ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தமிழ் மக்கள் இத்தனை அழிவுகளைச் சந்தித்தமைக்கு தமிழ் தலைவர்களின் உணர்ச்சி பேச்சு காரணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாவிரத, சத்தியாக்கிரக போராட்டங்களின் உள்நோக்கம் என்ன?

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழ்த் தலைவர்களால் பல தசாப்தங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டங்கள், சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தோல்வியுற்ற நிலையில் மீண்டும் அந்தப் போராட்ட வடிவங்களை தமிழ்க் கூட்டமைப்பு ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளதன் உள்நோக்கம் தான் என்னவென்று தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு உழைத்து வரும் புத்திஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழ் இனத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தமிழர் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியே தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள் காலி முகத்திடலில் 1956 இல் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தினர். அதன் பின்னர் நடத்தப்பட்ட சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பல்வேறு சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியுற்ற நிலையில் தானே இந்தத் தலைவர்களின் வீராவேசப் பேச்சுக்களால் இளைஞர்கள் ஆயுத வழியைத் தோற்றுவித்தனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாண மேடைகளில் இந்தத் தலைவர்களின் கனல் கக்கும் பேச்சுக்களால் உந்தப்பட்ட யாழ். இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் தீவிரம் காட்டியமை வரலாறு.

தமிழ் மக்கள் இத்தனை அழிவுகளைச் சந்தித்தமைக்கு இந்தத் தலைவர்களின் மறைமுக தரவும் உணர்ச்சி மயமான பேச்சுக்களுமே காரணம் என்பதை ஒவ்வொரு தமிழனும் இன்று நினைவு கூருகின்றான் எனவும் அவர்கள் கருத்து வெளியிடுகின்றனர். போராட்டங்களால் பயனில்லையென்று தெட்டத்தெளிவாகத் தெரிந்த பின்னர் மீண்டும் வவுனியாவில் ஒரு நாடகமா? தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள குத்து வெட்டுக்கள் ஒரே கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழிபறிப்புக்களை மறைப்பதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி வவுனியாவில் மேற்கொண்ட இந்த மேடை நாடகத்தின் மூலம் இவர்கள் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இழந்தது போதும் இனி இழப்பதற்கு எதுவுமேயில்லை இந்த நிலையில் காத்திரமான பேச்சுக்களை அரசுடன் நடத்த தமிழ் மக்களின் விடிவுக்கு உதவுவதே இவர்களின் தார்மீக பணியாகவிருக்க வேண்டுமென புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போராட்டங்களால் எதுவுமே சாதிக்க முடியாது என்ற யதார்த்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விட்டுக்கொடுப்புடனான நியாயமான பேச்சுவார்த்தையே ஒரே ஒரு வழி என்ற உண்மையை தமிழ்த் தலைமை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் நெகிழ்வுப் போக்கில் காத்திரமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். அதனூடாகத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் புத்திஜீவிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சில கோரிக்கைகளை முன்வைத்தும் அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வவுனியாவில் நடத்திய ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தொடர்பாகப் பலவிதமான கருத்துக்கள் மக்களிடையே எழுந்துள்ளன. மக்களிடையே திடீரெனச் சரிந்திருக்கும் தமது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பி தேர்தல் காலத்தில் மட்டுமல்ல எப்போதும் உங்களுடனேயே இருப்போம் என்பதைக் காட்டுவதற்காகவே குறிப்பாக இந்த உண்ணாவிரதப் போராட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதே மக்களது கருத்தாக உள்ளது.

உள்ளூரில் தமக்குச் சார்பாக தமிழ்த் தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு அதனையே எப்போதும் மையப்படுத்தி பக்கச்சார்பாக இயங்கும் சில ஊடகங்கள் மூலமாகவும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சில புலிகளின் விசுவாசிகளால் நடத்தப்படும் இணையத்தளங்கள் வாயிலாகவும் வீரவசனம் பேசி தமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இப்போது மக்களின் கேள்விக்கணைகளால் ஏதாவது செய்துகாட்ட வேண்டிய தேவை அவசியமாகவும், அவசரமாகவும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அவசர அவசரமாக இவர்கள் இந்த உண்ணாவிரதம் அஹிம்சை வழிப் போராட்டத்தை ஏற்பாடு செய்தனர். அத்துடன் முல்லைத்தீவில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தலும் வரப்போகின்றது. மக்களுடன் தாம் கலந்திருப்பதாகவும் காட்ட வேண்டும் என்பதுவும் அவர்களது இன்னுமொரு உள்நோக்கமும் ஆகும். சில பிரதான பத்திரிகைகளின் செய்தியாளர்களை விலைக்கு வாங்கித் தமது நாடகத்தை உலகறியச் செய்வதில் கூட்டமைப்பினர் முனைப்பாக உள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றி அதன் புகைப்படங்கள், வீடியோ பிரதிகளை அங்கு எடுத்துச் சென்று புலம்பெயர்ந்தவர்களிடம் நன்கு நிதி திரட்டுவதும், அமெரிக்க அரசிற்கு இங்கு நிலைமை வழமைக்குத் திரும்பவில்லை என்று காட்டுவதுமே இவர்களது மற்றுமொரு நோக்கமாகும்.

மாற்றுத் தெரிவு ஒன்று இல்லாத நிலையினாலேயே வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் இவர்கள் எதனைச் செய்தாலும் அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு ஆதரவு வழங்கும் நிலையில் உள்ளதாக புத்திஜீவிகள் பலரும் தெரிவித்துள்ளனர். இதுவே உண்மை, யதார்த்தம். புலிகள் இல்லாமல் போனதன் பின்னர் தமிழ் மக்கள் விட்ட பெரும் தவறு தமிழ்க் கூட்டமைப்பை மட்டுமே நம்பியமையாகும். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்வுகளும், அதனை மிகைப்படுத்தி வெளியிடப்பட்ட பிரசாரமும் தமிழ் மக்களின் மனங்களில் அரசாங்கம் தொடர்பாக ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கத்தை வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் உணர்த்தின. ஆனால் இது தவறு. உண்மையில் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களுக்காகப் பலவற்றைச் செய்து வருகிறது. தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கம் அரசிற்கு என்றுமே இருக்கவில்லை. புலிகளைக் கூட அழித்தொழிக்கும் எண்ணத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. அவர்களுடன் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தும் நடத்தி தீர்வு காண்பதில் ஆரம்பத்தில் அரசு முனைப்பாகவே இருந்தது. அதற்காகப் பல விட்டுக்கொடுப்புக்களைப் பொறுமையுடன் கையாண்டு வந்தது. ஆனால் புலிகள் பொறுமை இழக்க வைத்து தமது ஏமாற்று வித்தைகளை இந்த அரசுடனும் காட்ட முற்பட்ட போதே வேறு வழியின்றி புலிகளுடன் போரிட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. இதுவே உண்மையான வரலாறு,

அதன் பின்னர் அந்த யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிறையவே செய்துள்ளது. செய்தும் வருகிறது. இதனை அம்மக்கள் விளங்கிக் கொள்ளாமலிருப்பது வேதனை தருவதாகவே உள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு பிரதான காரணமாகும். புலிகள் இருந்தபோது அவர்களது வார்த்தைகளுக்கு நடனமாடியவர்கள் இன்று அவர்கள் இல்லையென்றதும் மக்களைப் பகடைக் காய்களாகப் பாவித்துத் தமது இருப்புக்களைப் பலப்படுத்துகின்றனர்.

இந்த உண்மை நிலைமையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இனியும் தமிழ்த் தேசியம் பற்றியும், போராட்டம் பற்றியும் பேசுவதில் அர்த்தமில்லை. இலங்கை சுதந்திரமடை ந்த காலத்திலிருந்தது போன்று ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் இணைந்து எமது பிரதேசங்களை கட்டியெழுப்புவதுடன், எமது அரசியல் அபிலாஷைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

இனியும் இதனைப் புரிந்து கொள் ளாவிடின் முப்பது வருடங்கள் நாம் இழந்ததைப் போன்று இன்னும் முன்னூறு வருடங்களுக்கு இழக்கவே நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக