வெள்ளி, 14 அக்டோபர், 2011

சூரியசக்தி – ஃப்ரிட்ஜுடன் பறக்கும் குளவி


ஒரு பன்னாட்டுக் கம்பெனி இருக்கிறது. பெயரைச் சொல்லக் கூடாது; அவர்களுக்கு இங்கேயும் அலுவலகம் உள்ளது. பூமியின் மண்டைஓடு முழுவதும் துளைபோட்டு எண்ணெயை உறிஞ்சிப் புகைவிட்டு நம் சுற்றுச்சூழலை நாசமாக்குவதில் நம்பர் ஒன் கம்பெனி அது. அவர்களின் இணையத்தளத்துக்குப் போய்ப் பார்த்தேன் – பச்சைப் பசுமை. கார்ட்டூன் மரங்கள், ஃப்ளாஷில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும் பறவைகள் என்று கிளி கொஞ்சுகிறது!
இது மட்டுமல்ல; இப்போதெல்லாம் பெரும்பாலான மகா எனர்ஜி கம்பெனிகளின் இணையப் பக்கங்களையும் வழவழா பத்திரிகை விளம்பரங்களையும் பார்த்தால் ஒரே பச்சையாக இருக்கிறது. க்ரீன் எனர்ஜியாம். விடுகிற கார்பனையும் விட்டுவிட்டு, வெப் சைட்டுக்குப் பச்சை நிறம் பூசி ஏமாற்றுவது ஒரு மனோதத்துவ ஏமாற்று வேலை.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு தாவா செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு ஓரத்தில் சூரிய சக்தியையும் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்கிறார்கள்.
சக்தியைச் சேதமாக்காமல் சிக்கனமாக உபயோகிக்கும் தொழில்நுட்பத்திலும் இறங்கியுள்ளார்கள். உலகம் முழுவதும் சக்திச் சிக்கனம் – எனர்ஜி எஃபிஷியன்ஸி என்பது ஒரு தனிப்பட்ட தொழிலாகவே ஆகிக்கொண்டு இருக்கிறது. இன்றைக்கு இதில் முனைப்பாக இருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள், செவ்ரான் போன்ற பழம் பெருச்சாளிகள்தான்.
புகை கக்கும் தொழில்நுட்பங்களை விட்டால் அடுத்து இருப்பது அணு சக்தி. ஆனால் கூடங்குளமோ கூடாது என்கிறார்கள். மூன்று மைல் தீவு முதல் செர்னோபில் வரை, அணு சக்திப் பரீட்சையில் நாம் இதுவரை முட்டை வாங்கினதுதான் அதிகம். ஃபுகுஷிமா அணு உலை கரைந்தபோது ஜப்பானிய ஹைடெக் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. ஹாலிவுட் படங்களில் வருவதுபோல் சிவலிங்கம் சிவலிங்கமாக ரோபோட்களின் ஒரு படையே கிளம்பிப்போகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மனிதர்கள்தான் கந்தல் துணியும் விளக்குமாறும் எடுத்துக்கொண்டு போய், துடைத்து துடைத்து பக்கெட்டில் பிழிந்து அத்தனை கலீஜையும் சுத்தம் செய்தார்கள். உண்மையான கதாநாயகர்கள் அவர்களே.
மாற்று சக்தி தேடும் மனிதன், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறான். நம் மூக்கருகே ஒரு சாதனத்தைப் பிடித்து மூச்சுக் காற்றிலிருந்துகூட மின்சாரம் தயாரிக்கலாமா என்று பார்க்கிறார்கள். சிரிக்காதீர்கள், சீரியஸ்! மனிதன் விடும் மூச்சுக் காற்றை ஒரு மெல்லிய படலத்தின் மீது செலுத்தி பீஸோ எலெக்ட்ரிக் விளைவு மூலம் மின்சாரமாக்கலாம். இப்படி மூச்சுவிட்டே ஒரு பல்பை எரிய வைக்க சூர்ப்பனகை மூக்காலும் முடியாது; ஆனால் பேஸ் மேக்கர் போன்று உடலோடு ஒன்றான குட்டி மின் சாதனங்களை இயக்க இது போதும்.
கூடிய சீக்கிரம் கரிக்கும் எண்ணெய்க்கும் மாற்று எரிபொருள் தேடிக்கொள்ளாவிட்டால் இந்த கிரகத்தில் வசிக்க முடியாமல் போய்விடும் என்பது மனிதனுக்கு மெல்ல உரைக்க ஆரம்பித்திருக்கிறது. நல்லதுதான். ஆனால் சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற டெக்னாலஜிகளில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன: ஒன்று, செயல் திறன் எனப்படுகிற efficiency. இரண்டாவது, கைப்பற்றிய சக்தியை சேமிக்கும் பாட்டரி தொழில்நுட்பம்.
சூரிய சக்தி புதிதல்ல; சின்ன வயதில் நானும் என் தம்பியும் லென்ஸ் வைத்து வெயிலைக் குவித்து ஒரு கட்டெறும்பை வறுத்துக் கொன்ற பாவம், சித்ரகுப்தனின் டேட்டா பேஸில் நிச்சயம் ஏறியிருக்கும். இதேபோல் கடற்கரையில் பெரிய கண்ணாடிகளை வைத்து கலீலியோ எதிரிக் கப்பல்களை தீப்பிடிக்க வைத்தார் என்று ஒரு கதை உண்டு. (சமீபத்தில் பொம்மைக் கப்பலை வைத்து இதைத் திரும்பச் செய்து பார்க்க முயன்றார்கள். ஊது வத்தி போல் கொஞ்சம் புகை வந்ததோடு சரி.) 16ம் நூற்றாண்டு அரேபியாவில் சூரிய சக்தியால் கடல் நீரைக் காய்ச்சிக் குடித்திருக்கிறார்கள்.
ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் எல்லாம் சூரிய சக்தியை உறிஞ்சுவதில் முன்னணியில் இருக்கிறார்கள். உலகின் பத்து பெரிய சோலார் பானல் நிறுவனங்களில் ஐந்து இருப்பது – நீங்கள் ஊகித்தது சரி – சீனாவில். அமெரிக்க எரிசக்தித் துறை அடுத்த 10 வருடத்தில் வீடுகளிலும் நிறுவனங்களிலும் ஒரு கோடி சூரிய சக்தி சிஸ்டம்களை நிறுவப் போகிறது. நாற்பதாயிரம் மெகா வாட்.
இதற்காக க்ரீன் ஜாப்ஸ் என்று கமிட்டி போட்டு விவாதிக்கிறார்கள்: ‘அமெரிக்கா சோலார் உத்தியோகங்களை இழந்துகொண்டு இருக்கிறது. இது அடாது.’ அதாவது, அமெரிக்கா கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை உபயோகித்து மற்ற நாடுகள் சூரிய மின்கலங்களை நிறுவி அங்கெல்லாம் இதற்கான வேலை வாய்ப்பு அதிகரித்துவிட்டது. இப்போது நாம் திக்விஜயம் புறப்பட்டு  அதையெல்லாம் திரும்பக் கைப்பற்றிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்கள்.
சூரியன் ஓர் அதிபயங்கர நெருப்புப் பந்து. அதிலிருந்து ஒரு வருடத்துக்குப் பூமியை அடையும் சக்தி 12,000,000 மெகா வாட்-மணிக்கும் அதிகம். இது நாம் பெட்ரோல், கரி, மின்சாரம் என்று எல்லா வகையிலும் எரிக்கும் சக்தியைவிட அதிகம்.
சூரியனின் கதிர் வீச்சை அளப்பதற்கு அண்ணா சமாதி முன்னால் இருக்கும் கொம்பு மாதிரி ஒரு விஞ்ஞானக் கருவி பார்த்தேன். பைர்ஹீலியா மீட்டர் என்று பெயர் சொன்னார்கள். சூரியனுக்கு செங்குத்தாக ஒரு சதுர மீட்டர் பலகையைப் பிடித்தால் அதைத் தாக்கும் சக்தி 1361 வாட். சோலார் கான்ஸ்டன்ட் என்பார்கள். இதை மட்டும் அதிக சேதாரமில்லாமல் லவட்ட முடிந்தால் இன்னும் பல தலைமுறைக்குக் கவலை இல்லை. அதற்குள் நாம் பூமியைக் குதறிப் போட்டுவிட்டு எங்காவது செவ்வாய் கிரகத்துக்கு ஓடிப் போய்விடலாம்.
சோலாரின் செலவு நாட்டுக்கு நாடு வேறுபடும். இரண்டு விதங்களில் வெயிலைப் பிடிக்கலாம்: சோலார் செல் தொழில்நுட்பம், வெயில் சூட்டில் நேரடியாகத் தண்ணீரைக் காய்ச்சுவது. தின் ஃபிலிம் என்னும் (தமிழில் சன்னப் படலம்?) தொழில் நுட்பத்தில் சிலிக்கான் வறுவல் மீது ரசாயனப் புகை போட்டு, கம்ப்யூட்டர் சில்லு போலவே தயாரிக்கிறார்கள். சமீபத்தில் சன் பவர் கார்ப்பரேஷன் இதில் ஒரு முக்கியப் புரட்சி செய்திருக்கிறது. அவர்களின் பி.வி. சூரிய செல்லின் செயல் திறன் 23.4 விழுக்காடு. இது உலக சாதனை. ஆராய்ச்சி சாலைகளில் சின்ன அளவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்று நினைக்கப்பட்டு வந்தது. இதுவும் போதாது என்கிறார் அப்துல் கலாம்.
‘சோலார் தெர்மல் ஸ்டோரேஜ்’ என்றால் வாய் நிறைய இருக்கிறது. இதற்காக லட்சக்கணக்கில் செலவுசெய்து மொட்டைமாடியில் ப்ளாண்ட் கட்டுவது வெள்ளைக்காரத்தனமான அணுகுமுறை. இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப எப்படி இதே கருத்தை சுலபமாக்கியிருக்கிறார்கள் பாருங்கள்: குப்பங்களில் சுத்தமான குடிதண்ணீர் கிடைப்பது அரிது. நீர் வழி நோய்கள் பரவுகின்றன. தண்ணீரை சுத்தம் செய்ய அவர்களிடம் யுரேகா ஃபோர்ப்ஸும் இல்லை, காய்ச்சிக் குடிக்க அடுப்புக்கும் செலவாகும். சில தொண்டு நிறுவனங்கள் இதற்கு ஒரு புத்திசாலித்தனமான சுருக்கு வழியைப் பிரசாரம் செய்கிறார்கள்: ப்ளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரை நிரப்பிக் கூரைமீது நாள்முழுவதும் வெயிலில் வைத்தால் போதும். ராத்திரி உபயோகிக்கக் குளிர்ந்த நீர் தயார். சூரியனில் இல்லாத அல்ட்ரா வயலட்டா?
கடந்த நூறு வருடமாக நாம் அளவுக்கு மீறி ஹைட்ரோ கார்பனை எரித்து மரத்தை வெட்டி பூமியில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறோம். இது ரொம்ப நாள் தாங்காது என்று கவலைப்பட்ட சிலர் ‘பூஜ்ஜிய சக்தி’ கட்டடங்கள் கட்டிக்கொண்டு வசிக்கிறார்கள். அதாவது, தான் உபயோகிக்கும் மின்சாரத்தைத் தானே தயாரித்துக் கொள்ளும் கட்டடங்கள் இவை. விஞ்ஞான வாஸ்துப்படி கட்டப்பட்ட இந்த வீடுகளில் சுவர், கூரை முழுவதும் சன்ன சூரியப் படலத்தைப் போர்த்தியும் மொட்டை மாடியில் காற்றாலை அமைத்தும் காசைக் கரியாக அடிக்கிறார்கள். BIPV என்று கட்டடத்தின் ஒரு பகுதியாகவே அமைக்கப்பட்ட சூரியப் பலகைக் கண்ணாடிகள் பிரபலமாகிக்கொண்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் குறைந்த மின்சாரம் குடிக்கும் எல்.ஈ.டி விளக்குகள், வெந்நீர் போட சூரியன், இயற்கையான காற்றோட்டம் புகுந்து புறப்பட வசதியான ஜன்னல்கள். சுவர், கூரையில் பதிக்கப்பட்ட கண்ணாடி ஒளி இழைகள் என்று இனிஷியல் வைத்த ராஜாக்களுக்கு மட்டுமே கட்டுப்படி ஆகும் வீடுகள் அவை.
தங்களுக்குப் போக மின்சக்தி மீதி இருந்தால் பக்கத்து வீட்டுக்கும் இரவல் கொடுக்க முடியும்.
ஆனால் இதற்கு வேண்டிய தொழில்நுட்பம் இப்போதுதான் துளிர் விட்டிருக்கிறது. இணையத்தில் செய்திகளை அனுப்புவதுபோல் மின்சக்தியையும் பொட்டலம் கட்டி அட்ரஸ் குறித்து அனுப்புவதற்கு அதே மாதிரி நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம் தேவை. ஐபிஎம் போன்ற கம்பெனிகளும் இதில் ஆர்வமாக இறங்கியிருக்கிறார்கள். நம் வீட்டின் மின்சார மீட்டர் முதல் மேட்டூர் ஜெனரேட்டர் வரை எல்லாவற்றுக்கும் சில்லு பதித்து, புத்திசாலித்தனம் ஏற்றி அவற்றை முதலில் நெட்வொர்க்கில் இணைக்கவேண்டும். பிறகு யார் எவ்வளவு மின்சாரம் கொடுத்தார், எடுத்தார் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.
வீட்டைக் கட்டும்போதே இயற்கையான வெளிச்சத்தையும் காற்றையும் உபயோகிக்குமாறு டிசைன் செய்வதும் அதிகரித்திருக்கிறது. சோலார் சிம்னி என்ற அமைப்பு, சூரிய சக்தியால் காற்றை சூடாக்கி ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் மாதிரி மேலே இழுக்கக் கூடியது. வீடு குளிர்ச்சியாகிவிடும். எங்கள் ராஜகோபால ஸ்வாமி கோவிலின் கருங்கல் மண்டபம் சித்திரை வெயிலிலும் குளு குளு என்று இருந்ததும் அந்த வௌவால் மணமும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
நவீன மேற்கத்திய ஆர்க்கிடெக்டுகள் சொலேரியம், சன் ரூம், க்ரீன் ஹவுஸ் என்றெல்லாம் அமைத்து சூரிய வெளிச்சத்தை உள் வாங்கும் வீடு கட்ட சொல்லித் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் தத்துவத்தைப் பார்த்தால், முற்றம் வைத்துக் கட்டிய நம் கிராமத்து ஓட்டு வீடுகளைத்தான் மில்லியன் டாலருக்குத் திரும்பக் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
ஒரு நாளில் ஒரு நகரத்தின் மின் தேவை கூடும், குறையும். மின்சாரம் கிடைக்கும்போது ஒட்டகம் மாதிரி சேமித்து வைத்துக்கொண்டு, தட்டுப்பாடான நேரங்களில் குடி மக்கள் மின் வாரியத்துக்குத் திருப்பித் தரலாம். கூடிய விரைவில் ‘க்ரிட் பாரிட்டி’ வரப் போகிறது என்கிறார்கள். அதாவது, கலிபோர்னியா,  ஜப்பான், இந்தியா போன்று சூரிய ஒளி அபரிமிதமாகக் கிடைக்கும் இடங்களில், சோலார் தொழில் நுட்பம் ஒரு சின்ன எவ்வு எவ்வினால் போதும்; மின் வாரியம் கொடுக்கும் அதே விலையில் வீட்டிலேயே மின்சாரம் தயாரிக்க முடியும். அதன் பிறகு ஆற்காட்டில் வசிப்பவர்களுக்கும் கவலையில்லை!
மின் சேமிப்புக் கலங்களின் தொழில் நுட்பம்தான் இன்னும் சவலைக் குழந்தையாகவே உள்ளது.
வோல்ட்டா, லெக்லான்ஷே போன்ற விஞ்ஞானிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கண்ணாடிக் குடுவைகளில் அமிலம் நிரப்பி பாட்டரி தயாரித்தார்கள். இந்தத் தொழில்நுட்பத்தில் அவர்களைவிட நாம் அதிகம் முன்னேறவில்லை என்று தோன்றுகிறது. எங்கள் வீட்டு இன்வர்ட்டர் வாங்கின புதிதில் நாலு லைட், இரண்டு விசிறியைச் சுற்றியது. மூன்று வருடம் கூட ஆகவில்லை; இருபது நிமிடத்தில் மண்டையைப் போட்டுவிடுகிறது. இன்வர்ட்டர் விற்றவர் அன்றைக்குச் சொன்ன இனிய பொய்களில் ஒன்றுகூட உண்மையில்லை.
என்னுடைய மடிக்கணினி அதைவிட வயிற்றெரிச்சல். இத்தனைக்கும் முன்னேறிய லித்தியம் அயான் பாட்டரியாம். ஹம்பக்! இதனிடையில் 1500 ரூபாய்க்கு ஐபேட் கொடுக்கிறேன் என்று கபில் சிபல் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார். இந்த ஏழைகளின் ஐபேட் பல்லிளிக்கப் போவது அதன் பாட்டரி பிரச்சினையால்தான். i-யோ பாவம்!
மின் சக்தியை பாட்டரிகளில் சேமிக்க வேண்டாம் என்றால் பகல் நேரத்தில் தண்ணீரை உயரத் தொட்டிகளில் ஏற்றி, ராத்திரியில் திறந்துவிட்டு டைனமோவைச் சுழற்றலாம். காற்றை அழுத்தி டாங்க்குகளில் அடைத்து, பிறகு அதே காற்றை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம். காந்தப் படுகையில் மிதக்கும் ஃப்ளைவீல் ஒன்றைக் கிறுகிறுவென்று சுற்றி அதில்கூட சக்தியைச் சேமிக்கிறோம் என்று நாசாவில் என்னவோ கூத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நானோ டெக்னாலஜியில் செய்த கரிக் குழல்கள், தாமிரக் கம்பிகள் இவையும் சூரிய செல்களை முன்னேற்ற முடியும். ‘மின்சக்தியை சேமிக்க ஃப்ளோ பாட்டரி,  ஃப்யூவல் செல் என்றெல்லாம் கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறோம்; இப்போதைக்கு விலை மட்டும்தான் பிரச்சினை, இலையிலேயே உட்கார்ந்திருங்கள்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவர்கள் எப்போது சமைத்து, எப்போது நாம் சாப்பிடுவது?
சூரிய சக்தியினாலும் சுற்றுச்சூழல் கெடுகிறது என்று ஒரு கருத்து உண்டு. அதாவது, சோலார் பானல்களை நிறுவுவதற்குத் தேவைப்படும் நிலப்பரப்பு, மற்ற மின் ஆலைகளைவிட மிக அதிகம். அந்த ஏக்கர்களில் பயிர் விளைவிக்காமல் போவதன் ‘ஆப்பர்சுனிட்டி காஸ்ட்’ என்ற கை நழுவிப்போன வாய்ப்புகளையும் சேர்த்துக் கணக்குப் போடுகிறார்கள். இப்படிப் பார்த்தால் ஜப்பான் போன்ற கோவணக் கரை நாடுகளுக்குச் செலவு மிகுந்துவிடும். ஆனால் எகிப்தில் 90 சதவிகித நிலம் காலியாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குக் கட்டுப்படி ஆகும். நம் ஊரிலும் அரசியல்வாதிகள் பெரிய மனது செய்து புறம்போக்குகளைத் திருப்பித் தந்தால் சூரிய பகவான் ஆசீர்வதிப்பார்.
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கைக்கு அருகில்கூட நம்மால் வரமுடியவில்லை. சூரிய ஒளியில் இருந்து சக்தி தயாரிப்பது செடி கொடிகளுக்குக் கை வந்த கலை. இதை எப்படியாவது நாமும் செய்ய முடியுமா என்று விஞ்ஞானிகள் போராடி வந்திருக்கிறார்கள். முடியவில்லை. ஆனால் ஒரு சின்னப் பூச்சி அநாயாசமாக ஒளிச்சேர்க்கை மூலம் தனக்கு வேண்டிய சக்தியை எடுத்துக் கொள்கிறது: குளவி.  மற்ற பூச்சிகள் எல்லாம் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக இரையும் இணையும் தேட, குளவி மட்டும் நல்ல வெயில் புறப்பட்ட பிறகுதான் வெளியே வரும். சோம்பேறிப் பூச்சி என்று நினைத்தேன். உண்மையில் குளவியின் அடி வயிறு பூராவும் சின்னச் சின்ன ஃபோட்டோ செல்கள்தான். நல்ல வெயிலில் அதற்கு உற்சாகம் கிளம்பிவிடுகிறது.
குளவியின் பழுப்பு-மஞ்சள் பட்டைகளில் இருக்கிறது சூட்சுமம். பழுப்பு வரிகள் சூரிய ஒளியை வகிர்ந்து கொடுக்க, மஞ்சளில் உள்ள நிறமிகள் அதை மின்சார சக்தியாக மாற்றுகின்றன. ஆடித் திரியும்போது தன் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள, அதனிடம் ஒரு திறன் வாய்ந்த உஷ்ண பம்ப் அமைப்பும் இருக்கிறது. குளவியே பறக்கும் ஒரு சின்ன ஃப்ரிட்ஜ் என்று சொல்லலாம். குளவிக்கு மட்டும் மானிட குணங்கள் இருந்தால், தன்னிடம் இருக்கும் தொழில்நுட்பங்களுக்கு பேடண்ட் வாங்கி எல்லோர் மேலும் வழக்குப் போட்டு, நாடு நாடாக இழுக்கடித்து நாலைந்து பில்லியன் சம்பாதித்திருக்கும்.
இலைகளில் உள்ள பச்சையம், சூரிய சக்தியைப் பிடித்து சில ப்ரோட்டின்களுக்குக் கொடுக்கிறது. அங்கே சர்க்கரையும் ஆக்ஸிஜனும் தயாராகின்றன. நம்மாலும் வண்ணச் சாயங்களை உபயோகித்து சூரியனைப் பிடிக்க முடியும்; நமக்கும் வேதியியல் மூலக் கூறுகளைக் கொண்டு சக்தி தயாரிக்கத் தெரியும். ஆனால் பிடித்த வெளிச்சம் அந்தக் கணத்திலேயே காணாமல் போய்விடுகிறது. ஒரு நொடியில் நூறு கோடியில் ஒரு பகுதி நேரம் கூடத் தங்குவதில்லை; அதுதான் பிரச்சினையே.
உங்களுக்கு எல்கேஜி படிக்கும் குழந்தைகள் இருந்தால் இப்போதே அவர்களிடம் சொல்லி வையுங்கள். ஒருநாள் அவர்கள்தான் இதற்கு தீர்வு காணப் போகிறார்கள்.
- ராமன் ராஜா
www.tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக