சனி, 1 அக்டோபர், 2011

புலிக்கொடி ஏந்தி புலன்கெட்டுக் கிடக்கும் புலன்பெயர்

இன்னும் பல சராச்சந்திரன்களை உருவாக்கத் துடிக்கும் புலன்பெயர் புலியமைப்புக்கள் (ஜிரிஎவ்,ரிஜிரிஇ,பிரிஎவ்.ரிவைஓ…..இன்னும் பல) திருந்துவார்களா இவர்கள்….?

நியூயோர்க் சிறையிலிருந்து கனேடிய முன்னாள் இளையோர் அமைப்பின் தலைவரான சதாஜன் சராசந்திரன் தன்நிலையுணர்ந்து வரைந்த கடிதம் இன்னும் புலிக்கொடி ஏந்தி புலன்கெட்டுக் கிடக்கும் புலன்பெயர் தமிழர்களின் இதயத்தை உலுக்கியிருக்க நியாயமில்லைத் தான்.
அவர் தனது கடிதத்தில் பிழையான வழி நடத்தல்களாலும் தேவையற்ற வகையில் வன்முறை உணர்வுகளைத் தூண்டி விட்டதாலும் தான் இந்த  நிலைக்குள்  மீளமுடியாத சகதிக்குள் வீழ்ந்துவிட்டதாக எண்ணி மிக வேதனைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட 25 வருட சிறைத்தண்டனையில் ஐந்தாண்டுகள் மட்டுமே கழிந்த நிலையில் தான் சார்;ந்த இளம் சமூகம் இந்த வன்முறைப் போராட்டங்களில் சிக்கி வழி தவறிவிடக்கூடாது என்ற நன்னோக்கோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் ஆயுதங்களை ஏந்தி தமிழ் இளைஞர் யுவதிகள் தவறிழைக்கக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.அதேவேளை இவ்வாறு வழிநடத்தும் தலைமைகள் சுயநலநோக்கோடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தலைமைகளிடம் சிக்கி புலம்பெயர் தேசங்களிலும் எமது இளம் சமூகத்தை சீரழிவதற்கு நாம் எல்லாம் காரணகர்த்தாக்களாக வேண்டுமா?
ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கத்தவர்களாகட்டும் உலகத்தமிழர் பேரவையின் அங்கத்தவர்களாகட்டும் இளையோர் அமைப்பின் தலைவர்களாகட்டும் நெடியவன் குழுவினராகட்டும்  சர்வதேச தமிழ்பெண்கள் அமைப்பின் அங்கத்தவர்களாகட்டும் இன்னும் புதிதுபுதிதாய் புலன்கெட்;டு முளைவிடும் புத்தம் புது புலன்பெயர் அமைப்புக்களின் அங்கத்தவர்களாகட்டும் நீங்கள் எல்லாம் சேர்ந்து வடம் பிடித்து கரம் கோர்த்து இன்னும் எத்தனை சராச்சந்திரன்களை சிறைகளில் அடைத்து அவர்களின் வாழ்க்கையை கபளீகரம் செய்ய வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றீர்கள்?
எதற்கெடுத்தாலும் போராட்டம்……? புலம்பெயர்ந்து வாழும் இன்றைய இளம் சமூகத்தினர் பலருக்கு வரைபடத்தில் கூட தமது பெற்றோர் மூதாதையர் வாழ்ந்த மண் எங்கு இருக்கின்றது என்பது கூட சரியாகத் தெரிவதில்லை. ஒரு சிலருக்கு இலங்கையின் ஜனாதிபதி தலைநகரமோ என்னவென்றே தெரியாது. தமிழில் ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியாத துர்ப்பாக்கிய நிலையில் தான் அவர்கள் வாழ்க்கை உள்ளது. ஆனால் போராட்டம் என்று உசுப்பிவிட்டால் புலிக்கொடியை தூக்கவும் பிரபாகரனின் உருவப்படத்தை தாங்கவும் புலிச்சின்னம் பொறித்த ரீ சேர்ட்டுக்களை அணியவும் தயங்கமாட்டார்கள். நாம் ஏன் இப்படி ஆடுகின்றோம் என்பது கூட தெரிவதில்லை. யாரோ ஆட்டுவிக்க தன்னிலையுணராது ஆடியகுற்றத்திற்காக இன்று சிறையில் சிதைந்து வாடும் சகோதரனின் சராச்சந்திரனின் உருக்கமான வேண்டுகோளாவது உங்கள் மனக்கண்களை திறக்கட்டும்.
புலன்பெயர் இளையோர் அமைப்புக்களில் இருப்பவர்கள் அனைவரும் இந்த கடிதத்தினை வாசித்து அவரின் வேண்டுகோளை புரிந்து கொள்ளுங்கள்.
(ஆங்கிலத்தில் வரையப்பட்ட அவரது கடிதத்தின் இணைப்பு முகவரி)
http://www.mercyfortamilprisoners.com/SathaLetter.pdf
யுத்தத்தினால் சீரழிந்து போன எம் மக்களுக்காக உங்கள் பங்களிப்புக்களை வழங்க முன் வாருங்கள். அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உங்களாலான கடமைப்பாடுகளை தட்டிக்கழிக்காது செய்யுங்கள். அதனை விடுத்து தலைகழன்ற தலைமைகளின் கட்டளைகளுக்;கு சதிராட்டம் போடாதீர்கள்.
விடுதலைப் புலிகளினால் தனது வாழ்க்கையை அழித்துக் கொண்ட இன்னும் எத்தனையோ சராச்சந்திரன்கள் மௌனம் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிறையில் வாடும் இந்தச் சதாஜன் சராச்சந்திரன் சமூகஅக்கறையுள்ளவராக இருந்தததினால் இந்தக் கடிதத்தை தனது சமூகத்திற்காக எழுதியுள்ளார்.
இன்றும் வெற்றுக் கோஷங்கள் போடும்படி கூவியழைக்கும் புலித்தலைமைகளும் புலி ஊடகங்களும் ஓய்ந்தபாடாகவே இல்லை.
இன்னும் எத்தனை முள்ளிவாய்க்காலை காண்பதற்கு கங்கணம் கட்டி நிற்கிறார்களோ…..?
ஒரு சில நாட்களுக்கு முன்னர் புலம்பெயர் ஊடகம் ஒன்றில் இலங்கையின் சமகால அரசியல்நிலவரம் தொடர்பாக உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்திரு. இம்மானுவேல் அடிகளார் இலங்கையை போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நாம் அனைவரும் ஒற்றுமையாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து மாத கால அவகாசத்திற்குள் (அதாவது அடுத்த ஐ.நா. கூட்டத்தொடர் மார்ச் மாதம்) போராடவேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதற்கும் பொதுநலவாய அமைப்பு நாடுகளிலிருந்து இலங்கையை நீக்குவதற்கும் போராடவேண்டும் என்று புலம்பெயர் புண்ணாக்குகளுக்கு (மன்னிக்கவும்) உசுப்பேத்திக் கொண்டிருந்தார். இலங்கையில் பொருளாதார தடை விதிக்கப்பட்டால் அவ்வாறு தடைவிதிக்கப்பட்ட பொருட்களை வணபிதா வணங்கா மண்ணைப் போன்று கப்பல் ஒழுங்குபண்ணி அங்கு வாடும் தமிழ்மக்களுக்கு கொண்டு செல்வார் போலுள்ளது…..?
இந்த ஐந்து மாத காலப்பகுதிக்குள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ள நாடுகளுக்கு சென்று அவர்களது நிலைப்பாட்டைமாற்றுவதற்கு தன்னாலான பங்களிப்பை செய்ய உள்ளதாகவும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்புத்திஜீவிகள் அனைவரும் இவற்றிற்காக உழைக்கவேண்டும் என்றார். நாடு கடந்த அரசாங்கமும் உலகத்தமிழ் பேரவையும் ஒரே நோக்கம் கொண்டவையாம். ஆனால் வேறுபட்ட விதத்தில் பணிகளைக் கையாள்கின்றார்களாம். இந்த வித்தைகள் சாதாரண மக்களுக்கு விளங்கப்போவதில்லை. இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே இது வெளிச்சம்.
இன்றைய காலகட்டத்தில் தேசியநினைவெழுச்சி விழாவைக் கட்டாயம் கொண்டாடவேண்டும் என்றும் அதற்கான கஜானாக்கள் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது
கத்தோலிக்க மதகுருவான இவரது வார்த்தைகளை பலர் தெய்வவாக்காகவே கருதுகின்றார்களோ என்னவோ …..? இறைமகன் யேசுக்கிறீஸ்து சமாதானத் தூதனாக நல்லாயனாகவே இம் மண்ணி;ல் மனுமகனாக வாழ்ந்தார். இறைபணிக்கு தன்னை அர்ப்பணித்த வணபிதா முருகக்கடவுளான பிரபாகரனுக்கு சேவகம் செய்ய என்று ஆரம்பித்தாரோ அன்றே அவரது இறைபணிக்கு மாசுகற்பிக்கப்பட்டாயிற்று. இவர்கள் காட்டும் வித்தையில் இளையதலைமுறையினர் சிக்கிக் கொள்ளாதீர்கள். இதே பாணியில் நாடு கடந்த அரசாங்கப் பிரதிநிதிகளும் இலங்கைப் பொருட்களை புறக்கணியுங்கள். ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்….இப்படி ஓரே போராட்டம் தான் வழிமுறை. நாடு கடந்த அரசாங்கத்தைப் பராமரிக்க ஒரு வங்கிக்கணக்கு நிதியுதவி. இவை எல்லாம் எதற்காக. இதுவரை காலமும் புலம்பெயர் மக்கள் கொடுத்த பணத்தில் ஒரு முள்ளிவாய்க்கால் சோகத்தை தான் அவர்கள் கண்டார்கள்.இனியும் எதனைக் காணப் போகின்றார்களோ….? இலங்கையை பொருளாதார ரீதியாக ஆட்டம்காணச் செய்தால் விடுதலை தானாகவே வந்துவிடும் என்று நினைக்கின்றார்களோ வன்முறைகளைத் தாகமாகக் கொண்ட விடுதலைப் புலிகளுக்கு புலம்பெயர் நாடுகளில் உயிரூட்ட நினைக்கும் இந்தக் பேரவைகளும் குழுக்களும் நாடு கடந்த அரசாங்கங்களும்.
31 வயதான சராசந்திரன் 26 வயதிலேயே தனது இளமைக்காலத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டதன் பின்னர் அனுபவமாயும் அறிவுரையாயும் எழுதி கடிதத்தை வாசித்த பின்னராவது புலம்பெயர் தேசங்களில் புலிகளுக்கு உயிரூட்ட நினைப்பவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கின்றதோ இல்லையோ புலம்பெயர் தேசங்களில் வாழும் இளையதலைமுறையினராவது இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பார்கள்.
அறியாமையினால் தனது வாழ்க்கையை தொலைத்த சதாஜனன் சராச்சந்திரனின் சமூகஅக்கறையினால் தனக்கு நேர்ந்த அவலம் போன்று வேறெவருக்கும் அவலம் நேரக்கூடாது என்ற நன்னோக்கில் இளையோருக்காக அவர் வரைந்த கடிதத்தினால் குறைந்தது  ஓரிருவராவது தங்கள் போக்கில் மாற்றம் கொண்டு வருவார்களாயின் சராச்சந்திரன் தனது முயற்சி குறித்து மகிழ்ச்சி அடைவார்.
உலகத்தமிழ்ப் பேரவையின் தலைவரான அருட்திரு இம்மானுவேல் அடிகளார் தனது செல்வாக்கினைப் பாவித்து முதலில் சிறையிலிருக்கும் சதாச்சந்திரனை சந்தித்து ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதற்கோ அல்லது சிறைச்சாலை நிர்வாகத்தினரை சந்தித்து அவரது பெற்றோரைச் சந்திக்க வைப்பதற்கோ ஏற்பாடுகள் செய்வாரா?
(;சிறையில் இருப்பவர்களை சந்திக்கும்போது அங்கு நான் உங்களுடனிருக்கின்றேன் என்று யேசுநாதர் தனது போதனைகளில் குறிப்பிட்டுள்ளார்.)
சிறையில் கடந்த 3 வருடங்களாக தனது பெற்றோரையோ குடும்ப உறுப்பினர்களையோ சந்திக்க முடியாத நிலையில் இருப்பதாக மிகவும் மனவேதனைப்பட்டுள்ளார்.
வாழ்க்கையின் சுகந்தங்களை நுகரவேண்டிய காலகட்டத்தில் இவ்வாறான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள சகோதரன் சதாஜனன் சராச்சந்திரனுக்கு இவற்றைக் கடந்து வரக்கூடிய மனவலிமையை இறைவன் அவருக்கு அளிக்கவேண்டும். விரைவில் அவரை அவரது குடும்பத்தினர் பெற்றோர் சந்திக்கவேண்டிய வாய்ப்பும் கிட்டவேண்டும் என்று யாசிக்கின்றேன்.
- ஜே.எம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக