செவ்வாய், 11 அக்டோபர், 2011

சிதம்பரத்தின் புண்ணியத்தில் ஆ.ராசாவுக்கு ஒளி தெரிகிறது

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுடன், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நேரடி தொடர்பு எதுவும் கிடையாது. இருவருக்கும் இடையே நேரடி ஆலோசனைக் கூட்டம் ஏதும் நடைபெற்றதாக ஆதாரம் எதுவும் கிடையாது” என்று உச்ச நீதிமன்றத்தில் கூறி அதிர வைத்திருக்கின்றது மத்திய அரசு.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்துள்ள வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் விசாரித்த போதே, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சீனியர் லாயர் பி.பி.ராவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நடந்தவை அனைத்தும் ப.சிதம்பரத்துக்கு தெரிந்தே நடைபெற்றன. எனவே, அவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே, சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கின் சாராம்சம்.

தற்போதைய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த வழக்கில் இழுக்கப்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்பது ஒன்றும் ரகசியமல்ல. ஆனால் ப.சிதம்பரமும், சிறையில் அடைபட்டுள்ள முன்னாள அமைச்சர் ராசாவும் இதுபற்றிய எந்தக் கூட்டத்திலும் ஒன்றாகக் கலந்து கொள்ளவே இல்லை என்று ஒரே போடாகப் போட்டிருப்பதே, அதிர வைத்துள்ள திருப்பம்!
பிரதமர் முன்னிலையில், ப.சிதம்பரத்துடன் இதுபற்றி விவாதித்திருக்கின்றேன் என்று முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தனது வாக்குமூலத்தில் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
தற்போது ஏற்பட்டுள்ள திருப்பத்தில், ஒன்றில், ஆ.ராசா கூறுவது உண்மையாக இருக்க முடியும், அல்லது, மத்திய அரசின் வக்கீல் கூறுவது உண்மையாக இருக்க முடியும். இரண்டுமே ஒன்று சேர உண்மையாக இருக்க முடியாது.
இப்போது, மற்றொரு சிக்கல் ஏற்படப் போகின்றது.
மத்திய அரசின் கூற்றைக் கேட்ட பின்னரும், சிறையில் உள்ள ஆ.ராசா வையை மூடிக்கொண்டு கம்மென்று இருந்துவிட்டால், அவர்மீதுதான் குற்றம் முழுமையாக விழும். மத்திய அரசு வக்கீலின் கூற்றை ஆ.ராசா சேலஞ்ச் பண்ணினால் என்னாகும்? அதாவது, தான் முன்பு கூறியாடியே ப.சிதம்பரத்துக்கும் தனக்கும் இடையே இது தொடர்பான சந்திப்பு நடந்தது என்பதில் ராசா ஸ்டான்ட் பண்ணினால், என்னாகும்?
மத்திய அரசு தனது கூற்றை நிரூபிக்க முடியாது (நடக்காத ஒன்றை நடக்கவில்லை என்று நிரூபிக்க சட்டத்தில் இடமில்லை) ஆனால், ஆ.ராசா தனது கூற்றை நிரூபிக்க வேண்டியிருக்கும்.
ஆ.ராசாவின் கூற்றுப்படி, ப.சிதம்பரத்துடன் நடந்த சந்திப்பு பிரதமர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதாவது மூன்றே மூன்று பேர் சம்மந்தப்பட்ட விஷயம் இது. அதில் ஒருவர், சந்திப்பு நடந்தது என்றும், மற்றையவர் நடக்கவில்லை என்று கூறினால், இதில் சம்மந்தப்பட்ட மூன்றாவது நபரை கோர்ட்டுக்கு அழைத்து, அவர் என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும் என்கிறது சட்டம்.
அட, இதில் முன்றாவது நபராக பிரதமர் அல்லவா உள்ளார்!
ராசாவுக்கு தொலைவில் வெளிச்சப் புள்ளி ஒன்று தெரிகிறது! ராசா வாயைத் திறக்காமல் இருக்கச் சம்மதித்தால், வெளிச்சப் புள்ளி பெரிதாகலாம். விரைவில் அவர் திருச்சியில்  நடமாடுவதையும் காணலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக