திங்கள், 31 அக்டோபர், 2011

காப்பாற்றக் கோரி ரங்கநாதன் தெரு வியாபாரிகள் முதல்வரிடம் மனு!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கையிலிருந்து தங்களது கடைகளைக் காப்பாற்றக் கோரியும், இந்த விவகாரத்தில் தலையிடக் கோரியும் ரங்கநாதன் தெரு வியாபாரிகள் நலச் சங்கத்தினர் இன்று முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், காதிம்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைகள், சென்னை சில்க்ஸ், பாண்டி பஜாரில் உள்ள ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் 3 கடைகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கடைகளை இன்று சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து விட்டனர்.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கடைகளை இடித்துத் தள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் பெரும் பீதியடைந்துள்ளனர். ரங்கநாதன் தெருவில் உள்ள அத்தனை கடைகளையும் இன்று வியாபாரிகள் மூடி விட்டனர்.
இந்த நிலையில் ரங்கநாதன் தெரு வியாபாரிகள் நலச் சங்கத்தினர் அதன் தலைவர் சித்திரைப்பாண்டியன் தலைமையில் இன்று தலைமைச் செயலகம் விரைந்தனர். அங்குள்ள முதல்வர் தனிப் பிரிவுக்குச் சென்ற அவர்கள் அங்குள்ள சிறப்பு அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றைத் தந்தனர்.

அதில் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு நிவாரணம் தேடித் தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக