வு என்ற வாரப்பத்திரிக்கையின் (செப். 2-8, 20011) கட்டுரையாளர் திரு. நிஜாம் அவர்களுக்கு, ஒருநாள் திடிரென்று அல்லா உள்ளுணர்வை ஏற்படுத்தினான். உள்ளுணர்வு என்றால் கடவுள் வானில் தோன்றி அறிவிப்பதை புரிந்துகொள்ளும் உணர்வு. இது எல்லோருக்கும் இருக்காது. சில அதிசக்தி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அப்படி நிஜாம் அவர்களுக்கு வந்த உள்ளுணர்வுதான் என்ன?
“பல பத்திரிக்கைகள் சீண்டுவதற்குக்கூட ஆள் இல்லாமல் கடைகளில் விற்பனையாகாமல் பல நாட்கள்கள் கிடக்கும்”என்ற உள்ளுணர்வுதான் அவருக்கு வந்த அற்புதம். உடல், உள்ளம் நடுங்க, வியர்த்துக்கொட்ட கொஞ்சம் நேரம் துன்ப ப்பட்ட அவர், இயல்பு நிலைக்கு திரும்பியதும் பேனாவை எடுத்தார்; எழுதினார்… ‘புத்தியிழந்த புதிய கலாச்சாரம்’ என்று பறைசாற்றினார்.
கட்டுரை கவி நயமும் இலக்கிய சுவையுடனும் இருக்க வேண்டுமல்லவா! அங்கங்கே மானே,தேனே, பொன்மானே என்று போட்டுக்கொண்டால்தானே சுவையாக இருக்கும். அதனால் ‘பழைய பேப்பர்கடைக்காரன்கூட வாங்க மறுக்கும்பத்திரிக்கை’ என்று இலக்கியச் சுவையையும் சேர்த்துக்கொண்டார். இந்து மதத்தையும், பார்பனீயத்தையும் எதிர்த்து எழுதும்போதெல்லாம் புதிய கலாச்சாரம் பிடித்தமான ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது புத்தியை இழந்துவிட்டதாக பொங்கி எழ என்ன காரணம்?

பத்திரிக்கையின் விற்பனை ரேட்டிங்கை உயர்த்துவதற்கு, இதுதான் பைபிள், இந்துமதத்தின் மூடநம்பிக்கைகள் என்று எதையாவது கிறுக்குவதைவிட்டுவிட்டு, புதிய கலாச்சாரம், இசுலாத்தை கொஞ்சம் உரசிப் பார்க்கிறது என்பதுதான் இவருக்கு வந்த உள்ளுணர்வின் ஆவேசம். இந்த உள்ளுணர்வின் உச்சகட்டம் என்ன தெரியுமா? புதியகலாச்சாரத்தின் கட்டுரையாளர் தோழர் வேல்விழி, “முயற்சி செய்து தோற்றுவிட்டார்” என்ற அறிவிப்புதான். இசுலாமியக் குழுக்களில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிஜேவின் குழுவினர் பிற இசுலாமியக் குழுக்கள் மற்றும் மத த்தவர்களுடன் விவாதம் செய்துவிட்டு பிறகு தமது பத்திரிக்கையில் ‘நாங்கள் ஜெயித்துவிட்டோம் என்று தமக்குத்தாமே முதுகை சொரிந்துகொண்டு பீற்றிக்கொள்வது வழக்கம். அதுபோல பிஜே மகானின் வாரிசு நிஜாம் அவர்களும் புதிய கலாச்சாரத்தின் கட்டுரையை படித்த அடுத்தகணமே “தோற்றுவிட்டார்” என்ற உள்ளுணர்வு மேலோங்கிவிடுகிறது.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லும் பழமொழி உங்களுக்குத் தெரியும். நிஜாம் அவர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பங்களாதேசமும், பாகிஸ்தானும் இசுலாமிய நாடுகளாக, இசுலாமியர்கள் அதிகம் வாழ்பவர்களாக இருப்பதால, குற்றம் புரிபவர்கள் எண்ணிக்கையில் இசுலாமியர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். அதுவே இந்தியாவாக இருந்தால் இந்துக்கள் கூடுதலாக இருப்பார்கள். அதற்காக இசுலாமியர்கள் அனைவரும் இல்லது இந்துக்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று சொல்ல முடியுமா? புதிய கலாச்சாரத்தின் கட்டுரையாளர் இசுலாமிய நாடுகள் என்பதை வசதியாக மறைத்துவிட்டு இசுலாமியர்கள்தான் குற்றம்  செய்கிறார்கள் என்பதுபோல் எழுதியுள்ளதாக நிஜாம் அவர்களின் நெஞ்சம் குமுறிவிடுகிறது.
புதிய கலாச்சாரத்தில் வந்த “இசுலாமியப் பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்’ என்ற கட்டுரையின் சாராம்சம் என்ன? வங்கதேசத்திலுள்ள இளைஞர்கள், பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடூரங்கள் இக்கட்டுரையின் மையக்கருத்தாகும். பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் ஆசிட்வீச்சுகளை கட்டுரையாளர் சுட்டிக்காட்டினாலும் பிரதானமாக எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் வங்க தேசத்துடையவைகள். இசுலாமியர்கள்தான் அதிகம் இக்குற்றத்தை செய்வதாக இக்கட்டுரையில் எங்குமே குறிப்பிடவே இல்லை. மதம், சமூகம், அரசு, நீதிமன்றம் ஆகியன ஆணாதிக்க சமூக கட்டமைப்பை பாதுகாப்பதால் இக்குற்றங்கள் தொடர்கின்றன, பெருகுகின்றன என்பதே கட்டுரையின் சாராம்சம்.
குறிப்பாக வங்கதேசத்தின் ஆசிட் வீச்சுகளை எடுத்துக்காட்டாக கட்டுரையாளர் கூறினாலும் “மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்களை எரிப்பதால்தான் இருக்கிறது” என்று எல்லா மதங்களும் பெண்கள் மீது வன்கொடுமையை கட்டவிழ்த்து விடுகிறது என்பதைச் சாடுகிறார். இந்து மத்தையோ, கிறித்துவ மத த்தையோ அல்லது பொத்தாம் பொதுவாகவோ கட்டுரையாளர் கூறியிருந்தால் ‘இசுலாம்தான் பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது’ என்று தமது அணிகளிடம் மாய்மாலம் செய்திகொள்ளலாம். ஆனால் கட்டுரையாளர், ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள்; அதனால் ஆண்களே பெண்களைவிட உயர்ந்தவர்கள்; பெண்கள் தவறு செய்தால் அல்லது தான் சொல்லுவதை கேட்க மறுத்தால் அடிக்கலாம்; (கொஞ்சம் லேசா ஒரு சின்ன தட்டு தட்டலாம்) போன்ற குர்ஆனின் வசங்களையும் சில சரியத் சட்ட நடைமுறைகளையும் எடுத்தாண்டு இசுலாமிய மதத்தின் கோட்பாடுகளும் ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக இருப்பதை சுட்டிக்காட்டிதால்  உள்ளுணர்வு பொத்துக்கொண்டு வந்து பட்டுக்கோட்டை கொட்டப்பாக்கு என்று சொல்ல வைத்துவிட்டது.
“மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்களை எரிப்பதால்தான் இருக்கிறது” என்றுதானே சாடுகிறார். இதுதான் இவர் எழுதியுள்ள விமர்சனத்தின் புத்தி மிகுந்த கருத்துக்கள். தோழர் வேல்விழி கம்யூனிசத்தின் தரப்பிலிருந்து எழுதியுள்ளதற்கு கம்யூனிசம் எப்படி பெண்களை அடிமைப் படுத்துகிறது கம்யூனிஸ்கள் அதிகர் வாழும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறிகளில் அந்நாட்டவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். அதனால் கம்யூனிஸ்ட்கள் குற்றவாளிகளாக உள்ளதாகவும், பாழாய்போன கம்யூனிசம்தான் இதற்கு காரணம் என்றும் சொல்ல்லாமா? புகவின் கட்டுரைப்படி அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நிஜாம் கூறுகிறார். கம்யூனிஸ்ட்கள்தான் அதிகம் குற்றம் புரிகிறார்கள் என்பதற்காக கம்யூனிஸ்டுகள் என்றாலே குற்றவாளிகள்தான்; கம்யூனிசமே இதற்கு காரணம் என்று சொல்லுவது தவறு என்பதுபோல் இசுலாம்தான் காரணம் என்று சொல்லக்கூடாது. அப்படி நாங்களும் சொன்னால் என்னவாகும் என்று சின்னதாக பயமுறுத்தி, புகவிற்கு ‘நல்ல புத்தி’ சொல்லி சொல்கிறார்.
இசுலாமியர்கள்தான் ஆசிட்வீச்சு போன்ற கொடூரங்களைச் செய்வதாக தோழர் வேல்விழி எந்த இடத்திலும் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ். காலிகள்கூட இப்படிச் செய்கிறார்கள் என்பதை சான்றுடன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் நிஜாம் அவர்கள், இச்சுலாமிய ஆணாதிக்க கோட்பாடுகளை எடுத்தெழுதிவிட்டதால் “நாங்கள கம்யூனிஸ்கள்தான் கொடுரமானவர்கள் என்று சொன்னால் என்னவாகும் என்ற தொனியில் மிரட்டிப்பார்க்கிறார். எற்கனவே அப்படி புழுகிக் கொண்டுதான் திரிகிறார்கள் என்பது வேறு விஷயம்.
நிஜாம் அவர்களே, ரஷ்யாவிலும், சீனீவிலும் உள்ள கம்யூனிஸ்ட்கள் பெண்கள் மீது ஆசிட்டை எங்கே வீசினார்கள்? கம்யூனிசத்தின் எந்தக் கொள்கை பெண்களை அடக்கி ஆளவேண்டும், கற்பழிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று கூறுகிறது என்பதைச் சொல்லவேண்டுமல்லவா? அதுதானே புத்தியுள்ள விமர்சனமாக இருக்கும். தோழர் வேல்விழி எடுத்துவைத்துள்ள சான்றுகள் சில மட்டும்தான். இன்னும் நிறைய எடுத்துச் சொல்லலாம். அதுபோல கம்யூனிச கொள்கையின் ‘ஆணாதிக்க சட்டங்களை’ எடுத்தெழுதி உங்கள் விமர்சனங்களை கூறுங்கள். ஆத்திரம் தலைக்கேறி உளற வேண்டாம்.
பதில் சொல்ல முடியாமல் சிக்கிக்கொண்டால் அந்த அவமானமே ஆத்திரமாக உருவெடுத்து தொடர்பில்லாமல் உளரவைக்கும். அதுபோல நிஜாம் அவர்கள், “அந்தப் பகுதியில் மிகவும் எளிதாக ஆசிட் கிடைக்கிறது என்று கட்டுரையாளரே கூறியுள்ளார். அதனால் அவர்கள் எளிதாக ஏந்தும் ஆயுதம் ஆசிட் என்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. கள்ளிப்பாலும், நெல்மணியும் எளிதாக கிடைப்பதால், தமிழகத்தில் உசிலம்பட்டி பகுதியில் பச்சிளங் குழந்தைகளை அதனைக் கொண்டு கொலை செய்கிறார்கள்; உசிலம்பட்டி பகுதியில் அப்படி நடக்கிறது என்றுச் சொன்னால் நியாயம் இருக்கிறது; ஒட்டு மொத்த இந்தியாவிலும் கள்ளிப்பாலைக் கொடுத்துக் குழந்தைகளை கொலைசெய்கிறார்கள் என்று சொல்லுவது முட்டாள்தனம். அதுபோலத்தான் ஆசிட் கதையும்” என்று எழுதியுள்ளார்.
இவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. ஆசிட் எளிதாக கிடைக்கிறது என்று உங்களுக்கே தெரிகிறது; அப்படியிருப்பதால் ஆசிட்டை பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது என்று கேட்கிறாரா? அல்லது துப்பாக்கி எளிதா கிடைச்சா துப்பாக்கியால சுடுவோம்ல என்று சொல்ல வருகிறாரா? வீட்டுக்குவீடு கத்தி அரிவாள்மனைகள் இருக்கும்போது, எளிதாக கிடைக்கும்  அதைப் பயன்படுத்தாமல் ஆசிட்டை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று தோழர் வேல்விழி கேட்பதாக கற்பனை செய்து கொண்டு பதில் சொல்கிறாரா? அல்லது எளிதாக கிடைக்காத துப்பாக்கிக்கொண்டு சுடுங்கள் பார்போம் என்று புக சவால் விட்டுள்ளதா? ஒன்றுமே புரியவில்லை. கள்ளிப்பால், நெல்மணி எல்லாம் இங்கே எதுக்கு சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை.
இங்கே கள்ளிப்பாலைக் கொடுத்து கொலை செய்வதைப் போல, அங்கே ஆசிட் வீசுகிறார்கள். இதில் என்ன கட்டுரையாளர் அதிசயத்தை கண்டுவிட்டார் என்று கேட்கிராறோ நிஜாம். ஒருவேளை அரிதாக கிடைக்கும் துப்பாக்கியால் சுட்டால் இக்கட்டுரை தேவையில்லாததாகிவிடும் என்று நிஜாம் கருதுகிறாரா? ஆயுதம் எதுவானாலும் ஆணாதிக்க வன்கொடுமை என்பதுதானே மையக்கருத்து. அதுபோல ஒட்டுமொத்த இசுலாமியர்கள் என்றோ, இசுலாமியர்கள் என்றாலே கொடுரமானவர்கள் என்றோ கட்டுரையாளர் கூறவில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.இசுலாமியர்களில், ஆணாதிக்க கொடூரர்களாக  இருப்பவர்களுக்கு அதற்கு காரணமாக இசுலாமியக் கோட்பாடும் உள்ளது என்பதே கட்டுரையின் சாராம்சம். அது மட்டுமல்ல,  சினிமா, விளம்பரங்கள் போன்ற நவீன முதலாளித்துவ விழுமியங்களும் இவர்களின் கொடுர மனநிலைக்கு காரணமாக உள்ளதையும் தோழர் வேல்விழி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனாலும் பிற ஆயுதங்களைவிட ஆசிட் வீச்சில் மனித இனத்திற்கே கேவலமான கொடூரமான மனநோய் உள்ளது. பிற ஆயுதங்கள் உடலை சிதைப்பதைவிட ஆசிட் உடலை, அதிலும் குறிப்பாக முகத்தை சிதைக்கும் கொடூரம் மிக மிக வக்கிரமானது. தனக்கு கிடைக்காத அந்தப் பெண், கோரமுகத்துடன் தினம் தினம் செத்து பிழைக்கவேண்டும் என்ற வக்கிரம். கொஞ்ச நாளில் அவள் அந்த கொடூரத்தை மறந்து விடக்கூடாது என்ற மனவக்கிரம்.  எழுத்தால் சொல்ல முடியாத வக்கிரம். பின்னே சும்மாவா? “ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்” என்று முகம்மதுநபி சொல்லி இருக்கும்போது, இந்த ………… பெண்கள்,இவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தால் ஆசிட் வீசாமல், வேடிக்கையா பார்பார்கள்?
தமிழகத்தில் நடக்கும் பெண்குழந்தைகளின் கொலைக்கு காரணம் என்ன? பெண் குழந்தை என்றால் திருமணக்காலத்தில் வரதட்சிணை போன்ற நெருக்கடி ஏற்படும். அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் அக்குழந்தையை கொன்று விடுகிறார்கள். அதுபோல வங்கத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆணாதிக்கமும் அதனை வளர்க்கும் மதமும் காரணமாக அமைகிறது.  வங்கத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடந்ததாகவே இருக்கட்டும். அதனைச் சுட்டிக்காட்டியும், அதற்கு காரணமாக அமைவதையும் எழுதக்கூடாதா? ஒட்டு மொத்த வங்கத்திலும் நடந்தால்தான் எழுதனுமா? வேடிக்கையாக இருக்கிறது இவரது உள்ளுணர்வு.
அடுத்து ஒரு தொடர்பில்லாத உளறல். பிற மதங்களைவிட இசுலாம்தான் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதாக பிறமதங்களை ஒப்பிட்டு புலம்புகிறார். தோழர் வேல்விழி பிற மதங்கள் நல்ல மதங்கள் என்று எங்கேயும் கூறவில்லை. எல்லா மதங்களும் பெண்களை ஒடுக்கி வருகின்றன என்பதைத்தானே எழுதியிருக்கிறார்.
பிரான்ஸ் போன்ற நாடுகள், பொதுவிடங்களில் புர்கா அணிய தடைச் சட்டம் இயற்றி இசுலாமியப் பெண்களுக்கு உதவிட முயற்சிக்கையில், ஆசிட் வீச்சின் அலங்கோலமாகிப்போன பெண்கள் தமது அலங்கோலத்தை மறைக்க புர்காவை விரும்பி அணிய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர் என்று பெண்ண்டிமைச் சின்னமான புர்கா பற்றி எழுதியதும், புர்காவின் மாண்புகளும் மாண்புமிக்கவர்களும் பெட்டிச் செய்தியாக பரிணமித்துவிட்டது. புர்கா பற்றி சொல்ல வேண்டுமானால் பல பக்கங்கள் வேண்டும். கொஞ்சமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் எனது  “2010ல் இசுலாமியப் பெண்கள் – மதமும் வாழ்க்கையும்”   கட்டுரையை படித்துக்கொள்ளுங்கள்.
முதலமைச்சர் ஜெயலிதா முழுக்க போர்த்திக்கொண்டு வலம் வந்த போதும் அவரது முன்னேற்றத்தை தடுக்கவில்லையாம். சினாமாவில், இதற்கு முன் அரசியலில் கவர்ச்சியாக வந்தபோதும் அவரது முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கவர்ச்சியே அவரை இன்றுவரை அரசியலில் அசைக்க முடியாத(!) முன்னேற்றத்தை தந்துள்ளது. இவர்கள் (தவ்ஹீது அமைப்பினர்) உட்பட இசுலாமிய அமைப்புகள், கட்சிகள்கூட இன்று அவரின் தயவுக்கு மண்டியிட்டு காத்திருக்கும் அளவுக்கு முன்னேற்றத்தை தந்துள்ளது. அப்படி என்றால் கொஞ்சம் நாளைக்கு கவர்சியாக இருந்து எல்லோரையும் வலைச்சு போட்டுக் கொள்ளலாம் என்பது நிஜாம் அவர்களின் ஆசை என்று சொல்ல்லாமோ? நல்லவேளை, ரம்ஜான் நேரங்களில் முக்காடு போட்ட மாதிரி ஜெயலிதா பேனர்களில் காட்சி தருவது போல், புர்கா போட்ட மாதிரி ஒரு படத்தை உணர்வில் போட்டு புர்காவின் மாண்பு பற்றி பீற்றிக்கொள்ளாமல் இருந்தாரே. அதற்காக மகிழ்சியடைவோம்.
இவைகளெல்லத்தையும் விடுங்கள். தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பில் உள்ள இவர்கள் தங்களைத் தவிர பிற இசுலாமிய இமைப்பில் உள்ளவர்கள் இல்லாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று  பட்வா கொடுத்து ரொம்ம நாளாச்சுங்களே! பிறகேன் இவர் வங்கத்து (இசுலாமிய) மக்களை, முசுலீம்கள் என்று வக்காலத்து வாங்குகிறார் என்று புரியவில்லை. நாங்கள் எத்தனை குழுக்களாக வேண்டுமானாலும் பிரிந்துகொண்டு அடிச்சிக்குவோம்; காறி துப்பிக் கொள்வோம்; ஆனால் கம்யூனிஸ்கள் ஏதாவது சொன்னா ஒண்ணா கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைப்போம் என்று கூறுகிறாரோ நிஜாம்? பெண்கள் மீதான இது போன்ற கொடூரங்களுக்கு விரலைக்கூட அசைக்காத இவர்களை இசுலாமிய மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும்.
_______________________________________________________________
- சாகித் www.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக