திங்கள், 31 அக்டோபர், 2011

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: தடை செய்ய காமன்வெல்த் நாடுகள் உறுதி!

பெர்த்/ஆஸ்திரேலியா, அக். 30: பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதென காமன்வெல்த் நாடுகள் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை இன்று உறுதி மேற்கொண்டன.
பயங்கரவாதச் செயலுக்கு தங்கள் நாடுகளைப் பயன்படுத்த விடாமல் தடுப்பது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி சென்று சேராமல் தடுப்பது ஆகியவற்றின் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதென காமன்வெல்த் நாடுகள் உறுதி எடுத்துக்கொண்டன.கடற்கொள்ளைக்கு எதிரான முயற்சிகளை விரைவுபடுத்தவும் இந்தியக் கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் காமன்வெல்த் நாடுகள் ஒப்புக்கொண்டன.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் கூறப்பட்டிருப்பது:
பயங்கரவாதிகளின் செயல்கள் மற்றும் அவர்களுக்கான ஆதரவுக்கு தங்கள் நாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது என உறுதி மேற்கொண்டுள்ளோம்.
பயங்கரவாதிகளுக்குக் கிடைத்து வரும் நிதி ஆதாரத்தை ஒடுக்கவும், நிதியுதவியைப் பெறுவது அவற்றைப் பயன்படுத்துவது ஆகியவற்றைத் தடுக்கவும் தேவையான சட்ட அணுகுமுறையை அமல்படுத்த அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரிவான மாநாடு நடத்துவது பற்றி பேச்சு நடத்த வேண்டும்.

சர்வதேச பாதுகாப்பு பற்றி விவாதித்தபோது அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கடற்கொள்ளை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. சோமாலியாவில் அரசியல் நிலைத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் கடற்கொள்ளையை முழுமையாகத் தடுக்க முடியாது. பாதுகாப்பான நிலையான தேசிய சர்வதேசிய சூழலை உருவாக்குவதில் தங்களுக்குள்ள கடமையை உறுப்பு நாடுகள் வெளிப்படுத்தின.

காமன்வெல்த் அமைப்பில் உள்ள 54 நாடுகளின் தலைவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இம்மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக