ஞாயிறு, 30 அக்டோபர், 2011

அஜித் சிங்கால் அழகிரியின் துறைக்கு ஆபத்தா?

உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. அதற்காக அஜித் சிங்குடன் கூட்டணி சேர முடிவெடுத்துள்ளதால், அவரை மத்திய அமைச்சரவைக்குள் கொண்டு வர வேண்டிய நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குளிர்கால கூட்டத்தொடருக்கு முன், அமைச்சரவை விரிவாக்கம் சிறிய அளவில் இருக்கலாம். விவசாயம் சம்பந்தப்பட்ட இலாகாவை அஜித் சிங் குறி வைப்பதால், தி.மு.க.,வின் உர இலாகாவின் மீது கைவைக்கப்படுமோ என்ற புதிய பரபரப்பு எழுந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எப்படியும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் குறியாக உள்ளது. குறிப்பாக, ராகுலின் எதிர்கால அரசியலை இந்த சட்டசபைத் தேர்தல் நிர்ணயிக்கலாம் என்பதால், ஒட்டு மொத்த கட்சியும் தீவிரமாக உள்ளது. அதற்காக இப்போதே கூட்டணி வைப்பது, தொகுதிகளை பங்கீடு செய்வது உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளது.முதல் கட்டமாக, உ.பி., மாநில அரசியலில் முக்கிய இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரான அஜித் சிங்கை வளைத்துள்ளது. ராஷ்டிரிய லோக்தளம் கட்சி மற்றும் விவசாயிகளின் தலைவராக உள்ள அஜித் சிங், அம்மாநிலத்தில் ஜாட் இனத் தலைவர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுவதால், அவரை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், குறிப்பிடத்தக்க லாபம் இருக்கும் என்று நம்புகிறது. தவிர, ஜாட் இனத்தவர்கள் ஓட்டு போடும் கட்சிக்கே, முஸ்லிம்களும் பெரும்பாலும் ஓட்டு போடுவதாக அம்மாநில அரசியலில் நம்பிக்கை உள்ளது.

மொத்தமுள்ள 405 இடங்களில், மேற்கு உத்தர பிரதேச எல்லைக்குள் 200 இடங்கள் வருகின்றன. இந்த தொகுதிகளில் எல்லாம், முஸ்லிம்களின் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் அஜித் சிங் கூட்டணி வைத்தார். அவர் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால், பா.ஜ., வுக்கோ ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.இந்த சூழ்நிலையில், இப்போது சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பக்கம் அஜித் சிங் சாய்ந்துள்ளார். அவருக்கு ஏறத்தாழ 45 இடங்கள் வரை அளிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஆனாலும் மேலும் ஐந்து இடங்களை அளிக்க வேண்டுமென அஜித் சிங் கேட்கிறார். மற்றபடி கூட்டணி இறுதியாகி விட்டது. இவ்வாறு காங்கிரஸ் கூட்டணிக்குள் அஜித் சிங் வருவதால், மத்திய அரசியலிலும் மாற்றம் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவியையும், அஜித் சிங்கிற்கு அளிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. அஜித் சிங்கோ, தனக்கு வேண்டப்பட்ட இலாகா வேண்டுமென கேட்கிறார். விவசாயிகளின் தலைவராக இருப்பதால், விவசாய இலாகாவை அளிக்க வேண்டுமென கேட்கிறார். ஆனால் சரத் பவார், அந்த இலாகாவை விட்டுத் தர மறுத்துவிட்டார். விவசாயத் துறை இல்லையெனில், உணவு மற்றும் சிவில் சப்ளை இலாகாவாவது வேண்டும் எனக் கேட்டாலும் அதற்கும் பிரச்னை இருக்கிறது.அதாவது உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தற்போது முனைப்பாக இருந்து வருகிறது. இந்த சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமெனில், அந்த இலாகா தன் வசம் இருக்க வேண்டுமென காங்கிரஸ் கருதுகிறது. எனவே, அஜித் சிங்கிற்கு இதையும் தர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான், தி.மு.க.,வைச் சேர்ந்த அழகிரி வசம் இருக்கும் உரத்துறை மீது, பார்வை திரும்பியுள்ளது. பல மாதங்களாகவே காங்கிரசுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையில் உறவு சரியாக இல்லை.  இந்த சூழ்நிலையில், புதிதாக கூட்டணிக்கு வந்து சேர்ந்த அஜித் சிங்கிற்கு, அழகிரியிடம் இருக்கும் உரத்துறையை எடுத்து அளித்தால் என்ன என்ற ரீதியில் பிரதமரின் எண்ண ஓட்டம் இருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் இந்த எண்ணத்திற்கு, காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் வழங்க வேண்டுமென்ற நிலையும் உள்ளது. எனவே, அழகிரியின் இலாகாவுக்கு அத்தனை சுலபத்தில் ஆபத்து வந்திடாது. ஆனாலும், விவசாயம் சம்பந்தப்பட்ட துறை தான் அஜித் சிங்கிற்கு அளித்தாக வேண்டுமென்ற நிர்பந்தம் ஏற்பட்டால், அழகிரியின் இலாகா பறிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

காலியிடங்களை நிரப்புவது யார், யார்?
மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே தி.மு.க.,வுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த இடங்களோடு சேர்த்து, தற்போது அழகிரியின் இலாகாவுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை உருவானால், நிச்சயம் தி.மு.க.,வை சங்கடப்படுத்தவே செய்யும். இதை சமாளிப்பதற்காகவே சிறிய அளவில் அமைச்சரவை விரிவாக்கத்தை செய்து, அதில் தி.மு.க.,வின் காலியிடங்களையும் நிரப்புவதற்கு உண்டான சமாதான முயற்சிகள் ஆரம்பமாகலாம் என, கூறப்படுகிறது. அந்த காலியிடங்களில் யார் யார் நிரப்பப்படுவர் என்ற பரபரப்பு லேசாக கிளம்பவும் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக