செவ்வாய், 11 அக்டோபர், 2011

தனியாக வசித்து வந்த மூதாட்டி பூஜை அறையில் கொடூர கொலை


சென்னை : கோடம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி பூஜை அறையில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 35 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி 2வது தெருவில் வசித்தவர் பரமேஸ்வரி(65). இவரது கணவன் லோகநாதன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குணவதி, விஜயா என்ற மகள்கள் உள்ளனர்.
முரளி, ரவி என்ற 2 மகன்கள் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மகள்களுக்கு திருமணமாகி சென்று விட்டதால் பரமேஸ்வரி மட்டும் தனியாக வீட்டில் குடியிருந்தார். இவருக்கு சொந்தமாக அங்கு 11 வீடுகள் உள்ளன. வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீட்டில் கோடம்பாக்கம் வரதராஜபேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன்(40) என்பவர் வேலை செய்து வந்தார். பரமேஸ்வரிக்கு எல்லா உதவிகளையும் இவர்தான் செய்து வந்தார்.
நேற்று காலை வெங்கடேசன் வேலைக்கு வந்தார். வீட்டிற்குள் சென்றதும் பூஜை அறையில் பரமேஸ்வரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.  உடனடியாக சூளைமேடு பஜனை கோவில் தெருவில் வசிக்கும் பரமேஸ்வரியின் பேத்தி லாவண்யாவுக்கு தகவல் கூறினார். அவர் வந்து பார்த்தபோது, பாட்டி அணிந்திருந்த 3 தங்க செயினை காணவில்லை என்பது தெரிந்தது. அவை மட்டும் 35 சவரன். வடபழனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், “2 மகன்களும் தற்கொலை செய்த பிறகு எந்த உறவினரையும் வீட்டிற்கு வர விடுவதில்லை. மகள்களைக் கூட வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. வாடகை பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டு வந்துள்ளார். வட்டிக்கு விட்டும் சம்பாதித்துள்ளார். இந்த வட்டி பணத்தை வசூல் செய்வதற்காக சொந்தமாக ஆட்டோ ஒன்றையும் வாங்கி வைத்துள்ளார். ஆட்டோ ஓட்டுவற்காகவும், வீட்டு வேலைகள் செய்வதற்காகவும் வெங்கடேசனை வேலைக்கு அமர்த்தியுள்ளார். வேலையை முடித்து விட்டு வெங்கடேசன் வீட்டுக்கு சென்று விடுவார்.

எப்போதும் பரமேஸ்வரி 50 சவரன் நகை அணிந்திருப்பார். கொலை நடக்கும் போது 35 சவரன் நகை மட்டுமே அணிந்து இருந்தார். கொலையாளி அவரது கையில் இருந்த வளையல்களை கழற்ற முயன்றுள்ளார். அது முடியாததால் அப்படியே விட்டுள்ளது தெரிகிறது. இரும்பு பைப்பால், பரமேஸ்வரியின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்ததால் அவர் இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த கொலையை செய்து இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக