வெள்ளி, 14 அக்டோபர், 2011

சட்டவிரோத ஆயுதங்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை ஜனாதிபதி அறிவிப்பு!

பிரபுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொலிஸ் உத்தி யோகத்தர்கள் சீருடையில் இருக்கிறார்களா? அவர்களி டம் உத்தியோகபூர்வமாக கொடுக்கப்பட்ட ஆயுதங் கள் மாத்திரம் இருக்கின்றனவா? என்பது பற்றிய சோதனைகள் ஆரம்பமாகியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுடனும், ஊடகங்களின் செய்திப் பிரிவின் பொறுப்பதிகாரிகளுடனும் நேற்று நடத்திய கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட இருவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த போதிலும் அவர்களை கைது செய்து, அரசாங்கம் புலன் விசாரணைகளை நடத்தவிருக்கிறதென்றும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பந்தப் பட்டவர்களின் தராதரம் பாராமல் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று முதல் பாதுகாப்பு அமைச்சு கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் உள்ள சட்டவிரோதமான துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் கைப்பற்றும் பணியை ஆரம்பித்திருக்கிறது என்றும், இதன் மூலம் நாட்டில் உள்ள சட்டவிரோதமான அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் அனைத்துமே பறிமுதல் செய்யப்படும்.

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அரசியல்வாதிகளின் மெய்க்காப்பாளர்களாக இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுடன் 10 முதல் 15 வருடகாலம் தொடர்ந்தும் சிவில் உடையில் சேவை செய்வதை நான் நன்கு அறிவேன் என்று தெரிவித்த ஜனாதிபதி, இவ்விதம் ஒரு அரசியல்வாதியிடம் நீண்டகாலம் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சேவையாற்றும் போது, அவர் தன்னுடைய நடுநிலைமையை இழந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொன்னார்.

அரசியல்வாதிகளிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வமாக சிவில் உடையில் கடமையாற்றும் அதே வேளையில், தனிப்பட்ட மெய்க்காவலர்களும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போது, ஏற்படக்கூடிய ஆபத்துகளை முல்லேரியா சம்பவம் எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது என்று தெரிவித்த ஜனாதிபதி, இனிமேல் பிரபுக்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டுமென்ற விதி தீவிரமாக அமுலாக்கப்படுகிறது என்றும், இதனை மீறி நடக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பொலிஸார் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்றும் அனைவரும் சிவில் உடையில் இருக்கும் போது யார் உண்மையான பொலிஸ் காரர்கள், யார் தனிப்பட்ட பாதுகாவலர்கள் என்று அடையாளம் காண முடியாது இருக்குமென்றும், இதனால் பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.

வெள்ளை சூட்டும், கோட்டும் அணிந்து கனவான்களைப் போல் இருக்கும் பாதாள கோஷ்டியினர் இன்று அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகி அவர்களின் ஆதரவாளர்களாகவும், மெய்க்காப்பாளர்களாகவும் மாறியிருப்பதனால், அரசியலில் இன்று வன்முறை கலாசாரம் இணைந்து கொண்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, அதனை விளக்குவதற்காக கடந்த காலத்தில் தான் பெற்ற அனுபவத்தை மிகவும் ஹாஷ்யமான முறையில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு விளக்கிக் கூறினார்.

ஒரு அரசியல்வாதி செல்வச் செருக்கோடு புகழ் உச்சியில் இருக்கும் போது அவரிடம் பலரும், பாதாள உலகக் கோஷ்டியினரும் இணைந்து கொள்வார்கள். அதே அரசியல்வாதி பிரச்சினையை சந்திக்கும் போது, அவரிடம் நெருங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகிவிடுவார்கள். இன்னுமொருசாரார் இவர்கள் இருவரையும் விட மாறுபட்டவர்கள்.

ஒரு அரசியல்வாதிக்கு பிரச்சினை ஏற்படும் போது அவர்கள் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற உணர்வுடன் களிப்படைவார்கள். இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் என்று ஜனாதிபதி கூறினார். தேர்தல்கள் அன்று நடந்தபோது ஒரு தொகுதியில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் ஒவ்வொரு வேட்பாளரை நியமித்து போட்டியிட்டன. அதனால் அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டன. சில மோதல்கள் அபாயகரமாகவும் மாறின.

ஆனால், இன்று அமுலில் இருக்கும் விருப்பு வாக்களிப்பு முறை ஒரே கட்சியில் போட்டியிடும் பல வேட்பாளர்களுக்கிடையில் வன்முறைகளை தோற்றுவித்துள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்த போது, அங்கிருந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் தேர்தல் முறையை மாற்றுவோம் என்று அரசாங்கம் அறிவித்திருந்ததே, அதற்கு என்ன நடக்கிறது என்று கேட்டார்? பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இனப்பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் என்னவென்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவே ஒரு சிறந்த சாதனமாக அமைந்துள்ளது.

அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல அரசியல் கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டையும் தீர்வுகளையும் முன்வைத்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு விரைவில் நியமிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைக்க வேண்டுமென்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இந்திய மீனவர்கள் வந்து இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடிக்கிறார்கள் என்று ஆசிரியர் ஒருவர் கேட்டபோது, இது விடயத்தை இந்தியாவுடன் கூட்டு ஆணைக்குழு மூலம் சமரசமாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்கள் மீது அரசு பாகுபாடு காட்டாது

கொழும்பு மாநகர சபை உட்பட நாட்டின் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரத்தை எதிர்க்கட்சியொன்று கைப்பற்றியிருந்தால் கூட அரசாங்கம் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் எவ்வித பாகுபாட்டையும் காண்பிக்காமல் நிதி உதவிகளை செய்யும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவர்கள் தங்களால் நகரத்தை அபிவிருத்தி செய்ய முடியுமென்று சொன்னால் அவர்கள் அவ்விதம் செய்யலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொம்பே பொலிஸ் நிலையத்தை தாக்கியவர்கள் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதனால் சடுதியாக ஏற்பட்ட ஆத்திரத்திற்காக அவ்விதம் செய்யவில்லை. இந்தத் தாக்குதல் எஸ்.எம்.எஸ். குறுஞ் செய்திகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி திட்டமிட்ட முறையில் களனி, கம்பஹா போன்ற வெளியிடங்களில் இருந்துவந்த கசிப்புக்காரர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று எனக்கு இப்போது ஆதாரபூர்வமாக தகவல்கள் என்று கிடைத்துள்ளன ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தொம்பே பொலிஸ் நிலையத்தை தாக்கிய அனைவருக்கும் எதிராக அரசாங்கத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எவருக்கும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. அதே நேரத்தில் பொலிஸாருக்கும் தாங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்பவர்களை அடித்து கொலை செய்வதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக