திங்கள், 17 அக்டோபர், 2011

ஜெயலலிதா – கருணாநிதி மோதல் ஒரு செயற்கை கிளைமாக்ஸ்

உள்ளாட்சி தேர்தல் 2011: ஜெயலலிதாவின் செம சைக்காலஜிகல் அடி!

உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா திடீரென சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்ட காரணம், அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்பதற்காக என்பதுதான் அநேகருடைய நினைப்பு. அதுவும் ஒரு காரணம்தான். நாமும் அது பற்றி எழுதியிருந்தோம். ஆனால், அது மாத்திரம்தான் ஜெயலலிதாவின் திடீர் சுற்றுப் பயணத்துக்கு காரணம் அல்ல என்பது எமது ஊகம்.ஜெயலலிதாவின் திடீர் சூறாவளிப் பயணத்துக்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அந்தக் காரணம், விஜயகாந்த்!
தனது திடீர் பிரச்சாரத்தின் மூலம், ஜெயலலிதா என்ன செய்திருக்கிறார் என்றால், உள்ளாட்சி தேர்தல் களத்தில் போட்டியே, அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில்தான் என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது யாரைப் பாதிக்கிறதோ, இல்லையோ, விஜயகாந்தைப் பாதிக்கப் போகின்றது.

முதல்வரின் கடைசி கட்ட பிரசாரத்துக்கு முன், பிரச்சாரக் களத்தில் டாக்-ஆஃப்-த-டவுன் ஆக இருந்தது எதுவென்று யோசித்துப் பாருங்கள். விஜயகாந்தின் பிரச்சாரம்தான் எங்கும் பேசப்பட்டது. சினிமா பாணியிலான அவரது பேச்சுக்களும், குற்றச்சாட்டுகளும், கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் நன்றாகவே எடுபடக் கூடியவை.  நன்றாகவே எடுபட்டன.
விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவருமே ஊர் ஊராக செய்த பிரச்சாரம் நன்றாகவே ரீச் பண்ணத் தொடங்கிய விஷயத்தை, நிச்சயம் உளவுத்துறை முதல்வரின் காதில் போட்டிருக்கும்.
அந்தக் கட்டத்தில், போட்டியே அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையேதான் என்ற நிலை இறுதிக் கட்டத்தில் வரலாம் என்பது போன்ற சூழ்நிலை உருவாகத் தொடங்கியிருந்தது. இந்த நிலை லாங்-ரன்னில் அ.தி.மு.க.வுக்கு ஆபத்தானது என்பதை ஜெ. புரிந்து கொண்டிருக்கலாம்.
ஏற்கனவே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அடைந்து விட்டது தே.மு.தி.க. இம்முறை உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வெற்றியைப் பெற்றுவிட்டால், வரும் காலத்தில் ஜெயலலிதாவுக்கு அரசியலில் பிரதான எதிரியாக விஜயகாந்த் மாறிவிடுவார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, டில்லியிலும் தமிழகத்திலும் சிறைகளை நிரப்பிக் கொண்டுள்ள ஒரு கட்சியை (தி.மு.க.) பிரதான எதிரியாக வைத்திருப்பதே, அ.தி.மு.க.வுக்கு வசதியானது. தட்டி வைக்க சுலபமானதும்கூட.
ஆனால், எந்தக் காலத்திலும் பதவியில் இருந்திராத காரணத்தால் குற்றச்சாட்டுகள் எதிலும் சிக்காமல், ஊழல் விஷயத்தில் ‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை வைத்திருக்கும் ஒருவரது (விஜயகாந்த்) கட்சியை (தே.மு.தி.க) பிரதான எதிரியாக வளர விடுவது, அ.தி.மு.க.வுக்கு ஆபத்தானது. இதையும் புரிந்து கொண்டிருக்கலாம் ஜெயலலிதா.
இதனால்தான், ஜெயலலிதா தனது சூறாவளிப் பிரச்சாரத்தை தொடங்கியும் இருக்கலாம்.
அவர் செய்த பிரச்சாரத்தை நினைத்துப் பாருங்கள். மற்றெந்தக் கட்சியையும் தாக்காமல் தி.மு.க.வை மாத்திரம் குறி வைத்து அடித்துக் கொண்டிருந்தார். தனிப்பட்ட முறையில் கலைஞரை சீண்டினார். தனது பேச்சுகளுக்கு கலைஞர் பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தினார். (அறிவாலய நில விவகாரம்)
கலைஞர் பதில் சொல்ல, இவர் அதற்கு பதிலடி கொடுக்க, அவர் நிலப் பத்திரத்தை தூக்கிக் காட்ட.. இப்படி ஒரு செயின் ரியாக்ஷனாக போகத் தொடங்கியது விவகாரம்.
இது, மற்றைய போட்டியாளர்களை எல்லாம் பின்னே தள்ளிவிட்டு, களத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாத்திரமே நிற்கின்றன என்பது போன்ற ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் மனோதத்துவ ரீதியாக ஏற்படுத்தக் கூடியது. நடந்ததும் கிட்டத்தட்ட அதுதான்.
பிரச்சாரம் முடிவுக்கு வந்த தினத்தில், மாநிலம் முழுவதிலும் பரவலாக அடிபட்டுக் கொண்டிருந்த பேச்சே, ஜெயலலிதா – கருணாநிதி மோதல் பற்றித்தான். சுருக்கமாகச் சொன்னால், சைக்காலஜிக்கலாக ஒரு செயற்கை கிளைமாக்ஸ் உருவாக்கப்பட்டது.
இஸ்ரேலிலும், அமெரிக்காவிலும் இந்தப் பாணியிலான அரசியல் மிகப் பிரபலம். அங்கெல்லாம், தேர்தல் சமயத்தில் சூழ்நிலைக்கு ஏற்றால்போல ஏதாவது ஒரு பிரச்சினையை செயற்கையாக கிளப்பி விடுவார்கள். (லெபனானுக்கு மூன்றாவது நாடு ஊடாக அமெரிக்கா ஆயுதம் கொடுப்பது, அல்லது, இஸ்ரேலிய உளவாளிகள் அமெரிக்காவுக்குள் அகப்படுவது போல சென்சிட்டிவ்வான விஷயம்)
இந்த செயற்கை கிளைமாக்ஸ் பற்றி ஏதுமறியாத கட்சி ஒன்று அதில் சிக்கி சின்னாபின்னமாகப் போய்விடும். அக்ஸெப்டிங் ரேட்டிங் பத்து புள்ளிகளாவது சரியும்.
இது ஒரு சாதுரியமான வியூகம். மேலை நாடுகளில் இதுபோன்ற ஆலோசனைகளைச் சொல்ல ஒரு அரசியல் ஆலோசனைக் குழுவையே வைத்திருப்பார்கள். கைதேர்ந்த பாலிட்டிக்கல் ஸ்ரஜடி பிளானிங் நிபுணர்கள் நிலைமைக்கு ஏற்ப இப்படியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பார்கள்.
இதை தமிழகத்தில் எத்தனை பேர் புரிந்து கொண்டார்களோ, இல்லையோ தெரியாது. ஜெயலலிதாவுக்கு இது பற்றிய ஆலோசனை யாரால் கொடுக்கப்பட்டது என்பதும் தெரியாது. உண்மையிலேயே அவர் திட்டமிட்டுத்தான் செய்தாரா, அல்லது காகம் உட்கார பனம் பழம் விழுந்த கதையா என்பதுகூட தெரியாது. (அப்படியென்றால், அது பியூர் லக்)
தெரிந்தது எல்லாம், பிரச்சாரம் முடியும் உச்சக் கட்டத்தில், போட்டி அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில்தான் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மூன்றில் இருந்து நான்கு நாட்கள்வரை இந்த பிரமை தாக்குப் பிடிக்கும். அதற்குள் வாக்களிப்பு நடந்து முடிந்துவிடும்.
தே.மு.தி.க. எத்தனை இடங்களில் ஜெயிக்கிறதோ இல்லையோ வேறு விஷயம். நாம் சொல்ல வருவதெல்லாம், அவர்களுக்கு விழுந்திருக்க வேண்டிய ஊசலாடும் ஓட்டுக்களில் (ஸ்விங் வோட்ஸ்) கணிசமான எண்ணிக்கை, ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட லேட்டஸ்ட் பரபரப்புக்கு ஏற்ப, திசை மாறிப் போய்விடும்.
அதுதான், வாக்காளர்களை டிஸ்ட்ராக்ட் செய்யும் மனோதத்துவம். இது வேலை செய்யுமா? நிச்சயம் தேர்தல் முடிவுகள் காட்டத்தான் போகின்றன, இருந்து பாருங்கள்.

• படித்தது, பிடித்திருக்கிறதா? நண்பர்களிடம் “விறுவிறுப்பு.காம்” பற்றி கூறுங்களேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக