செவ்வாய், 11 அக்டோபர், 2011

கண்ணிவெடி அகற்றுதல்: உயிரைப்பணயம் வைத்து அகற்றும் பணியாளர்கள்


- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
landmineஅதிகாலை ஐந்து மணி. கிளிநொச்சி நகரம். அதன் மேற்குப் பகுதியில் பெரியதொரு படைமுகாம். அது 57 ஆவது படையணியின் தலைமையகம்.
அதற்கருகில் பெரியதொரு பரப்பளவில் கைவிடப்பட்ட வாகனங்களின் குவியல். இந்த வாகனங்களை வன்னிச் சனங்கள் போரின்போது கைவிட்டிருந்தார்கள். எரிந்தவையும் அழிந்தவையும் போக மிஞ்சியவற்றை புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை போன்ற இடங்களில் இருந்து கொண்டு வந்துகுவித்திருக்கிறார்கள், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினர்.
இந்த வாகனங்களை அடையாளங்காட்டக் கூடியவர்கள், தங்களுடைய ஆவணங்களுடன் வந்து அவற்றை மீட்டுச் செல்கின்றனர். இந்தப் பழைய வாகனங்களைக் குவித்திருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது, ‘ஹலோ ட்ரஸ்ற்’ என்ற கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கே அந்த நேரத்தில் - அதிகாலையில் - கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கென்று வருகிறார்கள் நூற்றுக்கணக்கானவர்கள்.
‘ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேற்பட்டவர்கள் பணியிலீடுபடுகிறார்கள்’ என்கின்றார், ஹலோ ட்ரஸ்ற் நிறுவனத்தின் அதிகாரியொருவர். இவர்களில் அநேகர் பெண்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் கணவனை இழந்தவர்கள். (இதைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் சொன்னார், கண்ணிவெடி அகற்றும் விதவைகள்’ என்று). சிலர் தாங்களே உழைத்து வயதான தங்களின் பெற்றோரைப் பார்க்க வேண்டியவர்கள்.
கிளிநொச்சியின் ஆழ்கிராமங்களில் இருந்து சைக்கிள்களில் வருகின்ற இவர்களை ஏற்றிக் கொண்டு ‘ஹலோ ட்ரஸ்ற்’ வாகனங்கள் பொழுது புலரும் வேளையில் பணியிடங்களை நோக்கிப் புறப்படுகின்றன. நாகர்கோவில், கிளாலி, அக்கராயன் நான்காம் கட்டை, இயக்கச்சி, கிளிநொச்சி எனப் பல இடங்களிலும் கண்ணி வெடிகளும் மிதிவெடிகளும் அகற்றப்படுகின்றன. தினமும் வெடிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் பகுதியில் தினமும் சராசரியாக 250 தொடக்கம் 400 வரையான வெடிபொருட்கள் மீட்கப்படுவதாக ஹலோ ட்ரஸ்ற் அமைப்பில் பணியாற்றும் இடைநிலை அதிகாரியொருவர் தெரிவிக்கிறார். அங்கே 210பேர் மிதிவெடி மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் களப்பணியில் ஈடுபடுகிறார்கள். இதுவரையில் ஏழுபேர் காயப்பட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அங்கே வெடிபொருட்களின் தொகையும் அபாயமும் உள்ளது. ‘ஒரு நாளைக்கு மிகச் சில மீற்றர் அளவே துப்பரவு செய்யப்படக்கூடியதாக இருக்கிறது என்று மேலும் அந்த அதிகாரி சொல்கிறார்.
இதைப்போலவே முகமாலைப் பகுதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போரின்போது விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையிலான முன்னரங்கப் பகுதியாகவும் போர்க்களப்பகுதியாகவும் இந்தப் பிரதேசங்கள் இருந்தமையால் கணக்கு வழக்கின்றி இந்த அபாயப் பொருட்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன.
ஆகவே, இந்தப் பிராந்தியங்கள் மிகமிக ‘ஆபத்தான – அபாயப்பிராந்தியங்களாக’ இன்று மாறியிருக்கின்றன. வீடுகள் அழிந்து, மரங்கள் எல்லாம் பட்டுப்போய், ஊர்கள் என்ற அடையாளமே இல்லாமல், காடும் புதரும் வெளியே தெரிய, உள்ளே வெடிப் பொருட்களை வைத்துக் கொண்டு, அபாயப் பிராந்திய அறிவிப்பு நாடாக்களுடன் இருக்கும் இந்தப் பிரதேசங்களை மீட்பதற்காகவே ‘ஹலோ ட்ரஸ்ற்’ அமைப்பு தொழிற்படுகிறது. (இதைப்போல வேறு அமைப்புகளும் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன). இந்த அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினர் நிதிப்பங்களிப்புச் செய்கின்றனர்.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதை உறுதிப்படுத்தினாலே மீள் குடியேற்றம் சாத்தியமாகிறது. இல்லையெனில் அதற்கான சாத்தியங்களே இல்லை. அண்மையில் அறிவிக்கப்பட்ட கிளாலிப் பகுதியின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சாத்தியமற்றுப் போனமை இதற்கு நல்லதொரு உதாரணம்.
இந்தப் பகுதியில் கடந்த 26 ஆம் திகதி மீள் குடியேற்றம் நடைபெறவுள்ளது landmine-1என ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்களும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலக வட்டாரங்களும் தெரிவித்திருந்தன. ஆனால், நடைமுறை ரீதியில் கண்ணிவெடிகளை அகற்றியதற்கான உறுதிப் பாட்டுச் சான்றிதழை வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் படையணிகளின் எல்லை தொடர்பான விவகாரம் போன்ற காரணங்களினால், இந்த மீள் குடியேற்றம் சாத்தியமற்றுப் போனது என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
பிறகு, இது தொடர்பான மீளாய்வுகள் நடைபெற்று  இந்த மாத நடுப்பகுதியையொட்டி இந்த மீள் குடியேற்றப்பணிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 05.10.2011 அன்று  நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முருகேசு சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் திரு. த. முகுந்தன், கொடிகாமம் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 522 ஆவது படையணியின் தளபதியான பிரிகேடியர் அத்துல டி சில்வா, ஹலோ ட்ரஸற் நிறுவனப்பிரதிகள், யு. என். டி. பியின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், மற்றும் கிளாலிப் பகுதிப் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கிளாலி மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்திருக்கின்றனர்.
இதனையடுத்து ஒரு தொகுதியினர் பிரதேச செயலர் திரு. முகுந்தன் தலைமையில் கிளாலிப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்தனர். முற்றாகவே அழிவடைந்திருக்கும் அந்தப் பகுதியைப் பார்க்கும் போது கால்வைப்பதற்கு மனம் தயங்குகிறது. ஆனால், அந்தப் பகுதி மக்கள் மீண்டும் தங்கள் நிலத்தில் கால்பதிப்பதற்காகத் தவிக்கிறார்கள். இந்தத் தவிப்பைப் புரிந்து கொண்டு, அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கின்றன ஹலோ ட்ரஸ்ற் மற்றும் யு. என். டி. பி ஆகியன.
மிதிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன என்பதை உறுதிப் படுத்தும் பொறுப்பை அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தரப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த உறுதி மொழியானது ஐ. நா முகவர் அமைப்புகளின் ஊடாகவே அரசாங்கத்துக்கு – படைத்தரப்புக்கு வழங்கப்படுகிறது. பின்னர் படையினர் இதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் பிறகே குறிப்பிட்ட பிரதேசங்களில் மீள் குடியேற்றப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மாவட்டச் செயலக உயர் அதிகாரியொருவர் இது தொடர்பாக விளக்குகிறார்.
ஆகவே, இதுவொரு தொடர்பணி. மட்டுமல்ல பலருடைய கூட்டுப்பணியும் கூட.  ஆனால், இதில் முக்கிய பங்கேற்பாளராக இருப்போர் மிதிவெடிகளை – கண்ணிவெடிகளை அகற்றுவோரே. அவர்களே மக்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கின்றனர். அவர்களே, மீள்குடியேற்றத்தின் வாசற்கதவுகளைத் திறக்கின்றனர். இதற்காக அவர்கள் உயிராபத்துகளின் மத்தியிற் பணியாற்றுகின்றனர். (இந்தப் பணியில் ஈடுபடும் கணவனை இழந்த பெண்களுக்கு ஏதாவது உயிராபத்துகள் ஏற்படுமானால், இவர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை – அந்தப் பிள்ளைகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்).
ஒரு காலம் விதைக்கப்பட்டவைகள் இப்பொழுது மீட்டெடுக்கப்படுகின்றன. இந்த விதைப்பும் ஆபத்தானது. மீட்டெடுப்பும் ஆபத்தானது. போரின்போது விடுதலைப் புலிகளினாலும் படையினராலும் ஏட்டிக்குப் போட்டியாக விதைக்கப்பட்ட கண்ணி வெடிகளும் மிதிவெடிகளும் இன்று மக்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கடியைக் கொடுக்கும் அளவில் இந்தச் சவால்கள் இருக்கின்றன.
இந்தச் சவால்களை இன்று முன்னெடுப்போர் வன்னியிலுள்ள வறிய நிலையிலுள்ளோரே. மிதிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் வறிய நிலையில் இருப்போரே என்பதை மீண்டும் இங்கே நினைவு படுத்துகிறோம்.
நாளொன்றுக்கு 850 ரூபாய் சம்பளத்துக்கு இந்தப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அதுவும் தினக்கூலிகளாக. ஆனால், இந்த வேலை கிடைத்திருப்பதே தமக்குப் பெரிய உதவியும் ஆறுதலும் என்கின்றனர் இந்தப் பணியாளர்கள். போருக்குப் பிந்திய வாழ்க்கை மிகவும் சிரமமாகவே இருக்கிறது பலருக்கும். அந்தச் சிரமங்களைத் தவிர்ப்பதற்கு இந்த மாதிரியான பணிகள் உதவுகின்றன. ஆபத்தான பணிகளாக இருந்தாலும் வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு உதவுகிறதே என்று இந்தப் பணிக்குப் போகிறார்கள்.
அதிலும் கணவனை இழந்த – ஆதரவற்ற பெண்களிற் பலருக்கு இந்தப் பணி ஒரு பேருதவியாகவே இருக்கிறது. வெடிபொருட்களை அபாயப்பிராந்தியத்தில் அகற்றும் ஒரு பணிக்கு தமிழ்ப் பெண்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது சாதாரணமானதல்ல. இதில், என்ன புதுமை இருக்கிறது? ஆயுதமேந்திப் போராடிய பெண்கள் இந்த வெடிப் பொருட்களை அகற்றுவதில் என்ன விசேசம் என்று யாரும் கேட்கலாம்.
ஆனால், அது வேறு. இது வேறு. அது தாமாகவே விரும்பி, போராட்டத்தில் இணைந்து, பயிற்சி எடுத்து, போராட்டப் பணிகளைச் செய்து தேர்ச்சி பெறுவதன் மூலமான செயற்பாடு. இது அவ்வாறல்ல. வாழ்க்கையை ஓட்ட வேண்டும், குடும்பத்தைப் பாதுகாக்க வேணும் என்ற தவிர்க்க முடியாத நிலையில், வாழ்வதற்கான தொழிலாக இந்தப் பணியில் ஈடுபடும் நிலை.
மீள்குடியேற்றத்தைச் சாத்தியப்படுத்துவதற்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்;ட நிலப்பகுதியை மீண்டும் மக்கள் வாழக்கூடிய – அவர்கள் தொழிற் செய்யக் கூடிய – புழங்கக் கூடிய பகுதியாக மாற்றுவதற்கும் பங்களிக்கும் இந்தப் பணியாளர்கள் நிச்சயமாகப் போற்றப்பட வேண்டியவர்கள்.
அபாயப் பிராந்தியமொன்றை, அபாயமற்ற பிராந்தியமாக மாற்றி, அதை உத்தரவாதப்படுத்துவதென்பது எவ்வளவு மகத்தான பணியாகும். உண்மையில் இது ஒரு ஒப்பற்ற சேவையே. பட்ட மரங்களாக மாறிய ஒரு சூழலை பசுமையான சூழலாக மாற்றும் ஒரு சூழலியற் பணி இவர்களுடையது. வெறும் அறிக்கைகளிலும், கருத்தரங்குகள், வாய்ப்பேச்சுகள், அமைப்புகள், அடையாளப்படுத்தல்கள் என்று தங்களைச் சூழலியலாளர்களாக முதன்மைப்படுத்தி, ஒளிவட்டங்களைச் சூடிக் கொள்ளுவோரிடையே, இவர்கள் தங்களின் உயிரையும் உழைப்பையும் கொடுத்து அதைச் சாத்தியப்படுத்துகிறார்கள்.
ஆகவே, போருக்குப் பிந்திய இந்தச் சிறந்த, முக்கியமான பணியை, பங்களிப்பை வழங்குவதில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியாளர்களே முதலிடம் பெறுகின்றனர். கண்ணிவெடி அகற்றப்படாத எந்தப் பகுதியிலும் யாரும் மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்பது இந்தப் பணியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. ஆகவே, இந்தப் பணியாளரைக் குறித்த கவனம் என்பது சமூக மட்டத்தில் ஏற்பட வேண்டும். அது உயர்வுற வேண்டும். ஆனால், அது அப்படி நடக்கவில்லை.
இவர்கள் தொண்டு நிறுவனமொன்றில் வேலைசெய்கிறார்கள் என்ற மனப் பதிவே பலரிடமும் காணப்படுகிறது. அதுவும் அடிமட்டப் பணியாளர்களாகவே செயற்படுகிறார்கள் என்று. ஆனால் இவர்கள், காட்டிலும் மேட்டிலும் மண்ணைக் கிண்டி, கிளறி கண்ணிவெடிகளைத் தேடுகிறார்கள். களைத்துப் போன முகங்களோடும், வெயிற் காய்ந்த களைப்போடும் அழுக்கடைந்த உடைகளோடும் தினமும் வேலை முடிந்தபின் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். இவர்களின் வீடுகளோ குடிசைகளாகவும் இருளடைந்த வீடுகளாகவும் இருக்கின்றன.
போருக்குப் பிந்திய நிலைவரங்களை உருவாக்குவதில் இவர்கள் முக்கியபங்காற்றியிருக்கின்றனர் என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இன்னும் பல கிராமங்களும் பல பிரதேசங்களும் இவர்களுடைய பணிக்காகவும் ‘சுத்தமாக்கப்பட்டவை’ என்ற இவர்களின் உறுதிப்படுத்தலுக்காகவும் காத்திருக்கின்றன.
‘கிளாலி மீள் குடியேற்றத்தைப் பற்றிப் பேசும்போது, முகமாலை, இத்தாவில் பகுதியில் எப்போது கண்ணிவெடிகள் அகற்றப்படும்’ என்று அந்தப் பகுதி மக்கள் ஆவலோடு கேட்டார்கள். அதற்கு ஒரு புன் சிரிப்பை மட்டுமே உதிர்த்தார் ‘ஹலோ ட்ரஸ்ற்’ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். கூடவே அவர் தன்னுடைய பணியாளர்களையும் பார்த்தார்.
இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. ஏனெனில் அந்தளவுக்கு அந்தப் landmine -3பகுதியில் மிக அதிகமான மிதிவெடிகளும் கண்ணி வெடிகளும் இருக்கின்றன என்பதே அவர் சொல்லாமற் சொன்னது. ஏனெனில், இவர்கள் தான் தினமும் அந்த வெடிப் பொருட்களை அப்புறப்படுத்துகிறார்கள். அங்குலம் அங்குலமாக அவற்றைத் துப்புரவு செய்கிறார்கள். ஆகவே அவர்களின் பணியைப் பொறுத்தே அந்தப் பகுதிகளின் மீள் குடியேற்றம் நடக்கும் என்பதே அவருடைய கண் ஜாடை சொன்ன பதிலாகும்.
ஆகவே, இந்த நிலையில் இதைப் பற்றித் தம்மால் அறுதியிட்டுக் கூறமுடியாது என்பதே அவருடைய செய்தியாகும் – பதிலாகும்.
வீதியால் இந்த, கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் செல்லும்போது பெரும்பாலும் அநேகரும் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், அதைப் பற்றிய கவலைகளை எல்லாம் விட்டு விட்டு இவர்கள் தங்களின் பாட்டில் தங்களின் காரியங்களைப் பார்த்துக்கொள்கிறார்கள். அப்படித் தங்களின் பணியைச் செய்யும் இவர்களை வன்னியின் தெருக்களில் தினமும் நீங்கள் பார்க்கலாம்.
கனத்த உடை, களைப்படைந்த முகம், அழுக்கடைந்த தேகம், பழைய சைக்கிள்கள்.... மதியத்துக்குப் பின்னர் இதே கோலத்தில் இவர்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியை இவர்கள் மீட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதேசத்தை விடுவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு பொழுதிலும் இயல்பு வாழ்க்கையை நோக்கிச் சமூகத்தை நகர்த்துவதற்கு உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மக்களின் மீள் குடியேற்றத்துக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதை யாரறிவார்? யார் புரிந்து கொள்வார்?
இவர்களை விட, இவர்களுடைய பணிகளை விட அரசியல்வாதிகளின் அறிக்கைகளே எல்லோருக்கும் தெரிந்தனவாக இருக்கின்ற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக